Lockup Death: உடலை வாங்காமல் 4 நாள்களாகப் போராடும் சபரிவர்மன் குடும்பம்; எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே ஈத்தங்காட்டைச் சேர்ந்தவர் 35 வயதான மாற்றுத்திறனாளி சபரி வர்மன். இவர் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்றதாகக் கூறி கடந்த ஜூலை 9-ம் தேதி தென் தாமரைக்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து சுமார் 200 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்ட நிலையில் அடித்து கொலைச்செய்யப்பட்டு ஜூலை 13-ம் தேதி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். சிறையில் அடித்துகொலைச் செய்யப்பட்ட சபரிவர்மனின் மரணத்துக்கு நீதிகேட்டு மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். சபரிவர்மனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த வழக்கு குறித்து நாகர்கோவில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி தலைமையில் நீதித்துறை விசாரணை தொடங்கப்பட்டது. மேலும், சிறப்பு மருத்துவக் குழு மூலம் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆரம்ப உடற்கூறு ஆய்வு அறிக்கையில் மொத்தம் 19 காயங்கள் பதிவாகியுள்ளன. இந்த கொலை வழக்கில் சிறை காவலர்கள் ஜெகன், சிவகுமார், சுரேஷ் என்ற திருமலை நம்பி மற்றும் 8 சிறை கைதிகள்  உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே குட்கா வழக்கில் சபரிவர்மனை கைது செய்த தென் தாமரைக்குளம் காவல் நிலைய எஸ்.ஐ ப்ரைட் ப்ளசிங் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடையில் குட்கா விற்பனை நடப்பதாகவும், அதை கண்டுகொள்ளாமல் இருக்க எஸ்.ஐ லஞ்சம் கேட்டதாகவும், கொடுக்காததால் தினமும் கடையில் இருந்த சபரிவர்மனை முறைத்துக்கொண்டே சென்றதாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டிய நிலையில் அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட சபரிவர்மனின் குடும்பத்தினர்

அப்பாவியான தனது கணவரை கொன்று விட்டார்களே என சபரி வர்மனின் மனைவி அனந்தவள்ளி கதறினார். தங்களுக்கு நியாயம் வேண்டும், உரிய பாதுகாப்பு வேண்டும் என சபரிவர்மனின் சகோதரி கவுதமி கூறிவருகிறார். சபரிவர்மன் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அதனை அரசின் சார்பில் உத்தரவாதம் வழங்க வேண்டும் என உறவினர்கள் போராடி வருகின்றனர். இதற்கிடையே சபரிவர்மன் மரணத்துக்கு நீதிகேட்டு கன்னியாகுமரி – திருவனந்தபுரம் நான்குவழி சாலையில் உறவினர்கள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறையில் கொலைச் செய்யப்பட்ட சபரிவர்மன்

இதையடுத்து குமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் சபரிவர்மனின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். வாடகை வீட்டில் வசிக்கும் சபரிவர்மனின் குடும்பத்தினருக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்கி வீடு கட்டி தருகிறோம், அரசின் சார்பில் நிவாரணம் வழங்குகிறோம், சபரி வர்மன் மனைவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கிறோம். குழந்தையின் கல்வி  செலவை கலெக்டரும், எஸ்.பி-யும் ஏற்று கொள்வதாகவும் உறுதியளிக்கப்பட்டது. ஆனாலும், சிறை மரணம் குறித்து முதல்வர் இதுவரை வாய் திறக்காமல் உள்ளதாகவும், அவரது துறையிலேயே இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளதால் இதுகுறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் எனவும் இந்த வழக்கை திசை திருப்ப முயற்சி நடைபெறுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் சபரிவர்மனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சபரிவர்மன் இறந்து 4 நாள்கள் ஆகியும் அவர் உடலை வாங்காமல் குடும்பத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *