
சர்வதேசச் சந்தை நிலவரங்களின் காரணமாகத் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அக்டோபர் மாதம் முழுவதும் சரிவைச் சந்தித்த தங்கம் விலை, நவம்பர் தொடக்கத்தில் இருந்தே மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது நகைப்பிரியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை குறைந்து சவரன் ரூ.1 லட்சத்திற்குக் கீழ் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நவம்பர் 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரையிலான காலத்தில் மட்டும் கிராமுக்கு ரூ.655-ம், சவரனுக்கு ரூ.5,240-ம் உயர்ந்தது.
அதன்பின்னர் நவம்பர் 6-ம் தேதி திடீரென விலை சரிந்து, சவரனுக்கு ரூ.1,960 வரை குறைந்தது. தொடர்ந்து நவம்பர் 7 மற்றும் 8-ம் தேதிகளில் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,160-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,280-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வாரத்தின் முதல் நாளான இன்று (நவம்பர் 9) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,255-க்கும், சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்னரும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே தொடர்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.205-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,05,000-க்கும் விற்பனையாகி வருகிறது.