EXCLUSIVE: ‘ஜனநாயகன்’ ரீமேக் சர்ச்சை முதல் பட லீக் விவகாரம் வரை – இயக்குநர் H. வினோத் விளக்கம்! – Kumudam

Spread the love

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என பல்வேறு விமர்சனங்களையும் ஒப்பீடுகளையும் எதிர்கொண்ட நிலையில், இதுகுறித்து பேசிய இயக்குநர் H. வினோத், ஒரு படத்தை ரீமேக் செய்யும்போது பிடித்த அம்சங்களை வைத்துக்கொண்டு, மாற்றம் செய்யக்கூடிய இடங்களில் கதைக்கேற்ற வகையில் மாற்றங்களை செய்வதே தங்களது நோக்கம் என தெரிவித்துள்ளார்.

மேலும், படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிக்கான செட் குறித்து, ட்ரெய்லர் காட்சிகளை மட்டும் வைத்து அது முழுமையான பிரதியாக உருவாக்கப்பட்டதாக கூறுவது தவறு என்றும், கதையின் மையத்தை மாற்றியிருந்தாலும் சில அடையாள அம்சங்களை வைத்திருக்க வேண்டிய தேவை இருந்ததாகவும் அவர் விளக்கினார். விமர்சனங்கள் வரும் என்பதற்காக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், கதைக்கு தேவையான அம்சங்களையே பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

காஸ்டிங் குறித்து H. வினோத்

படத்தின் நடிகர்கள் தேர்வு குறித்துப் பேசிய அவர், ஆரம்பத்திலேயே சில முக்கிய கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் உறுதி செய்யப்பட்டதாக கூறினார். மமிதா பைஜுவை தேர்வு செய்வதில் பெரிய குழப்பம் எதுவும் இல்லை என்றும், அவரது தோற்றமும் திரைநிகழ்வும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்ததால் அவர் தேர்வு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

வில்லன் கதாபாத்திரத்திற்காக பல நடிகர்களை அணுகிய பின்னர் பாபி தியோல் தேர்வு செய்யப்பட்டதாகவும், அவர் எதிர்பார்த்ததை விட தீவிரமான நடிப்பை வழங்கியதாகவும் பாராட்டினார். பிரகாஷ் ராஜ் அல்லது சத்யராஜ் ஆகியோரில் யாராவது ஒருவர் நடிக்கலாம் என முதலில் கருதியதாகவும், தேதிகள் மற்றும் தயாரிப்பு சூழ்நிலை காரணமாக இறுதியில் பிரகாஷ் ராஜ் படத்தில் இணைந்ததாகவும் தெரிவித்தார்.

சிறிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்குக் கூட விஜய்யுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்துடன் பலர் வந்ததாகவும், முடிந்தவரை அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற முயன்றதாகவும் H. வினோத் கூறினார்.

500 கோடி ப்ரீ-பிசினஸ் பேச்சுகள் குறித்து பதில்

படத்தின் டிக்கெட் விலை மற்றும் வெளியீட்டுக்கு முன் பேசப்பட்டதாக கூறப்படும் ரூ.500 கோடி ப்ரீ-பிசினஸ் போன்ற தகவல்கள் தன்னை பாதிக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இவ்வாறான எண்கள் உண்மையா என்பதே முதலில் தெரியாது எனக் கூறினார். இன்றைய சூழலில் கண்களால் காண்பதும், காதால் கேட்பதும் கூட உறுதியான உண்மை எனக் கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பட லீக் விவகாரம்

ஜனநாயகன் திரைப்படம் லீக் ஆன சம்பவம் குறித்தும் H. வினோத் பேசியுள்ளார். இது திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் அல்ல என்றும், சினிமாவில் இருப்பவர் தானாக முன்வந்து இவ்வாறு செய்யமாட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.

போலீஸ் விசாரணை தொடர்பான தகவல்களின் அடிப்படையில், விஜய் படத்தை முன்கூட்டியே பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக திருட்டுத்தனமாகவும் தற்செயலாகவும் லீக் ஏற்பட்டிருக்கலாம் என கூறினார். இந்த விவகாரத்தில் எடிட்டர் பிரதீப் கடும் மனஅழுத்தத்தில் இருந்ததாகவும், அவர் தவறு செய்யவில்லை என்பதில் படக்குழுவினருக்கு நம்பிக்கையும் ஆதாரங்களும் இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து படத்தின் பாதுகாப்பு நடைமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட்டதாகவும் கூறினார்.

படத்தின் ஸ்டில்கள் குறித்து விளக்கம்

விஜய் முதல்வராக ஆன பிறகு வெளியானது போல் தோன்றிய இரண்டு ஸ்டில்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. அவை எடிட்டர் மற்றும் அசிஸ்டன்ட் எடிட்டர் குழுவின் யோசனையில் உருவானவை என்றும், சட்டசபை காட்சிகள் சமீபத்திய சம்பவங்களுக்குப் பிறகு படமாக்கப்பட்டவை அல்ல என்றும் H. வினோத் தெளிவுபடுத்தினார். அந்த காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டவை என்றும், கதாபாத்திரத்தின் தோற்றத் தொடர்ச்சியே இதற்கு சாட்சி என்றும் அவர் கூறினார்.

48 செட்கள் அமைத்ததில் நேரமே மிகப்பெரிய சவால்

ஜனநாயகன் படத்திற்காக ஒரே லொகேஷனில் 48 செட்கள் அமைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இதன் மிகப்பெரிய சவால் நேர வரம்புதான் என H. வினோத் தெரிவித்துள்ளார். பண வரம்பு பெரிய தடையாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

48 செட்களும் தனித்தனியாக உருவாக்கப்பட்ட மிகப்பெரிய அமைப்புகள் அல்ல என்றும், சில முக்கிய செட்களை பல்வேறு வடிவங்களில் மறுபயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டதாகவும் விளக்கினார்.

ஃப்ரேமில் தெரியாத மூலைகளிலும் குறை இருக்கக் கூடாது என்பதில் இயக்குநர் அதிக கவனம் செலுத்தியதாகவும், இறுதி காட்சியில் தெரியாத சிறிய விவரங்களுக்குக் கூட நேரம் செலவிட்டதாகவும் அவர் கூறினார். செட் போலியாகத் தெரியாமல் உண்மையான இடம் போன்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இதற்கான காரணம் என்றும் தெரிவித்தார்.

கமர்ஷியல் திரைப்படங்களில் நேர அழுத்தம், தொழில்நுட்ப அட்டவணை மற்றும் செலவு ஆகியவற்றுக்குள் பணியாற்ற வேண்டிய சூழல் இருப்பதால், ஒவ்வொரு காட்சியிலும் துல்லியத்தைப் பேணுவது சவாலானதாக இருக்கும் என்றும் H. வினோத் தெரிவித்துள்ளார்.

முழு நேர்காணலை காண: https://www.youtube.com/watch?v=am2htoqQ4No

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *