O.M Review: பிரமாண்ட செம்மரக் கடத்தல் உலகம்; களமிறங்கும் உளவாளி தனுஷ்! மிஷன் சக்சஸா?

Spread the love

செம்மரக் கடத்தல் குழுவை ஒட்டுமொத்தமாகப் பிடிக்கும் தடுப்புப் பிரிவுக்குச் சிறப்புக் காவல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் நித்யா ரெட்டி (சாய் பல்லவி). இதற்காக ‘O.M’ (Operation Mole) எனப்படுகிற ஆபரேஷனைத் தொடங்குகிறார்.

இந்த மிஷனுக்காக நித்யா ரெட்டியின் குழுவுக்கு வருகிறார் ரகசியக் காவல் அதிகாரியான பழனி (எ) திருக்குமரன் (தனுஷ்). செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வரும் பெரிய குழுவின் ஒரு புள்ளியாக இருக்கிறார் பர்மா கார்த்திகேயன் (மம்மூட்டி). இவருடைய குழுவுக்குள் உளவாளியாகச் செல்கிறார் திருக்குமரன்.

பர்மா கார்த்திகேயனிடமிருந்து தகவல்களையும், ஆதாரத்தையும், இதில் ஈடுபட்டிருக்கும் முக்கியப் புள்ளிகளைப் பற்றிய விவரங்களையும் திரட்டி, பழனி இந்த மிஷனை சக்சஸ் ஆக்கினாரா என்பதே இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் ‘ஓ.ம்’.

O.M Review | ஓ.ம் விமர்சனம்
O.M Review | ஓ.ம் விமர்சனம்

உளவாளியாகக் கோபம், எமோஷன், ஆக்‌ஷன், லேசாகக் கலகல முகம் எனப் பக்கா கமர்ஷியல் டோனில் தனுஷ்! உளவாளியின் பர்சனல் பக்கத்தையும், அவனின் எண்ணவோட்டத்தையும் பதிவு செய்யும் எமோஷனல் பகுதிகளில் கூடுதல் க்ளாப்ஸையும் பெறுகிறார்.

செம்பு கலந்த தங்கம் போல சில நல்ல குணங்கள் கொண்ட கேங்ஸ்டர் வில்லனாக மம்மூட்டி தனது பங்கைக் கச்சிதமாகவே செய்து முடித்திருக்கிறார். ஆனால், இந்தக் கேங்ஸ்டர் கதாபாத்திர வரைவில் புதுமை துளிகூட இல்லாததால் நம் கவனத்தைப் பெரியளவில் ஆக்கிரமிக்கவில்லை. 

காவல் அதிகாரியாக மிரட்டும் ஆக்‌ஷன் டோனில் சாய் பல்லவி விசில்களைப் பெறுகிறார். ஆக்ரோஷமாகக் கோபத்தை வெளிக்காட்டும் பகுதிகளும், தேவைப்படும் மிகை நடிப்பை வெளிப்படுத்தும் பகுதிகளும் சாய் பல்லவியின் புதிய அவதாரம்! குறைவான திரை நேரத்தில் வந்தாலும் சென்டிமென்ட் ஜோனில் தனது இருப்பைப் பதிவு செய்கிறார் ஶ்ரீ லீலா.

பெரிய டானாக நஸ்ருதீன் ஷா வருகிறார்… அவ்வளவே! இவர்களைத் தாண்டி லல்லு, தீனா, மம்மூட்டியின் மனைவியாக ரேனு தேசாய், டி.எஸ்.கே, பிரசன்னா மற்றும் காவல் அதிகாரியாக வரும் சித்து ஜொன்னலகட்டா ஆகியோர் அவரவர் வேலையைக் குறை வைக்காமல் செய்து முடித்திருக்கிறார்கள்.

O.M Review | ஓ.ம் விமர்சனம்
O.M Review | ஓ.ம் விமர்சனம்

தொடக்கத்தில் வரும் நீளமான சிங்கிள் ஷாட், காட்டுக்குள் நடக்கும் ஆக்‌ஷன் என ஃப்ரேமிங்கிலும், லைட்டிங்கிலும் இந்த ‘ஓ.ம்’ உலகத்திற்குக் கச்சிதமான உழைப்பைத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எழில் கே. அரசு. வில்லன்களைப் பற்றிய விவரிப்பையும், இரண்டாம் பாதியில் நம் பொறுமையைத் தட்டிப் பார்க்கும் ஆக்‌ஷன் மற்றும் எமோஷனல் காட்சிகளிலும் எடிட்டர் ஆர்.கலைவாணன் இன்னும் ‘ஷார்ப்னஸ்’ கூட்டியிருக்கலாம்.

