Cricket
oi-Yogeshwaran Moorthi
சென்னை: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2வது சதம் விளாசி அசத்தியுள்ளார். ஜெய்ஸ்வால் கடைசியாக ஆடியுள்ள 3 ஒருநாள் போட்டிகளில் இது 2வது சதமாகும். இதனால் விராட் கோலி அணிக்கு திரும்பினாலும், ஜெய்ஸ்வால் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்பது உறுதியாகியுள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 44.2 ஓவர்களில் 218 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டாகியது. ஆஃப்கானிஸ்தான் அணிக்காக தனியாளாக போராடி ஷாகிடி 131 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து கடைசி பேட்ஸ்மேனாக ஆட்டமிழந்தார்.

இதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா – ஜெய்ஸ்வால் தொடக்கம் கொடுத்தனர். இருவருமே அதிரடியாக விளையாடிய சூழலில், ஆஃப்கானிஸ்தான் அணி பவுலர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் தடுமாறினர். அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 47 பந்துகளில் அரைசதம் எடுத்து அசத்தினார். மறுபக்கம் ஜெய்ஸ்பால் 38 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
முதல் விக்கெட்டுக்கு இந்தக் கூட்டணி 170 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்துவிட்டது. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 69 பந்துகளில் 3 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 79 ரன்களை எட்டியது. இதன்பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வாலுக்கு உறுதுணையாக ஆடினார். ஒரு கட்டத்தில் ஜெய்ஸ்வால் சதம் அடிக்கும் வாய்ப்பு உருவாகியது.
94 ரன்கள் எடுத்திருந்த போது, ஜெய்ஸ்வால் அதிரடியாக ஒரு சிக்சரை விளாசி தனது 2வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். இதன்பின் அந்த ஓவரிலேயே ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசி இந்திய அணியையும் வெற்றி பெற வைத்தார். 83 பந்துகளில் சதத்தை கடந்த ஜெய்ஸ்வால், மொத்தமாக 86 பந்துகளில் 3 சிக்ஸ், 14 பவுண்டரி உட்பட 110 ரன்களை குவித்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் விளையாடிய கடைசி 3 போட்டிகளில் அடிக்கும் 2வது சதம் இதுவாகும். அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வாலின் 10வது சதம் இதுவாகும். 24 வயதாகும் ஜெய்ஸ்வால் டெஸ்டில் 7 சதங்கள், டி20ல் ஒரு சதம், ஒருநாள் கிரிக்கெட்டில் 2 சதங்களை விளாசி இருக்கிறார். இந்த சதம் காரணமாக விராட் கோலி இந்திய அணிக்கு திரும்பினாலும், ஜெய்ஸ்வால் பேக் அப் ஓப்பனராக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.