சாப்ட்வேர் துறையில் சாதிக்க வேண்டும் என்பது இன்றைய தலைமுறை இளைஞர்களின் பெரும் கனவு. ஆனால், வறுமை அல்லது குடும்பச் சூழல் காரணமாகப் பலரால் கல்லூரிக்குச் செல்ல முடிவதில்லை. இத்தகைய மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுகிறது இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஃப்ரெஷ்வொர்க்ஸ் (Freshworks).
அதன் சமூகத் திட்டமான Freshworks STS Software Academy (FSSA) மூலம் பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு 12 மாத கால உயர்தர சாப்ட்வேர் பயிற்சியை வழங்குகிறது. இது குறித்த விரிவான தகவல்களை அந்த நிறுவனத்தின் சேர்க்கை மற்றும் கல்விச் செயல்பாட்டுத் தலைவர் அகமத் (Admission & Academic Operation Lead) நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
பொதுவாக ஒரு பெரிய சாப்ட்வேர் நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால், கையில் ஒரு பி.இ (B.E) அல்லது பி.டெக் (B.Tech) டிகிரி இருக்க வேண்டும் என்பதுதான் பொதுவான விதி. ஆனால், சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய பல மாணவர்களுக்குக் கல்லூரிக்குச் செல்லும் வாய்ப்பே கிடைப்பதில்லை. திறமை இருந்தும் வாய்ப்பு மறுக்கப்பட்ட அத்தகைய மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த அகாடமி. கடந்த 5 ஆண்டுகளாக இதைச் செய்து வருகிறோம். இதுவரை 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதன் மூலம் பயனடைந்து முன்னணி நிறுவனங்களில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாகப் பணிபுரிகிறார்கள்.”
FSSA அகாடமி
வறுமை காரணமாகப் பள்ளிப்படிப்போடு நின்றுவிட்ட அல்லது கல்லூரிக்குச் சென்று பாதியில் இடைநின்ற மாணவர்களுக்கு (College Dropouts) வழிகாட்ட யாரும் இல்லை. அவர்களுக்குத்தான் எங்களின் முதல் முன்னுரிமை.
அதனால்தான், 12-ஆம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற விதியை வைத்துள்ளோம். குறிப்பாக, குடும்ப மாத வருமானம் 20,000 ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என்பது மிகக் கறாரான விதி. அப்போதுதான் உண்மையான தேவையுள்ள மாணவர்களைச் சென்றடைய முடியும்.”
நிச்சயமாக விண்ணப்பிக்கலாம். எங்களைப் பொறுத்தவரை விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு கோடிங் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை, ஆனால் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும். இதற்கான தேர்வு முறை நான்கு நிலைகளைக் கொண்டது. முதலில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மே 17-ல் FSAT என்ற ஆன்லைன் தேர்வு நடக்கும். இது எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள அடிப்படை கணிதம் மற்றும் ஆங்கிலத்தை மையமாகக் கொண்டது. இதில் தேர்ச்சி பெறுபவர்களிடம் எங்களது குழுவினர் தொலைபேசியில் நேர்காணல் நடத்துவோம்.
அதன் பிறகு ஜூலை மாதம் 120 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து 21 நாட்கள் சென்னையில் ஒரு பூட்கேம்ப் (Bootcamp) நடத்துவோம். அந்த 21 நாட்களில் அவர்களின் ஆர்வம், ஒழுக்கம் மற்றும் கற்றல் வேகத்தைப் பார்த்து இறுதி 90 மாணவர்களைத் தேர்ந்தெடுப்போம்.”
“இங்கேதான் FSSA தனித்து நிற்கிறது. இந்தப் பயிற்சி 100% இலவசம். அதுமட்டுமல்லாமல், மாணவர்களுக்குச் சுமை இருக்கக் கூடாது என்பதற்காக மாதம் 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்குகிறோம். எங்கள் அலுவலகத்திலேயே அவர்களுக்கு மூன்று வேளை உணவும் இலவசம். அவர்கள் தங்குவதற்குச் சென்னையில் உள்ள தங்கும் விடுதிகளைக் (PG) கண்டறிய நாங்கள் உதவுவோம், அந்தச் செலவை மாணவர்கள் தங்களின் உதவித்தொகையில் இருந்தே கவனித்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு மாணவருக்கும் லேப்டாப் மற்றும் இணைய வசதி வழங்கப்படும். கோடிங் தவிர, அவர்களுக்குத் தேவையான ஆங்கிலத் தொடர்புத் திறன் (Communication Skills) மற்றும் மென்திறன் பயிற்சிகளையும் (Soft Skills) நாங்களே வழங்குகிறோம்.” இந்தப் பயிற்சி முடிவில் அவர்களுக்கு என்ன மாதிரியான அங்கீகாரம் கிடைக்கும்? வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுமா?
12 மாத கால பயிற்சியின் இறுதியில், மாணவர்களுக்குச் சாஸ்திரா பல்கலைக்கழகம் (SASTRA University) மற்றும் ‘Freshworks’ இணைந்து வழங்கும் மதிப்புமிக்க சான்றிதழ் வழங்கப்படும். வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, எங்கள் மாணவர்கள் ஜோஹோ (Zoho), சார்ஜ்பீ (Chargebee) போன்ற 40-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்துள்ளனர்.எங்களிடம் படிக்கும் மாணவர்களின் உழைப்பைப் பார்த்து நிறுவனங்களே தேடி வந்து வளாகத் தேர்வு (Campus Interview) நடத்துகின்றன.”
உங்களிடம் சாதிக்க வேண்டும் என்ற வெறியும், கடினமாக உழைக்கும் மனப்பக்குவமும் இருந்தால் மட்டும் போதும். மொழி ஒரு தடையல்ல, நாங்கள் தமிழ் மீடியம் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம். குறிப்பாகப் பெண் பிள்ளைகள் அதிகளவில் இந்தத் துறையில் சாதிக்க வேண்டும் என விரும்புகிறோம். விண்ணப்பிக்க மே 12 கடைசி நாள். காலம் கடத்தாமல் இப்போதே myfssa.freshworks.com என்ற இணையதளத்தில் விண்ணப்பியுங்கள். உங்கள் வாழ்க்கை மாற இது ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும்.