இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தேசியத் தலைவர் காதர் மொய்தீன் தலைமையில், சென்னையில் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. 483 பேர் பங்கேற்ற இக்கூட்டத்தில், 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த காதர் மொய்தீன், “தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும், மு.க.ஸ்டாலின் அவர்களே மீண்டும் முதலமைச்சராவார் என்று நாங்களும் நம்பினோம், உழைத்தோம்.
ஆனால், தேர்தல் முடிவு வேறாக அமைந்துவிட்டது. தமிழ்நாட்டு மக்கள் தங்களது வாக்குகளால் “தமிழக வெற்றிக் கழகத்திற்கு’ சாதகமான சூழலை உருவாக்கினர்.

த.வெ.க 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முயற்சி செய்தபோது, அவர்களுக்குப் போதிய பெரும்பான்மை இல்லாத நிலை இருந்தது. அந்தச் சூழலில், தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியோ அல்லது ஆளுநர் ஆட்சியோ வந்துவிடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.
ஜனாதிபதி ஆட்சி அமைந்தால், அது மத்தியிலுள்ள பாஜக-வின் மறைமுக ஆட்சியாகவே மாறும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டு, அதற்கு முஸ்லிம் லீக் காரணமாகிவிட்டது என்ற பழி சமுதாயத்தின் மீது விழுந்துவிடக் கூடாது என்பதற்காக, சமுதாய மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்து, தவெக ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினோம்.