காவிரி நதிநீர் பிரச்னை என்பது தமிழ்நாடு – கர்நாடகா இடையேயான நீண்டகால நதிநீர் பங்கீட்டு தகராறாக மட்டுமல்லாமல், இரு மாநிலங்களின் அரசியல், விவசாயம், கூட்டாட்சி உறவு மற்றும் நீதித்துறை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய மிகவும் உணர்வுப்பூர்வமான விவகாரமாக இருந்து வருகிறது. இந்தப் பிரச்சினையின் மையமாக கடந்த சில ஆண்டுகளாக உருவெடுத்திருப்பதே மேகதாது அணைத் திட்டம்.
கர்நாடக அரசு, பெங்களூரு மாநகரின் எதிர்கால குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், வெள்ளக் காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் நீரைச் சேமிப்பதற்கும் இந்தத் திட்டம் அவசியம் என வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாடு இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் காவிரி நீரின் இயல்பான ஓட்டம் பாதிக்கப்பட்டு, டெல்டா மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
இதனால், மேகதாது அணை விவகாரம் இன்று இரு மாநிலங்களுக்கும் இடையிலான மிக முக்கியமான அரசியல் மற்றும் சட்டப் போராட்டமாக மாறியுள்ளது.
இந்தச் சூழலில், தமிழ்நாடு முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமாரை நேரில் சந்தித்து மேகதாது விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
இதுவரை தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானங்கள், மத்திய அரசுக்கு கடிதங்கள், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் எதிர்ப்புகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் ஆகிய வழிமுறைகளை மட்டுமே பெரிதும் பயன்படுத்தி வந்த நிலையில், இரு மாநில முதல்வர்களும் நேருக்கு நேர் சந்தித்து பேசும் முயற்சி புதிய அரசியல் அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தச் சந்திப்பு உண்மையில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளது.