ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், நம்புதாளை கிராமத்தில் ECR சாலையிலிருந்து கிராமத்திற்குச் செல்லும் வழியில் உள்ள 2-வது வார்டு பகுதியில், கடந்த சில மாதங்களாகக் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சாலையில் தேங்கியும் வழிந்தோடியும் செல்லும் கழிவுநீரால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அன்றாடம் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக, செல்வமுத்து மாரியம்மன் வழிபாட்டுத்தலம் மற்றும் நான்கு குடிநீர்க் குழாய்கள் அமைந்துள்ள பகுதியிலும் இந்தப் பிரச்னை இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் குடிநீர் பயன்படுத்தும் மக்களுக்கும், வழிபாட்டுத்தலத்திற்குச் செல்லும் பக்தர்களுக்கும் சுகாதார சிக்கல் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.





மேலும், இந்த வழியாகப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் கழிவுநீரைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து ஊராட்சி மன்றச் செயலரிடம் தொலைபேசி வாயிலாகவும், நேரில் சென்றும் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கழிவுநீர் பிரச்னைக்குத் துரிதமாகத் தீர்வு காண வேண்டும் என்பதே நம்புதாளை மக்களின் கோரிக்கையாக உள்ளது.