மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது நமக்குப் பிறகு நாம் சேர்த்துவைத்த இந்தப் பணம் நம் வாரிசுதாரர் (Nominee) யாருக்கும் போய்ச் சேரவேண்டும் என்பதை அவசியம் சொல்லியாக வேண்டும். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது ஏன் நாமினி நியமிப்பது மிக மிக அவசியம் என்று சொல்கிறது செபி?

மும்பையில் வசித்து வந்தார் ராமகிருஷ்ணா. 2000-ஆம் ஆண்டு முதலே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவந்தார். அடுத்த 20 ஆண்டுகளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ரூ.2 வரை சேர்த்துவிட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவருடைய ரிட்டயர்ட்மென்ட் வருவதாக இருந்தது. அப்போது அந்தப் பணத்தில் இருந்து எஸ்.டபிள்யு.பி முறையின் மூலம் பணத்தை எடுத்து செலவு செய்துகொள்ளலாம் என்பது அவருடைய திட்டம்.
ஆனால், கோவிட் பெருந்தொற்று காலத்தில் அவர் எதிர்பாராத விதமாக இறந்துபோனார். அவர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவந்தது அவருடைய குடும்பத்துக்குத் தெரியும் என்பதால், அந்தப் பணத்தில் இருந்து ஒரு பகுதியை எடுக்க குடும்ப உறுப்பினர்கள் முற்பட்டனர். ஆனால், ராமகிருஷ்ணா தனக்குப் பிறகு தன்னுடைய முதலீட்டுப் பணம் யாருக்குப் போய்ச் சேரவேண்டும் என்பதைத் திட்டவட்டமாக சொல்லும் நாமினியை அவர் நியமிக்கவில்லை. அவர் தன் மனைவியின் பெயரைச் சொல்லியிருந்தால், அவருக்குப் பிறகு அவருடைய பணத்தை எளிதாக எடுத்துச் செலவு செய்திருக்கலாம்.
ஆனால், நாமினியாக ராமகிருஷ்ணா யாரையும் நியமிக்கவில்லை என்பதால், ராமகிருஷ்ணா சேர்த்துவைத்த பணத்தை எளிதில் எடுக்கமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்டனர். சட்டப்பூர்வமான வாரிசு இவர்தான் என்பதை எடுத்துச் சொல்லி, அலையாய் அலைந்துதான் ராமகிருஷ்ணா சேர்த்த பணத்தை அவருடைய மனைவியின் பெயருக்கு மாற்றி, எடுக்க முடிந்தது.
ராமகிருஷ்ணா விஷயத்தில் நடந்த நல்ல விஷயம் என்னவெனில்,அவருடைய மனைவி தவிர வேறு யாரும் அவர் சேர்த்துவைத்த பணத்துக்கு சொந்தம் கொண்டாடவில்லை. ராமகிருஷ்ணா மியூச்சுவல் ஃபண்டில் ரூ.2 கோடி சேர்த்து வைத்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்ட யாரோ ஒரு பெண் பணத்தைப் பறிக்கும் நோக்கத்தில் அவரும் பணம் கேட்டு, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை அணுகியிருந்தால், அது பெரிய சட்டப் பிரச்னையாக மாறி, நியாயமான வாரிசுதாரர் பணத்தைப் பெறுவதற்கு பல ஆண்டுகள் கோர்ட்டில் அலைய வேண்டியிருந்திருக்கும்.
