Meghalaya Honeymoon Murder: கணவனைக் கொன்ற மனைவிக்கு ஜாமீன்; 11 மாதங்களுக்குப் பிறகு வெளியே வருகிறார்

Spread the love

கடந்த ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த சோனம் ரகுவன்சி என்ற பெண் திருமணமானவுடன் தனது கணவர் ராஜா ரகுவன்சியுடன் மேகாலயாவிற்கு தேனிலவு சென்றார்.

அவர்கள் மே 11ம்தேதி திருமணம் செய்த பிறகு 20ம் தேதி தேனிலவு சென்றனர். அவர்கள் ஹவுகாத்தி சென்று அங்கிருந்து ஷில்லாங் சென்றனர். ஆனால் மே 23ம் தேதி தம்பதியைக் காணவில்லை. போலீஸார் 10 நாட்கள் தேடிய பிறகு சோஹ்ரா என்ற இடத்தில் மலைபள்ளத்தில் ராஜா ரகுவன்சியின் உடல் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் சோனம் ரகுவனியைக் காணவில்லை. விசாரணையில் சோனம் தேனிலவு சென்ற இடத்தில் ராஜா ரகுவன்சியை தனது காதலன் ராஜ் குஷ்வாஹா என்பவருடன் சேர்ந்து கொலை செய்து அங்குள்ள பள்ளத்தில் போட்டுவிட்டு தலைமறைவானது தெரிய வந்தது.

இச்சம்பவம் கடந்த ஆண்டு மே மாதம் மேகாலயாவின் கிழக்கு காசி மலைப்பகுதியில் நடந்தது. ராஜாவைக் கொலை செய்வதற்காக தேனிலவு சென்றபோது தனது காதலன் மற்றும் அவனது நண்பர்களையும் சோனம் மேகாலயாவிற்கு அழைத்து சென்றார்.

அங்கு மலைப்பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ராஜா ரகுவன்சியை குஷ்வாஹாவும் அவனது ஆட்களும் அடித்து கொலை செய்து பள்ளத்தில் தூக்கிப்போட்டனர்.

உடலை பள்ளத்தில் தூக்கிப்போட சோனமும் உதவி செய்தார். 10 நாட்கள் கழித்து ராஜா ரகுவன்சியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இக்கொலை வழக்கில் சோனமும், அவரது காதலன் குஷ்வாஹா மற்றும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சோனம் உத்தரப்பிரதேசத்தில் பதுங்கி இருந்து கொண்டு தனது சகோதரனுக்கு போன் செய்தபோது பிடிபட்டார்.

விசாரணையில் ராஜ் குஷ்வாஹா மற்றும் மூன்று பேருடன் சேர்ந்து சதி செய்து தனது கணகனைக் கொலை செய்ததை சோனம் ஒப்புக்கொண்டார். இவ்வழக்கில் மேகாலயா போலீஸார் ஏற்கனவே 790 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று கோரி சோனம் தரப்பில் 3 முறை மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மூன்று முறையும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நான்காவது முறை விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் கொடுத்துள்ளது.

சட்டநடைமுறைகளை அவரது குடும்பத்தினர் செய்தனர். இதற்காக சோனம் தந்தையும், அவரது சகோதரனும் வந்திருந்தனர். இதையடுத்து சோனம் 11 மாதங்கள் கழித்து சிறையில் இருந்து வெளியில் வந்து இருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *