கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து நேற்று மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்டு பேசிய அமைச்சர் விக்னேஷ், “பார் நடத்துபவர்களை எந்தெந்த இடத்தில் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தெரியும்.
மதுவிலக்கு துறைதான் இருப்பதிலேயே புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட துறையாக இருக்கிறது. டாஸ்மாக் துறை என்றால் அதை பார்ப்பதிலேயே ஏளனமாக பார்க்கிறார்கள். எனக்கே இப்படி என்றால் உங்களது குழந்தைகள் எங்க அப்பா டாஸ்மாக்கில் வேலை செய்கிறார் என்று சொல்வது கஷ்டமாக இருக்கும்.
டாஸ்மாக் ஆரம்பித்ததன் நோக்கமே கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும். மக்கள் வேறு பாதையில் சென்று விடக்கூடாது என்பதற்காகத்தான், வருவாய் மட்டுமே என்பது நோக்கம் அல்ல.

23 ஆண்டுகளாக டாஸ்மாக் என்றாலே சம்பாதிப்பதற்கும், தவறு செய்வதற்கு மட்டும்தான் இந்தத் துறை என்று மாற்றிவிட்டார்கள். பத்து ரூபாய் பாட்டிலுக்கு வாங்கினாலும், அதிலிருந்து 1 ரூபாய், அல்லது 1.5 ரூபாய் உங்களுக்கு வரும். மற்றவை வேறு யாருக்கோ செல்கிறது. மற்றவர்களுக்கு சம்பாதித்து கொடுத்துவிட்டு பழி வாங்குவது நீங்கள்தான். அதனால்தான் முதலில் பாட்டிலுக்கு பத்து ரூபாயை ஒழிக்க வேண்டும். பலர் இதை தவறாக புரிந்து கொண்டார்கள், நீங்கள் வந்த உடனேயே பத்து ரூபாய் வாங்கத்தானே செய்கின்றார்கள் என்கிறார்கள்.