இது குறித்து இன்ஸ்பெக்டர் கே.பட்டேல் கூறுகையில், “‘நிகேஷ் பட்டேல் தனது மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் அல்லது தன்னை விட்டு செல்ல வேண்டும் என்று விரும்பினார். அதோடு தான் இப்போது தொடர்பு வைத்திருக்கும் பெண்ணை தனது வீட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று விரும்பினார். இதற்காக தனது நண்பர்களுடன் கலந்து ஆலோசித்து தனது மனைவியை விற்பனை செய்ய நிகேஷ் பட்டேல் முடிவு செய்தார்.
இதையடுத்து நிகேஷ் பட்டேல் நண்பர்கள் இரண்டு பேர் தவறான காரணத்தை கூறி பாதிக்கப்பட்ட பெண்ணை ஆட்டோவில் அழைத்து சென்றனர். அதில் ஒருவர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு அப்பெண்ணை தராட் கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில் விற்பனை செய்துவிட்டனர். அப்பெண்ணை வாங்கிய நபர், ஒருவாரமாக அப்பெண்ணை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்” என்றார்.
அப்பெண்ணை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தொடர்பாக நிகேஷ் பட்டேல் மற்றும் அவரது நண்பர்கள், அப்பெண்ணை வாங்கிய நபர்கள் என மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அப்பெண் அணிந்திருந்த கம்மலை கழற்றி அதனையும் விற்பனை செய்துள்ளனர். போலீஸாரின் விசாரணையில் நிகேஷ் பட்டேல் இதற்கு முன்பு இரண்டு திருமணமான பெண்களை தனது வலையில் சிக்க வைத்து அவர்களுடன் வீட்டை விட்டு ஓடியிருந்ததும் தெரிய வந்தது. தற்போது மூன்றாவதாக ஒரு பெண்ணை தனது வீட்டிற்கு கொண்டு வருவதற்காக தனது சொந்த மனைவியை விற்பனை செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, ஆள் கடத்தல், கூட்டுப் பலாத்காரம், கொள்ளை, குற்றச்சதி போன்றவற்றின் கடுமையான பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மிது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.