ராமகிருஷ்ணாவின் மனைவிக்கு ஏற்பட்ட சிக்கல் உங்கள் மனைவிக்கும், குடும்பத்தினருக்கும் ஏற்படக் கூடாது என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் இப்போது செய்துவரும் முதலீட்டுக்கு நாமினியை நியமிப்பது மிக மிக அவசியம். நாமினியை நியமிப்பது மிகச் சிறிய நடவடிக்கைதான். ஆனால், அந்த சின்ன விஷயத்தை நாம் செய்யாமல்விட்டால், நாம் சேர்த்து வைத்த பணம் நம் குடும்பத்தினருக்குப் போய்ச் சேராமலே போக வாய்ப்பு உண்டு என்பதை நாம் மறக்கக்கூடாது.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நாமினி தொடர்பான விதிமுறைகள் காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே வருகின்றன. மியூச்சுவல் ஃபண்டில் புதிதாக முதலீடு செய்கிறவர்கள், நாமினி நியமிக்காமல் முதலீட்டைத் தொடங்க முடியாது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குமுன் முதலீட்டைத் தொடங்கியவர்கள் இதுவரை நாமினியை நியமிக்கவில்லை எனில், உடனடியாக நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் மேற்கொண்டு முதலீட்டைத் தொடர முடியாத நிலை ஏற்படும்.
முன்பு இரண்டு பேரை மட்டுமே நாமினியாக நியமிக்க முடியும் என்கிற நிலை இருந்தது. பிற்பாடு 10 பேர் வரை நாமினியாக நியமிக்க முடியும் என்று விதிமுறையை மாற்றியது. சமீபத்தில் நடைமுறைக்கு வந்த விதிமுறையின்படி, ஒரு முதலீட்டாளர் அதிகபட்சமாக 4 பேரை மட்டும் நாமினியாக நியமிக்க முடியும் என்று சொல்லியிருக்கிறது. ஆனால், ஒருவர் ஒரே ஒருவரைக்கூட நாமினியாக நியமிக்கலாம். உதாரணமாக, ஒரு முதலீட்டாளர் தன் மனைவியை நாமினியாக நியமித்தால், அந்த முதலீட்டாளர் சேர்த்த பணம் அனைத்தும் (100%) அவர் மனைவிக்கே போய்ச் சேரும். மனைவி தவிர, மகன், மகளைக்கூட நாமினியாக நியமிக்கலாம். அப்போது மனைவிக்கு 50%, மகனுக்கு 25%, மகளுக்கு 25% எனப் பிரித்துத் தரலாம். யாருக்கு எத்தனை சதவிகித பணம் போய்ச் சேரவேண்டும் என்பதை முதலீட்டாளே முடிவு செய்யலாம். இவருக்கு இத்தனை சதவிகிதம் தரவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை!
ஆனால், மியூச்சுவல் முதலீட்டில் நாமினியை நியமிப்பது கட்டாயமா என்று கேட்டால், இல்லை. ‘நான் யாரை நாமினியாக நியமிக்க விரும்பவில்லை’ என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் ‘Option to Opt-Out’ என்கிற காலத்தை டிக் செய்யவும் அனுமதித்திருக்கிறது செபி. அப்படி செய்யும்பட்சத்தில், நீங்கள் சேர்த்த பணம் யாருக்குப் போய்ச் சேரவேண்டும் என்பதை நீங்கள் எழுதும் உயில்தான் முடிவு செய்யும்.
மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் செய்யும் முதலீடு உங்களுக்குப்பிறகு உங்கள் குடும்பத்தினருக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் போய்ச் சேரவேண்டும் எனில், இன்றே நாமினி தொடர்பான விஷயங்களை நீங்கள் சரியாகச் செய்திருக்கிறீர்களா என்பதை உங்கள் டிஸ்ட்டிரிபியூட்டரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, அவசியம் நாமினியை நியமியுங்கள்!

லாபம் வாட்ஸ் அப் குருப்பில் சேர…..
வருகிற 19-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 11 மணி முதல் 1 மணி நடக்கும் ஆன்லைன் கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புகிறீர்களா? இந்த லிங்க்கை கிளிக் செய்து உங்கள் பெயரை உடனே பதிவு செய்துகொள்ளுங்கள்!
வாட்ஸ் அப் குருப்பில் சேர…
Labham Whatsapp Channel
‘லாபம்’ வாட்ஸ் அப் சேனலில் இணைய விருப்பமா? பின்வரும் லிங்க்கினை கிளிக் செய்யுங்கள்…
https://whatsapp.com/channel/0029VbAPqXkIt5rnQOIS4k3o
Labham Youtube Video: www.youtube.com/@labham_money
Labham Website: www.labham.money/tamil