
திமுகவில் உள்ளவர்களை தொடர்ந்து தவெக அரசு குறிவைத்து வரும் நோக்கில், அவர்களின் வீடுகளில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சோதனை நடத்தி வருவதாக திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இது திமுகவில் உள்ளவர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீப நாட்களாகவே திமுகவில் உள்ள எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை குறிவைக்கும் நோக்கில் லஞ்ச ஒழிப்புத் துறையின் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருவதாக திமுகவினர் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன்னதாக நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஒப்பந்த ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக, செப்டம்பர் 5ஆம் தேதி திமுக எம்எல்ஏ கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. குறிப்பாக, சுமார் ரூ.1,020 கோடி அளவிலான டெண்டர் முறைகேடுகள் மற்றும் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக கூறி, இந்த சோதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தனியார் பள்ளி அங்கீகாரம் மற்றும் தரம் உயர்த்த அனுமதி வழங்கியதில் ரூ.100 கோடிக்கும் அதிகமான பணம் மோசடி மற்றும் லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 16ஆம் தேதி சோதனை செய்தனர்.
அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 18 மொபைல் போன்கள், லேப்டாப்கள், டேப்லெட்டுகள், கணினிகள் மற்றும் பென் டிரைவ்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு தொடர்ந்து தவெக அரசு திமுகவில் உள்ளவர்களை குறிவைத்து சோதனை நடத்துவதாக திமுகவினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி திமுக எம்பி அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் உள்ள அண்ணாதுரை வீட்டில் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக எம்பி அண்ணாதுரை சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சோதனை திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தம் எடுத்து அண்ணாதுரை பல்வேறு பணிகளை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு தொடர்ந்து திமுகவைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டு வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தற்போது அண்ணாதுரை என தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்து யார் வீட்டில் சோதனை? தவெக அரசின் அடுத்த டார்கெட் யார்? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. இது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.