Jana Nayagan: "கொசுக்கடி இல்லாம தூங்கணும்னு நினைச்சவர், இப்போ முதல்வர்கூட…" – இரா.சரவணன் பேட்டி

Spread the love

விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகியிருக்கிறது. எச். வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படம்

தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த ‘பகவந்த கேசரி’ படத்தின் ரீமேக். அப்படத்திலிருந்து அடிப்படை கதையை மட்டும் எடுத்துக்கொண்டு, அதில் சிலவற்றை மாற்றிப் படமாகக் கொண்டு வந்திருக்கிறார் எச். வினோத்.

Jana Nayagan - Vijay
Jana Nayagan – Vijay

இப்படத்தின் டிஸ்கஷனின் முதற்பகுதியில் இயக்குநர் இரா. சரவணனும் இருந்திருக்கிறார்.

‘ஜனநாயகன்’ படத்திற்கு நடந்த கதை டிஸ்கஷன் பற்றியும், எச். வினோத்துடனான நட்பு குறித்தும் நம்மிடையே அவர் பகிர்ந்துகொண்டார்.

நம்மிடையே பேசியவர், “‘துணிவு’ படம் முடிச்சதும் வினோத், கமல் சாருக்கு ஒரு கதை சொல்லியிருந்தாரு. அதுக்கப்புறம் என்னை ஆபீஸுக்குக் கூப்பிட்டு, அதோட ஃபர்ஸ்ட் ஆஃப் மட்டும் கொடுத்துப் படிக்கச் சொன்னாரு.

நான் படிச்சுப் பார்த்துட்டு, ‘வினோத், கமல் சார் இந்த ஃபர்ஸ்ட் ஆஃப்ல அறிமுகமாகுற சீன்லயே தியேட்டர்ல கைத்தட்டல் அடங்க குறைஞ்சது 15 நிமிஷம் ஆகும். ஒரு ஹீரோவுக்கு இப்படி ஒரு மாஸான ஓப்பனிங் சீனை யாராலயும் எழுத முடியாது.

அவர் எந்திரிச்சு நிக்கிற ஒரு சாதாரண சீனுக்குக்கூடத் தியேட்டர் அதிரும்’னு சொன்னேன். ‘அவ்வளவு நல்லா இருக்கா?’ன்னு கேட்டாரு. ‘ரொம்ப பிரமாதமா இருக்கு வினோத்’ என்றேன். ஆனா, கமல் சாருடனான அந்த ப்ராஜெக்ட் அடுத்த கட்டத்துக்கு நகரல.

Jana Nayagan - Vijay
Jana Nayagan – Vijay

அதுக்கப்புறம் ஒரு நாள், வழக்கம்போல எங்க போறோம்னு எதுவும் சொல்லாம என்னை ஏர்போர்ட் அழைச்சிட்டுப்போய், அங்கிருந்து கேரளா கூட்டிட்டுப் போனாரு. போகுற வழியிலதான், ‘விஜய் சார் படம் கமிட் ஆகியிருக்கேன். அவருடைய கடைசி படம்னு சொல்றாங்க’ன்னு சொன்னாரு.

உடனடியாக நான் அவரைக் கட்டிப்பிடிச்சு கொண்டாடுனேன். ஆனா வினோத் வழக்கம் போல, ‘அதெல்லாம் பாத்துக்கலாம்’னு எதுவுமே மண்டையில ஏத்திக்காம இயல்பா இருந்தாரு.

வினோத்துடனான கதை டிஸ்கஷன் முறையே எப்போதும் வேற மாதிரி இருக்கும். ‘இதுதான் கதை, இதுதான் கேரக்டர்’னு நேரடியாகப் பேச மாட்டாரு. ஒரு காவல் அதிகாரி கதாபாத்திரத்திற்காக, ‘நீ பார்த்த காவல் அதிகாரிகளைப் பத்தில்லாம் சொல்லு’ன்னு கேப்பாரு. நான் 15 வருஷம் பத்திரிகையாளரா இருந்ததால நிறைய மனிதர்களைச் சந்திச்சிருக்கேன், பழகியிருக்கேன்.

அங்க கிடைச்ச அனுபவங்களை வச்சு நான் அவர்கிட்ட கதைகள் சொல்வேன். அவர், ‘நீ எவ்வளவோ கதைகள் வச்சிருக்க, எல்லாமே சுவாரஸ்யமா இருக்கு’ன்னு சொல்லுவாரு. அன்னைக்கே நாங்க பேசினதை வச்சு ஒரு சீனை எழுதி வாசிக்கக் கொடுப்பாரு.

இரா. சரவணன் - அ. வினோத்
இரா. சரவணன் – அ. வினோத்

இன்னொரு விஷயம், ‘வலிமை’ படத்துல கமிட் ஆனப்போ வினோத் என் ஆபீஸுக்கு வந்து, ‘நான் அடுத்தும் அஜித் சார் படம்தான் பண்றேன். நீதான் வசனம் எழுதணும்’னு சொன்னார். அன்னைக்கு எனக்கு இருந்த பொருளாதாரச் சூழலுக்குக் கண்ணை மூடிட்டு ‘நண்பா’ன்னு கட்டிப்பிடிச்சுச் சம்மதிச்சிருக்கணும்.