சாய் அபயங்கர் இசையில், ‘அலகலோவா’, ‘வீழா வீரா’, ‘ஃபா ஃபா ஃபா’, ‘செஞ்சுடரே’ எனப் பாடல்களில் எட்டுத் திக்கும் அதிரும் பீட்கள். பின்னணி இசையிலும் ஆக்‌ஷன், சென்டிமென்ட் என ஃபயர் ‘இசை’ பா! ஆனால் ஒரு சில இடங்களில் அதீத சத்தமும், இடைவிடாத பீட்டும்… அதைக் கொஞ்சம் குறைத்திருக்கலாமே சாய்?!

2015-இல், ஆந்திராவின் சித்தூர் பகுதியில் தமிழகக் கூலித் தொழிலாளிகள் சுட்டுக் கொல்லப்பட்ட உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.

செம்மரக் கடத்தலைத் தடுப்பதற்கு அமைக்கப்பட்ட சிறப்புத் தடுப்புப் பிரிவு மற்றும் பெரிய நெட்வொர்க் வில்லன்களின் விவரிப்பு என இந்த ‘ஓ.ம்’ நம்மை வரவேற்றுக் கூட்டிப் போகிறது. ஆனால், இந்த விளக்க எபிசோட் மட்டுமே நீண்ட நேரம் விரிவதால் கொஞ்சம் சோம்பல் ஏற்றிவிடுகிறது திரைக்கதை.

பிறகு வழக்கமான ‘ஸ்பை’ பட வண்டியிலேயே தூசி தட்டி ஏறிக்கொள்ளும் படம், இன்னும் தட்டையான பாதைக்கு நகர்கிறது. இதன் பிறகு தேவையான நிதானத்தையும், எமோஷனல் பிடிப்பையும் எட்டிப் பிடிக்கும் படம் இடைவேளைத் திருப்பத்தில் திடுக்கிடல் உண்டாக்குகிறது.

இரண்டாம் பாதியில் படத்தின் மையத்தைப் பற்றிய டீடைலிங்கை மட்டும் தெளிவாகச் சொல்லும் படம், கதையோட்டத்தில் தடுமாறிச் சோர்வைத் தருகிறது.

O.M Review | ஓ.ம் விமர்சனம்
O.M Review | ஓ.ம் விமர்சனம்

நெருக்கடியான பொருளாதாரச் சூழல் காரணமாக செம்மரம் வெட்டும் பணிக்குள் தள்ளப்படும் அப்பாவி பழங்குடி மக்கள், அச்சமயத்தில் அதிகார மனப்பான்மையோடு அவர்கள் மீது காவல் அதிகாரிகள் நிகழ்த்தும் வன்முறை உள்ளிட்ட அரசியலைப் பேசியதற்குப் பாராட்டுகள் ராஜ்குமார்.

உளவாளிகளின் பர்சனல் பக்கம் எப்படியானது என்பதைத் துருத்தலில்லாமல் படத்தில் விரிவாக உணர்த்தியதும் சூப்பர் இயக்குநரே! அதோடு சாய் பல்லவி கதாபாத்திரம் மூலம் ‘சிஸ்டம்’ தாண்டி நல்லது செய்ய நினைக்கும் காக்கிகளும் எப்படி இன்னலைச் சந்திக்கிறார்கள் என்று விளக்கியதும் பாராட்டத்தக்கது.

ஆனால், ஒரு கட்டத்திற்குப் பிறகு கதையின் மையம் என்னவென்றே குழம்ப வைக்கிறது படம். கடத்தல் தொழிலிலிருந்து விலக நினைக்கும் நல்ல வில்லன் எனப் பார்த்துப் பழகிய டான் கதை ஓகே… ஆனால் நம்பிக்கை துரோகத்தை இத்தனை எளிதாக எடுத்துக்கொள்வாரா அந்த டான்?

ஜெயிலுக்குள்ளேயே காவல் அதிகாரிகளை கைதிகள் கொலை செய்யும் அளவிற்குத்தான் பாதுகாப்பு இருக்கிறதா, செம்மரக் கடத்தல் வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர் எப்படி அதற்குள் விடுதலை செய்யப்பட்டார் எனப் பல கேள்விகள்!

அதோடு முதல் பாதியிலேயே கையும் களவுமாக மாட்டிக்கொண்ட முக்கியக் குற்றவாளியைக் கைது செய்ய அத்தனை முகாந்திரம் இருந்தும், கண்டுகொள்ளாமல் மிஷன், மிஷன் எனக் காவல்துறை குழப்புவது ஏனோ?!

O.M Review | ஓ.ம் விமர்சனம்
O.M Review | ஓ.ம் விமர்சனம்

தேவையான டீடைலிங், கச்சிதமான தொழில்நுட்பப் பணிகள் இருந்தாலும் திரைக்கதையில் தேவையான பரபரப்பு இல்லாமல் போயிருப்பதால் ‘ஆபரேஷன்’ வேண்டிய சக்சஸ் மீட்டரைத் தொடவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *