ஒரு எக்சிட் போல் என்பது ஏதோ சிலரிடம் கருத்து கேட்பது மட்டுமல்ல. அதன் பின்னால் ஒரு விரிவான செயல்முறை உள்ளது. அதன் முக்கிய நிலைகள்…
> தொகுதிகளைத் தேர்ந்தெடுத்தல்
ஒரு நாட்டின் அல்லது ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பை ஒரு சிறிய மாதிரியில் கொண்டுவருவதே இதன் முதல் சவால். இதற்காக, `சீரற்ற மாதிரி தேர்வு’ (Stratified Random Sampling) முறை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், நகரம் மற்றும் கிராமப்புற விகிதம், சாதி மற்றும் மதப் பிரதிநிதித்துவம், கடந்த தேர்தல் வரலாறு மற்றும் புவியியல் பரவல் (வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு) என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய தொகுதிகள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
> வாக்குச்சாவடிகளைத் தேர்ந்தெடுத்தல்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு தொகுதிக்குள்ளும், குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளை ‘முறைசார் சீரற்ற மாதிரி தேர்வு’ (Systematic Random Sampling) மூலம் தேர்வு செய்வார்கள். இதிலும் கிராமம்/நகரம், சாதி அமைப்பு, கடந்த வாக்குப்பதிவு சதவீதம் போன்ற அளவுகோல்கள் கருத்தில் கொள்ளப்படும்.
> வாக்காளர்களை அணுகுதல்
வாக்குச்சாவடியிலிருந்து வெளியேறும் ஒவ்வொருவரையும் ஆய்வாளர்கள் அணுகுவதில்லை. ஒருதலைபட்சமான முடிவுகளைத் தவிர்க்க, வெளியேறும் ஒவ்வொரு மூன்றாவது அல்லது ஐந்தாவது வாக்காளரை மட்டும் (k-th person method) அணுகுவார்கள். இதன் மூலம், ஒரு குறிப்பிட்ட குழுவாக வருபவர்களின் கருத்துக்கள் ஒட்டுமொத்த முடிவைப் பாதிக்காமல் தடுக்கப்படுகிறது.
> தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு
வாக்காளரிடம், “யாருக்கு வாக்களித்தீர்கள்?”, “ஏன் வாக்களித்தீர்கள்?” என்பன போன்ற கேள்விகள் கேட்கப்படும். வாக்காளரின் பெயர் போன்ற தனிப்பட்ட அடையாளங்கள் எதுவும் சேகரிக்கப்படாது. இன்று, இந்தத் தரவுகள் அனைத்தும் டிஜிட்டல் செயலிகள் மூலம் உடனடியாக மத்திய சேவையகத்திற்கு அனுப்பப்படுகின்றன.
கள ஆய்வாளர் சரியான இடத்தில் இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்த ‘Geo-location’ தொழில்நுட்பமும் உதவுகிறது. சேகரிக்கப்பட்ட தரவுகள், ‘Weighting’ (மாதிரியில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்தல்), ‘Swing Analysis’ (கடந்த தேர்தலுடன் ஒப்பிட்டு வாக்கு மாற்றத்தைக் கணக்கிடுதல்) போன்ற புள்ளிவிவர முறைகளைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்பட்டு, வாக்கு சதவீதம் இடங்களாக (Seats) கணிக்கப்படுகிறது.