தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர்கள் – இளைஞர்களின் போராட்டம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தாண்டி, தேசிய அளவிலான கல்விக் கொள்கை விவாதமாக மாறி வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடங்கிய இந்தப் போராட்டத்தில், தற்போது “நீட் தேர்வே தேவையில்லை” என்ற முழக்கமும் ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கியிருப்பதாக காங்கிரஸ் எம்பியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தமிழ்நாடு பல ஆண்டுகளாக முன்வைத்து வரும் நீட் எதிர்ப்பு நிலைப்பாடு, டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்தின் அடுத்தகட்ட அரசியல் கோரிக்கையாக உருவெடுத்து வருவதாக அவர் கூறினார்.
“தமிழ்நாட்டின் நீட் எதிர்ப்பு நிலைப்பாடு தேசிய விவாதமாக மாறும்”
டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டம் குறித்து பேசிய மாணிக்கம் தாகூர், “நீட் தேர்வு வேண்டாம் என்பதில் தமிழ்நாடும், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உறுதியாக இருக்கிறோம். நீட் வினாத்தாள் கசிவு, அதனைத் தொடர்ந்து மாணவர்களிடையே ஏற்பட்ட அதிருப்தி, தற்கொலை சம்பவங்கள் ஆகியவை இந்தப் போராட்டத்திற்கு முக்கிய காரணங்களாக இருந்தாலும், தற்போது ‘நீட் தேர்வே தேவையில்லை’ என்ற கருத்தும் மாணவர்கள் மத்தியில் வலுப்பெறத் தொடங்கியுள்ளது,” என்றார்.
அவர் மேலும் கூறுகையில்,“தமிழ்நாடு பல ஆண்டுகளாக சொல்லி வரும் கருத்தையே டெல்லி மாணவர்கள் இன்று விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது இன்னும் முழுமையான கோரிக்கையாக மாறவில்லை. ஆனால் அந்த திசையை நோக்கித்தான் மாணவர் இயக்கம் நகர்கிறது,” என்றார்.
“பாடத்திட்ட வேறுபாடு காரணமாக கோரிக்கை இன்னும் முழுமையாக எழவில்லை”
வடஇந்திய மாநிலங்களிலும், தமிழ்நாட்டிலும் உள்ள கல்வி முறை வேறுபாடே தற்போது கோரிக்கைகளில் இருக்கும் வித்தியாசத்திற்கு காரணம் என அவர் விளக்கினார்… “தமிழ்நாட்டின் பாடத்திட்டம், தேர்வு முறை, கல்வி அமைப்பு ஆகியவை வடஇந்திய மாநிலங்களிலிருந்து மாறுபட்டவை. அதனால்தான் தமிழ்நாட்டில் எழுந்த அளவுக்கு ‘நீட் வேண்டாம்’ என்ற முழக்கம் அங்கே இன்னும் வலுவாக ஒலிக்கவில்லை. ஆனால் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஒன்றே என்பதால், விரைவில் அந்த நிலையும் மாறும்,” என்று அவர் கூறினார்.

“நீட் குறித்து ராகுல் காந்தி இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து பேசி வருகிறார்”
மாணவர் போராட்டத்தை காங்கிரஸ் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த முயல்கிறது என்ற ஆம் ஆத்மி கட்சியின் விமர்சனத்தை மாணிக்கம் தாகூர் திட்டவட்டமாக மறுத்தார்.
“நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு, கல்வி அமைப்பில் உள்ள பிரச்சினைகள் குறித்து ராகுல் காந்தி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் தொடர்ந்து பேசி வருகிறார். அவரது நாடாளுமன்ற உரைகளைப் பார்த்தாலே அது தெரியும். எனவே, இன்று மாணவர்களின் போராட்டத்தை காங்கிரஸ் அபகரிக்க முயற்சிக்கிறது என்று கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சியே,” என்றார்.
தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், “அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள் ஆம் ஆத்மியினர்தான். இன்று அவர்கள் காங்கிரஸை விமர்சிப்பது முரண்பாடானது. பஞ்சாப் அரசியல் காரணங்களுக்காக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்னையை சிறுபிள்ளைத்தனமாக அணுகுவது சரியல்ல,” என்று விமர்சித்தார்.
“Thank You Rahul… டெல்லி சுவர்களே சாட்சி”
மாணவர் போராட்டத்தில் ராகுல் காந்தியின் பங்களிப்பு குறித்து பேசிய மாணிக்கம் தாகூர், “ராகுல் காந்தி மாணவர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அதனை மாணவர்களும் வரவேற்கிறார்கள். அதனால்தான் ஜந்தர் மந்தர் செல்லும் சாலைகளில் உள்ள சுவர்களில் ‘Thank You Rahul’ என்று மாணவர்கள் எழுதியுள்ளனர். அவர்களின் ஆதரவை இது வெளிப்படுத்துகிறது,” என்றார்.
மேலும், “இது போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை ராகுல் காந்தி போன்ற தேசிய தலைவர்கள் பேசும்போதுதான் மத்திய அரசின் மீது அழுத்தம் உருவாகும்,” என்றார்.
“தமிழகத்தில் முதல்வர் விஜய் பேசுவது போல… தேசிய அளவில் ராகுல் காந்தி”
தேசிய அரசியலில் ராகுல் காந்தியின் தாக்கம் குறித்து பேசும்போது மாணிக்கம் தாகூர் ஒப்பீட்டையும் முன்வைத்தார். “தமிழகத்தில் ஒரு முக்கியமான விவகாரத்தை முதலமைச்சர் விஜய் பேசும்போது அது தேசிய கவனத்தைப் பெறுகிறது. அதேபோல தேசிய அளவில் ராகுல் காந்தி பேசும் போது அந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதமாகிறது. மாணவர்களின் பிரச்சினையிலும் அதுதான் நடந்திருக்கிறது,” என்றார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்திய அவர், “நீட் விவகாரத்திற்கு அரசியல் பொறுப்பேற்க வேண்டியது மத்திய கல்வி அமைச்சர்தான். அவர் பதவி விலகாமல் இந்த விவகாரம் முடிவுக்கு வராது. அதுவரை நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதை ஏற்க முடியாது என்பதே எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு,” என்றார்.

நீட் விவகாரம்… மாணவர் போராட்டம்… தேசிய அரசியல்!
ஜந்தர் மந்தரில் தொடங்கிய மாணவர் போராட்டம் ஆரம்பத்தில் வினாத்தாள் கசிவு குறித்து இருந்தாலும், தற்போது கல்வி அமைப்பு, தேர்வு முறை, நீட் தேர்வின் அவசியம் உள்ளிட்ட பரந்த விவாதங்களாக விரிவடைந்து வருகிறது. தமிழ்நாடு பல ஆண்டுகளாக முன்வைத்து வரும் “நீட் தேர்வே தேவையில்லை” என்ற அரசியல் நிலைப்பாடு, டெல்லி மாணவர் போராட்டத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியிருப்பதாக மாணிக்கம் தாகூர் கூறுவது, இந்த விவாதம் அடுத்த கட்டத்தில் தேசிய அளவில் மேலும் தீவிரமடையக்கூடும் என்பதற்கான அரசியல் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையும், மாணவர்களின் போராட்டமும், நாடாளுமன்ற முடக்கமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளதால், நீட் விவகாரம் வரும் நாட்களிலும் தேசிய அரசியலின் மைய விவாதமாக தொடரும் சூழல் உருவாகியுள்ளது.