இன்று திரைக்கு வந்திருக்க வேண்டிய சூர்யாவின் ‘கருப்பு’ படம் சில சூழல்களால் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் வடமாநிலங்களில் சில இடங்களில் ( மும்பை, புனே, வாரணாசி) ‘கருப்பு’ படம் திரையிடப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
இதனால் படத்தின் டைட்டில் மற்றும் சில காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது படத்தின் தயாரிப்பாளருக்குக் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. கியூப்பின் தவறால் இப்படி நேர்ந்துவிட்டது என்ற பேச்சு எழுந்துள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அவசரக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ‘கருப்பு’ படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, ஞானவேல்ராஜா மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளான தாணு, டி.சிவா, போஸ் லிங்குசாமி, கதிரேசன் எனப் பலரும் ‘கருப்பு’ தயாரிப்பாளருக்கு ஆதரவாகக் குரல்கள் எழுப்பியதுடன், கியூப்பையும் கண்டித்துள்ளனர்.

இது குறித்து நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரான டி.சிவா செய்தியாளர்களிடம் பேசும்போது,
“எங்களுடைய பெரிய ஆதாரமாக இருக்கக்கூடிய கியூப்பிலிருந்து படம் வெளியாகி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எங்களுக்கு முறையான பதில் வேண்டி கியூப்பிற்கு வந்திருக்கிறோம். ஃபைனான்ஸ் தரப்பிலிருந்து ‘கருப்பு’ தயாரிப்பாளருக்கு ஓவர் பிரெஷ்ஷர் வரும் போது, இப்போது கியூப் சைடிலிருந்து பிரச்னை ஏற்பட்டால் தயாரிப்பாளர் என்ன ஆவார்?
கியூப் தரப்பினர் தவறு நடந்ததை ஒப்புக்கொண்டு, இது ஒரு ஹீயூமன் எரர் என்றும் தவறுதலாக ஒருவர் இதைச் செய்துவிட்டார் என்கின்றனர். ஆனால் இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. 140 கோடி படத்தின் தலையெழுத்தை ஒரு staff (பணியாளர்) மாற்றுவதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. இதைப் போல ஒரு எடிட்டரின் கவனக் குறைவு ‘ஜன நாயகன்’ படம் வெளியாகிவிட்டது என்று சொன்னாங்க.
ஒரு ஸ்டாஃப்பின் கவனக்குறைவினால் ‘கருப்பு’ வெளியாகிவிட்டது என்று சொன்னால், இது எங்கே போய் நிற்கும்? அதனால் எங்களது கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறோம். இதை எப்படி சரி பண்ணி கொடுக்கப்போறீங்கனு கியூப்பிடம் கேட்டிருக்கிறோம். இது மிகப்பெரிய இழப்பு என்பதால் ஒரு இழப்பீடும் கேட்கிறோம்.

தனி நபரின் ஒருவரால் பல கோடி முதலீடு செய்யப்பட்ட ஒரு படம் வெளியாவதால், தயாரிப்பாளர்களுக்கு என்ன பாதுக்காப்பு இருக்கிறது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் சிவா.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தயாரிப்பாளார் ‘கலைப்புலி’ எஸ்.தாணு பேசியதாவது, “க்யூப் மீது எங்களுக்கு அபரிமிதமான நம்பிக்கை உண்டு. அவங்களோட கரியரில் இப்படி நடந்தது கிடையாது. அவங்களுடைய தவறு இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். அதற்கான உண்டான நஷ்டத்தைத் தங்களது லீகல் டீமிடம் கலந்து பேசி செய்து கொடுப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்” என்கிறார்