“E20 பெட்ரோல் வேண்டவே வேண்டாம்..” இந்தியாவின் முகத்திற்கு நேராக நோ சொன்ன பூடான்.. என்ன காரணம்? | Why neighbor nation Bhutan Rejected India E20 Petrol Offer Amid Growing Ethanol Fuel Debate

Spread the love

International

oi-Vigneshkumar

திம்பு: இந்தியாவில் 20 சதவீத எத்தனால் கலந்த E20 பெட்ரோல் பயன்பாடு படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வரும் நிலையில், அண்டை நாடான பூடான் இந்த கலப்பு பெட்ரோலை வாங்க மறுத்துள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் E20 பெட்ரோலை வழங்க முன்வந்த போதிலும், அதை ஏற்க மறுத்துள்ள பூட்டான், தனக்கு வழக்கமான பெட்ரோலையே தொடர்ந்து வழங்குமாறு பூடான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பது, புவி மாசுபடுவதைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மத்திய அரசு E20 பெட்ரோலை கொண்டு வந்துள்ளது. 2030ம் ஆண்டுக்குள் E20 பெட்ரோல் என்ற இலக்கை இந்தியா 5 ஆண்டுகளுக்கு முன்பே எட்டிவிட்டது. இதை மத்திய அரசு முக்கியமான சாதனையாகச் சொல்லி வருகிறது.

Bhutan India E20 Petrol

மறுக்கும் பூடான்

அதேநேரம் ஒரு தரப்பினர் E20 பெட்ரோல் காரணமாக மைலேஜ் குறைவு தொடங்கி பல பாதிப்புகள் ஏற்படுவதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்பதே மத்திய அரசின் பதிலாக இருக்கிறது. இதற்கிடையே இந்தியாவில் இருந்து E20 பெட்ரோல் நமது அண்டை நாடான பூடான் வாங்க மறுத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. அதேநேரம் இந்த முடிவுக்கு பின்னால் தொழில்நுட்பம் மற்றும் புவியியல் சார்ந்த முக்கிய காரணங்கள் இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

E20 என்பது 20 சதவீத எத்தனால் மற்றும் 80 சதவீத பெட்ரோல் கலந்த எரிபொருள். முன்பே குறிப்பிட்டது போல கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பது, சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது மற்றும் கரும்பு உள்ளிட்ட விவசாயப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் பயன்பாட்டை அதிகரிப்பது ஆகிய நோக்கங்களுக்காக இந்திய அரசு E20 பெட்ரோலை ஊக்குவித்து வருகிறது.

ஆனால், குறிப்பாக 2023-க்கு முன்பு தயாரிக்கப்பட்ட பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்தும் பலர், E20 பெட்ரோலை பயன்படுத்திய பிறகு மைலேஜ் குறைவது, பராமரிப்பு செலவு அதிகரிப்பது மற்றும் இன்ஜின் செயல்திறனில் மாற்றம் ஏற்படுவது போன்ற புகார்களை முன்வைத்து வருகின்றனர்.

காரணம் என்ன

பூடான் தனது எரிபொருள் தேவையை முழுமையாக இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்கிறது. இருப்பினும், E20 பெட்ரோலை ஏற்க அந்நாடு மறுத்ததுள்ளது. ஆனால், E20 பெட்ரோல் பிரச்சினைக்குரியது என்பதால் அவர்கள் ஏற்க மறுக்கவில்லை. மாறாக பூடானில் இருக்கும் பழைய எரிபொருள் சேமிப்பு மையங்களே இதற்குக் காரணம். பூடானில் பெரும்பாலான பெட்ரோல் சேமிப்பு தொட்டிகள் நிலத்தடியில் அமைந்துள்ளன. அவை பல ஆண்டுகள் பழமையானவை என்பதால், மழைநீர் அல்லது ஈரப்பதம் தொட்டிக்குள் கசிந்து செல்லும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சிக்கல்

சாதாரண பெட்ரோலுடன் ஒப்பிடும்போது, எத்தனால் கலந்த E20 பெட்ரோல் காற்றில் உள்ள ஈரப்பதத்தை எளிதில் உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால், சேமிப்பு தொட்டிக்குள் சிறிதளவு தண்ணீர் புகுந்தால், எத்தனால் அந்த தண்ணீரை உறிஞ்சி எரிபொருளின் தரத்தைப் பாதிக்கும். இதனால் எரிபொருள் நீர்த்துப் போகலாம். மேலும், அந்த தண்ணீரை எரிபொருளில் இருந்து எளிதாக பிரிக்க முடியாது. மேலும், இதனால் இரும்பு தொட்டிகள் மற்றும் குழாய்களில் துருப்பிடித்தல் ஏற்படும் சிக்கலும் உள்ளது.

பூடானின் பெரும்பாலான பகுதிகள் மலை பகுதிகள் தான் இருக்கும். அங்கு வாகனங்கள் செங்குத்தான சாலைகளில் பயணிக்க வேண்டியிருப்பதால், அதிக சக்தி கொண்ட எரிபொருள் தேவைப்படுகிறது. E20 பெட்ரோல் அத்தகைய சூழலில் தேவையான செயல்திறனைத் தொடர்ந்து வழங்குமா என்பது குறித்தும் அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

கோரிக்கை

எதிர்காலத்தில் இந்தியா E25 கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தால் அல்லது எத்தனால் கலப்பு இல்லாத தூய பெட்ரோல் விற்பனையை நிறுத்த திட்டமிட்டிருந்தால்.. அது பற்றி முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கவும் தொட்டிகளை வழங்கவும் இந்திய எண்ணெய் நிறுவனங்களிடம் பூடான் கோரிக்கை விடுத்துள்ளது.

E25 பெட்ரோல்

இதற்கிடையே, மத்திய அரசு E25 பெட்ரோலுக்கான சோதனைகளையும் தொடங்கியுள்ளது. மேலும், E20 பெட்ரோலின் விளைவுகள் குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எரிபொருள் கொள்கையை அனைத்து நாடுகளுக்கும் ஒரே மாதிரியாக அமல்படுத்த முடியாது என்பதையே பூடானின் இந்த முடிவு காட்டுகிறது. ஒவ்வொரு நாட்டின் புவியியல் அமைப்பு, காலநிலை, எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் மற்றும் வாகனப் பயன்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டே எரிபொருள் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *