
தங்க முதலீட்டில் குறுகிய காலத்தில் கிடைத்த லாபத்தைப் பங்குச் சந்தையில் கிடைத்த குறுகிய கால மற்றும் நீண்ட கால நஷ்டத்துடன் சரிசெய்யலாம். அதாவது, லாபத்துக்குக் கட்ட வேண்டிய மூலதன ஆதாய வரியை நஷ்டத்துடன் சரிசெய்து, மூலதன ஆதாய வரியைக் கட்டாமல் இருக்கலாம்! உதாரணமாக, ஒருவர் தங்கத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்து, ஒரே ஆண்டில் 50% லாபம் அதாவது, ரூ.5 லட்சம் லாபம் பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்த ரூ.5 லட்சத்திற்கு 20% வரி கட்ட வேண்டும். ரூ.5 லட்சம் லாபத்தில் ரூ.1.25 லட்சத்திற்கு எந்த வரியும் கட்டத் தேவை இல்லை. மீதமுள்ள ரூ.3.75 லட்சத்துக்கு 20% என ரூ.75 ஆயிரத்தை மூலதன ஆதாய வரியாகக் கட்ட வேண்டும்.
ஆனால், உங்களுக்குப் பங்குச் சந்தையில் நஷ்டம் வந்திருக்கிறது. உதாரணமாக, பங்குச் சந்தையில் ரூ.10 லட்சத்தை நீங்கள் முதலீடு செய்திருக்கிறீர்கள். சந்தை இறக்கம் காரணமாக, உங்கள் முதலீடு 15% நஷ்டம் கண்டுள்ளது. இதன் காரணமாக, உங்கள் முதலீடு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.8.50 லட்சமாகக் குறைந்துள்ளது. ஆக, உங்களுக்கு ரூ.1.50 லட்சம் நஷ்டம். இந்த நஷ்டத்தைத் தங்கத்தில் கிடைத்த லாபத்துடன் சரிசெய்யலாம். எப்படி?
தங்கத்தில் உங்களுக்குக் கிடைத்த லாபம் ரூ.3.75 லட்சம். பங்குச் சந்தையில் உங்களுக்குக் கிடைத்த நஷ்டம் ரூ.1.50 லட்சம். லாபத்தில் இருந்து நஷ்டத்தைக் கழித்தால், மீதமிருப்பது ரூ.2.25 லட்சம். இந்த ரூ.2.25 லட்சத்துக்குக் குறுகிய கால மூலதன ஆதாய வரி 20% அதாவது, ரூ.45 ஆயிரம் மூலதன ஆதாய வரியைக் கட்டினால் போதும். ரூ.30 ஆயிரம் வரியை மிச்சப்படுத்த முடிகிறது என்பது பெரிய விஷயம்தானே!
ஆனால், இதில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், நீண்ட கால முதலீட்டின் மூலம் கிடைத்த லாபத்தை நீண்ட கால நஷ்டத்துடன் மட்டுமே சரிசெய்ய முடியும். குறுகிய காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்துடன் சரிசெய்ய முடியாது.