IND Vs SL டெஸ்ட்: 250 ஓவர்கள் ஃபீல்டிங்… “வேறு என்ன செய்திருக்க முடியும்?” – சுப்மன் கில் பதில்!

Spread the love

இந்தியா–இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 503/9 டிக்ளேர் செய்ய, இலங்கை முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஃபாலோ-ஆன் பெற்ற இலங்கை, 2-வது இன்னிங்ஸில் 429/9 ரன்கள் எடுத்ததால் இந்தியாவால் வெற்றியைப் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் போட்டி டிராவில் முடிய, முதல் டெஸ்ட்டில் பெற்ற வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-0 எனக் கைப்பற்றியது.

“எங்களால் வேறு என்ன செய்திருக்க முடியும்?”

போட்டியில் இந்தியா இன்னும் ஏதாவது செய்திருக்க முடியுமா என்று சுப்மன் கில்லிடம் கேட்கப்பட்டது. அதற்கு, “நேர்மையாகச் சொன்னால், இல்லை” என்ற கில், இந்திய அணி தொடர்ந்து மூன்று நாள்கள் சுமார் 250 ஓவர்கள் ஃபீல்டிங் செய்ததாகக் குறிப்பிட்டார்.

“எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். இலங்கை பேட்டர்கள் மிகச் சிறப்பாக விளையாடினர். அவர்களிடம் நிறைய திறமை இருந்தது; கொஞ்சம் அதிர்ஷ்டமும் அவர்களுக்குச் சாதகமாக இருந்தது. எனவே, நாங்கள் வேறு ஏதாவது செய்திருக்க முடியும் என்று நினைக்கவில்லை” என்றார்.

“தொடரில் நிறைய சாதகமான விஷயங்கள்!”

1-0 என தொடரை வென்ற இந்திய அணியின் செயல்பாடு குறித்து கேட்டபோது, தொடரில் நிறைய சாதகமான விஷயங்கள் இருப்பதாக கில் கூறினார். கடுமையான அழுத்தத்தில் இருந்து இலங்கை மீண்டு வந்த விதத்திலிருந்தும் இந்தியா கற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.

படிக்கல், கே.எல். ராகுல், மானவ் சுதர் ஆகியோரின் பங்களிப்பை குறிப்பிட்ட கில், பிரசித்தின் இரண்டு இன்னிங்ஸ் செயல்பாட்டையும் பாராட்டினார். “மதிய உணவு மற்றும் தேநீர் இடைவேளையிலும் இதுகுறித்து பேசினோம். எங்களால் வேறு எதுவும் செய்திருக்க முடியும் என்று நினைக்கவில்லை” என்றார்.

“இளம் வீரர்களின் வருகை உற்சாகம்!”

சுதர், படிக்கல், ஜூரெல் போன்ற இளம் வீரர்களின் எழுச்சி குறித்து கேட்டபோது, இது இந்திய அணிக்கு மிகவும் உற்சாகமான காலகட்டம் என்று கில் கூறினார். களத்திலும், களத்திற்கு வெளியேயும் தயாரிப்பு மற்றும் செயல்பாட்டில் தொடர்ந்து நிலைப்புத்தன்மையுடன் இருப்பது முக்கியம் என்றார்.

“சுதர் முக்கியமான வீரராக இருப்பார்!”

மானவ் சுதரின் பந்துவீச்சில் எது தன்னைக் கவர்ந்தது? என்ற கேள்விக்கு, அவரது சீரான செயல்பாடு மற்றும் மணிக்கட்டு, விரல்களில் இருந்து பந்தை வெளியேற்றும் விதம் தன்னை கவர்ந்ததாக கில் கூறினார். வரும் ஆண்டுகளில் சுதர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான வீரராக இருப்பார் என்றும் தெரிவித்தார்.

“வாய்ப்பு இருக்கும் வரை நம்பிக்கையுடன் இருப்போம்!”

WTC வாய்ப்பு மற்றும் அடுத்த தொடர் குறித்து பேசிய கில், நவம்பரில் நியூசிலாந்துக்குச் செல்லவிருப்பதாகவும், அதன்பிறகு சொந்த மண்ணிலும் ஒரு நல்ல தொடர் இருப்பதாகவும் கூறினார். வாய்ப்பு இருக்கும் வரை நம்பிக்கையுடன் இருந்து, இறுதிப்போட்டியை எட்ட முயற்சிப்போம் என்றார்.

“அந்த நேரத்தில் சிறந்த முடிவைத்தான் எடுத்தோம்!”

ஃபாலோ-ஆனை அமல்படுத்திய முடிவு குறித்து கேட்கப்பட்டபோது, வானிலை மற்றும் 5-வது நாளில் முழுமையான ஆட்டம் நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்ததால், அந்த நேரத்தில் சிறந்த முடிவை எடுக்க முயன்றதாக கில் விளக்கினார். “பின்னோக்கிப் பார்த்தால் வேறு விதமாகச் செய்திருக்கலாமா என்று யோசிக்கலாம் ஆனால், நீங்கள் இருக்கும் தருணத்தில் உங்களால் முடிந்த சிறந்த முடிவைத்தான் எடுக்க முயற்சிப்பீர்கள். சில விஷயங்கள் நமக்குச் சாதகமாக அமையும்; சில விஷயங்கள் அமையாமல் போகலாம். அது பரவாயில்லை. இது கிரிக்கெட். இறுதியில், டெஸ்ட் கிரிக்கெட்தான் வென்றது” என்று கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *