நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகாவட்டும் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 4 அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
ஆனாலும், அணு உலை அமைந்துள்ள வளாகத்துக்கு அருகிலேயே கல் குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. குவாரிகளுக்கு வைக்கப்படும் வெடிகள் வெடிக்கும் போது ஏற்படும் நில அதிர்வுகளால் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் வாழ்கின்றனர்.
இந்த நிலையில், ராதாபுரம் கால்வாய் கடைமடை விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகனிடம் மனு அளித்தனர். அதில்,”கூடங்குளம் அணுமின் நிலையம் நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்பு அமைப்பாக இருப்பதால், அதன் அருகில் நடைபெறும் வெடிப்பு பணிகள் மற்றும் அவற்றால் ஏற்படும் நில அதிர்வுகள் குறித்து முழுமையான அறிவியல் ஆய்வு மேற்கொள்வது மிகவும் அவசியம்.

மக்கள் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். எனவே,, கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் குவாரி வெடிப்புகளின் தாக்கம் குறித்து உரிய நிபுணர் குழுவின் மூலம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அந்த ஆய்வு நிறைவடையும் வரை புதிய குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.