ஆப்பிள் பயனர்களுக்கு ஒரு சூடான செய்தி!
இதுவரை நாம் பயன்படுத்திய சிரி (Siri) வெறும் ஆரம்பம் தான் என்பது போல, ஒரு அடுத்தகட்ட செயற்கை நுண்ணறிவு (AI) அசிஸ்டெண்டை உருவாக்கும் வேலையில் ஆப்பிள் மும்முரமாக இறங்கியுள்ளது. இனிமேல், நாம் ஒவ்வொரு வேலையாகச் சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை; மாறாக, சிக்கலான பல படிநிலைகளைக் கொண்ட வேலைகளைக் கூட, இந்த புதிய AI ஏஜென்ட் தானாகவே செய்து முடிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்படியென்ன இதில் ஸ்பெஷல்?
இதுவரை நாம் சிரி-யிடம், “அலாரம் வை” அல்லது “இந்த நம்பருக்கு கால் பண்ணு” என்பது போல ஒற்றைக் கட்டளைகளைத்தான் கொடுத்து வந்தோம். ஆனால், ஆப்பிளின் இந்த புதிய “புரோஆக்டிவ் ஏஜென்டிக் AI அசிஸ்டன்ட்’ (Proactive, Agentic AI Assistant) அப்படி இல்லை.
உதாரணமாக, “எனது பெங்களூரு பயணத்திற்கான சிறந்த விமான டிக்கெட்களைத் தேடி, எனது பட்ஜெட்டிற்குள் இருக்கும் சிறந்த ஆப்ஷனை புக் செய்து, அதை எனது கேலண்டரில் சேர்” என்பது போன்ற பல படிநிலைகள் கொண்ட ஒரு கோரிக்கையை நீங்கள் வைத்தால் போதும். அதுவாகவே பிரவுசரைத் திறந்து, ஆப்களைப் பயன்படுத்தி, தேவைப்பட்டால் மற்ற சேவைகளையும் ஒருங்கிணைத்து அந்த வேலையை முழுமையாக முடித்துவிடும். கேட்கவே பிரமிப்பாக இருக்கிறது அல்லவா?
சமீபத்தில் ஆப்பிள் வெளியிட்ட சில வேலைவாய்ப்பு விளம்பரங்கள் மற்றும் ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, இந்த AI-க்கு வெப் பிரவுசிங் செய்வது, ஆப்களைக் கட்டுப்படுத்துவது, டிவைஸ்களை இயக்குவது, ஏன் கோட் எழுதுவது மற்றும் பிழைகளைச் சரிசெய்வது போன்ற திறன்கள்கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பெரிய வேலையைச் செய்து முடிக்க, அதற்கேற்ற பிரத்யேக AI ஏஜென்ட்களைத் தேர்ந்தெடுத்து, வேலையைப் பிரித்துக் கொடுக்கும் அளவுக்கு இது ஸ்மார்ட்டாக வடிவமைக்கப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு விஷயத்திலும் ஆப்பிள் ரொம்பவே கவனமாக இருக்கிறது. பயனர்களின் சார்பில் இந்த AI செயல்படும்போது, அதற்கான அனுமதிகள், சாண்ட்பாக்ஸிங் (Sandboxing) மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என ஆப்பிள் குறிப்பிட்டுள்ளது. இதனால் நமது தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என நம்பலாம்.