இப்போது அனைத்து தேவைகளுக்கும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவது வாடிக்கையாகிவிட்டது. தேநீர் கடை, நடைபாதை வியாபாரிகள் என அனைவரும் ஆன்லைன் மூலம் பணம் பெறும் வசதியை வைத்திருக்கின்றனர். இப்போது அதிகமானோரிடம் பணமே கையில் இருப்பது கிடையாது. எந்த செலவாக இருந்தாலும் ஆன்லைன் மூலம் செய்கின்றனர்.
மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுபம் என்பவர் ஆட்டோவில் பயணம் செய்தார். அவர் ஆட்டோவில் இருந்து இறங்கிய பிறகு அதற்கான பணத்தை அவசரமாக ஆன்லைன் மூலம் செலுத்திவிட்டு சென்றுவிட்டார்.
அவர் சர்வதேச வாடிக்கையாளர் ஒருவரை பார்க்க சென்றார். ஆனால் அங்கே அந்த வாடிக்கையாளரை பார்க்க முடியாமல் வெளியில் வந்தபோது அவரை இறக்கிவிட்ட ஆட்டோ டிரைவர் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தார்.
சுபம் வெளியில் வந்ததும் அவரை அழைத்து, `அதிக அளவில் பணம் அனுப்பிவிட்டீர்கள்” என்று கூறி சுபம் அனுப்பிய ரூ.15682 ஐ அப்படியே திருப்பி அனுப்பி விட்டார். ஆட்டோ டிரைவருக்கு கொடுக்க வேண்டிய தொகை ரூ.156 மட்டுமேயாகும். அந்த தொகையை கூட ஆட்டோ டிரைவர் அல்தாப் எடுத்துக்கொள்ளவில்லை.
சுபம் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து LinkedIn யில் பகிர்ந்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள பதிவில், “ஒரு நாள் ஒரு சர்வதேச வாடிக்கையாளரை சந்திப்பதற்கான காலை 7 மணி மீட்டிங்கிற்கு தாமதமாக வந்ததால், அவசரத்தில் ஆட்டோ சவாரிக்கு கொடுக்க வேண்டிய 156 ரூபாயை கூகுள் பே மூலம் பணம் செலுத்திவிட்டு அவசரமாக சென்றுவிட்டேன். ஆனால் நான் ரூ.156க்கு பதில் 15682 ரூபாயை தவறுதலாக செலுத்தி இருந்தேன். பணம் செலுத்திய பிறகு எவ்வளவு செலுத்தினேன் என்று பார்க்காமல் சென்றுவிட்டேன்.
நான் சந்திப்பதற்காக சென்ற சந்திப்பும் நடக்கவில்லை. எனவே அதிருப்தியுடன் திரும்பி வந்தபோது என்னை இறக்கிவிட்ட ஆட்டோ டிரைவர் அங்கேயே நின்று கொண்டிருந்தார். அவர் என்னை அணுகி நான் பணம் அதிகமாக செலுத்திவிட்டதாக கூறி நான் அனுப்பிய தொகை முழுவதையும் எனக்கு திருப்பி அனுப்பி வைத்தார். அவருக்கான ஆட்டோ கட்டணத்தை எடுத்துக்கொள்ளும்படி கூறினேன். அதனையும் எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார்” என்று பதிவிட்டுள்ளார்.
அதன் பிறகு ரூ.500 அனுப்பி வைத்ததாகவும் சுபம் குறிப்பிட்டுள்ளார். ஆட்டோ டிரைவரின் செயலை நெட்டிசன்கள் அனைவரும் பாராட்டியுள்ளனர். இப்படியும் சில ஆட்டோ டிரைவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.