ஆனா நான், ‘இல்ல வினோத். உன் படத்துல ஆர்ட் டிபார்ட்மென்ட்ல அசிஸ்டன்ட்டா வேலை பார்க்கணும்னாக்கூடப் பார்க்குறேன். ஆனா உன் எழுத்துக்கு நான் அடிமை. அதனால நான் டயலாக் ரைட்டரா வர மாட்டேன். உனக்கு என்ன உதவி வேணாலும் பண்றேன்’னு சொல்லி ஒதுங்கிட்டேன். எனக்கு எப்போதுமே வியப்பைத் தருவது வினோத் மட்டும்தான்,” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “‘பகவந்த் கேசரி’ படத்தைதான் விஜய் சாருக்கு ரீமேக் பண்ணப்போறோம்னு வினோத் சொன்னாரு. நான் பாலையா சாருடைய ஃபேன். ஏற்கெனவே அந்தப் படத்தைப் பலமுறை பார்த்திருந்தேன்.

அப்புறம் அதை விஜய் சாருக்கு ஏத்த மாதிரி மாத்தலாம்னு டிஸ்கஷன் நடந்தது. இதற்காக வயநாட்டுல ஒரு 33 நாட்கள் தங்கி, விஜய் சாருக்கு ஏற்ற வகையில கதையை மாற்றுவதற்கு டிஸ்கஸ் பண்ணினோம். பெரிய ஹீரோ படத்துக்கான கதை விவாதம் எப்போதுமே ஸ்டார் ஹோட்டல்லதான் நடக்கும்.

Jana Nayagan
Jana Nayagan

ஆனா வினோத் என்னை ஒரு சின்னக் குடில் மாதிரி இருந்த இடத்துக்குக் கூட்டிட்டுப் போனாரு. ரொம்ப எளிமையான இடம். சொல்லப்போனால், நாங்க அங்க கதையை டிஸ்கஸ் பண்ணி முடிச்சு வந்த 15-வது நாள்ல நாங்க தங்கியிருந்த பகுதியில நிலச்சரிவு ஏற்பட்டது.

நாங்க இன்னும் கொஞ்ச நாட்கள் அங்கேயே தங்கியிருந்தால் நாங்க அந்த நிலச்சரிவுல சிக்கியிருப்போம். குறிப்பா, அங்க ஒரு கோயில்ல பிரசாதம் நல்லா இருக்கும்னு போவோம். அங்க பூசாரியா இருந்தவர், அந்த கோயில்னு எல்லாமே நிலச்சரிவுல அடிச்சுட்டு போயிடுச்சு!” என்றார்.

மேலும் பேசியவர், “பாலையா சார் மாஸ் வேற. ஆனா அவர் நடிச்ச கதையை விஜய் சாருக்கு ஏத்த மாதிரி மாத்துறப்போ, ஓவர்டோஸ் ஆகிடாமல் வினோத் ரொம்பத் தெளிவா மாத்தினாரு. நான் அவர்கிட்ட ஒன்னே ஒன்னு மட்டும்தான் சொன்னேன். ‘TVK-ன்னு பேரு வைக்கிறது, ஜனநாயகன் இதெல்லாம் வேண்டாம் வினோத்.

இது இல்லாமல், படமா மட்டும் பண்ணு’ன்னு சொன்னேன். ஆனா அவரு, ‘இது அவரோட கடைசி படம், அதனால அவரோட அரசியலுக்கும் நாம சப்போர்ட் பண்ணனும்’னு சொன்னாரு. அதுல எங்களுக்குள்ள சில மாறுபட்ட கருத்துகள் இருந்தது.

H Vinoth - Jana Nayagan
H Vinoth – Jana Nayagan

இப்போ ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ் ஆகியிருக்கு. வினோத்தோட வெற்றிங்கிறது எங்கையோ ஒரு குக்கிராமத்துல இருந்து கிளம்பி வர்ற ஒவ்வொரு இளைஞனுக்குமான வெற்றி! ஏன்னா வினோத் படாத கஷ்டம் இல்ல. பார்க்காத வேலை இல்ல. கோயம்பேடு சந்தையில் பல நாட்கள் தூக்கமில்லாம கிடந்தவர்.

‘கொசுக்கடி இல்லாம தூங்குறதுக்கு ஒரு வாடகை வீடு கிடைச்சா போதும்டா’ன்னு வாழ்ந்த மனிதன் அன்னைக்கு, இன்னைக்கு ஒரு முதலமைச்சரோட படத்தையே இயக்குற அளவுக்கு உச்சத்துக்குப் போயிருக்காரு!” என உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *