அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது ஒன்றரை மாதமாக நடத்திய தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னெடுத்து வரும் பேச்சுவார்த்தை காரணமாக அமெரிக்கா இந்தப் போர்நிறுத்தத்தை அறிவித்து இருக்கிறது. ஆனால் முதல் சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துவிட்டதால் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தைக்கு வர ஈரான் மறுத்து வருகிறது.
ஈரானில் உள்ள ஹார்மூஸ் ஜலசந்தியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது. இதனால் ஈரான் துறைமுகத்திற்குள் எந்தக் கப்பலும் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. ஈரானும் ஹார்மூஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்துள்ளது. அதோடு அந்த வழியாக வரும் கப்பல்களைத் தாக்கி வருகிறது.
போர்நிறுத்தம் அமலில் இருந்தாலும், இஸ்ரேல் மீண்டும் போரைத் தொடங்க தயாராகி வருகிறது. கமேனி வம்சத்தை அடியோடு அழிக்க துடித்துக்கொண்டிருக்கிறது.
இது குறித்து அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் அளித்துள்ள பேட்டியில், “‘ஈரானுடனான போரை மீண்டும் தொடங்க இஸ்ரேல் தயாராக இருக்கிறது. தாக்குதலைத் தீவிரப்படுத்த அமெரிக்காவின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம்.
ஈரானுடன் மீண்டும் போரைத் தொடங்க இஸ்ரேல் தயாராக இருக்கிறது. இதற்காக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை முழு அளவில் தயாராக இருக்கிறது.
தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தையும் இறுதி செய்துவிட்டோம். இஸ்ரேலை அழித்தொழிக்க நினைக்கும் திட்டத்தின் சூத்திரதாரியாகவும், ஈரானின் பயங்கரவாத ஆட்சியின் தலைமைப் பொறுப்பைத் தொடர்பவர்களாகவும் திகழும் கமேனி குடும்பத்தை முழுமையாக ஒழித்துக்கட்ட, நாங்கள் அமெரிக்காவின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம்.
ஈரானை மீண்டும் இருளுக்கும் கற்காலத்திற்கும் தள்ளும் வகையில், அந்நாட்டின் முக்கிய எரிசக்தி மற்றும் மின் நிலையங்களை நாங்கள் தகர்த்தெறிவோம்.
நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பைச் சீர்குலைப்போம். இம்முறை தாக்குதல் மீண்டும் தொடரும்போது, அது முற்றிலும் மாறுபட்டதாகவும், உயிரைப் பறிக்கக்கூடியதாகவும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
ஈரானின் புதிய மத உச்சத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மொஜ்தாப் கமேனி இப்போரில் காயம் அடைந்து சிகிச்சையில் இருக்கிறார். அவருக்கு செயற்கை கால் பொருத்தப்பட இருக்கிறது. முகத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் பேசுவதிலும் சிக்கல் இருக்கிறது.