மதுரை அழகர் கோவில் சாலை பகுதியிலுள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “மதுரை மாநகராட்சி பகுதிகளில் சில இடங்களில் கழிவுநீரை வெளியேற்றுவதற்கான தற்காலிக திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினோம்.
மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து மாவட்ட ஆட்சியரும், ஆணையாளரும் இணைந்து மதீப்பீடு செய்யும் பணிகளையும் செய்து அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநகராட்சியில் எங்கெங்கு தவறு இழைக்கப்பட்டது எனக் கண்டறிந்து அதற்கான வழக்குகளும் பதிவு செய்யப்படும். அடைக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பார்கள் சட்டவிரோதமாகச் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, விதிமீறுபவர்கள் மீது கடுமையான வழக்குகள் பதிவு செய்யப்படும்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தெளிவாகக் கூறியிருக்கிறோம் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்; இரண்டு வருடத்திற்கு முன்பாக பத்து வருடத்திற்கு முன்பாக எந்தச் சூழல் உள்ளதோ; அதையேதான் தொடர வேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள் மக்கள் அமைதியைத்தான் விரும்புகிறார்கள் ; இதுதான் அரசின் கொள்கையும் எந்த மாற்றும் கருத்தும் கிடையாது. எந்த மதவாத சக்திகளும் உள்ளே வந்து அரசியல் செய்ய 100% அனுமதிக்க மாட்டோம்” என்றார்.
முதலமைச்சர் செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பது ஏன் என்ற கேள்விக்கு, ‘’செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என நடைமுறையே கிடையாது. சொந்த விளம்பரத்திற்காக இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக கடந்த காலங்களில் தினசரி செய்தியாளர்களைச் சந்தித்து வந்தார்கள்.
எங்கள் முதல்வர் மக்களை தினசரி சந்திக்கிறார். செய்தியாளர்களைச் சந்தித்து தான் அரசியல் நடத்த வேண்டும் என்று இல்லை. மக்களுக்கு என்னென்ன தெளிவுபடுத்த வேண்டுமோ அதனை அந்தந்தக் காலத்தில் தெளிவுபடுத்தி வருகிறார்.
செய்தியாளர்களை நாங்கள் யாரும் புறந்தள்ளவில்லை குறைத்து சொல்லவில்லை. செய்தியாளர்களைச் சந்தித்து இருக்க வேண்டும் என்கிற அடையாளத்தை நீங்களாக ஃபிக்ஸ் பண்ணிக் கொண்டீர்கள்.
ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகரத்தில் கண்டிப்பாக விசாரணை நல்லபடியாக முடிய வேண்டும் எனக் காத்துக் கொண்டிருக்கிறோம். என்னென்ன டேட்டாக்கள் காணாமல் போய்விட்டது அதற்கான கணக்கீடுகள் நடந்து கொண்டிருக்கிறது. காவல்துறை முழு அளவில் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
முதல்வர் அதனை தினந்தோறும் கண்காணித்து வருகிறார். எந்த இடத்தில் யாரையும் தப்பிக்க விடக்கூடாது ஹார்ட் டிஸ்க் கிடைத்தால் அதனை டேட்டாவை ரெக்கவரி செய்யும் பிராசஸ் நடந்து கொண்டிருக்கிறது. எந்த டேட்டா காணாமல் போனது என்பது குறித்து அறிவிப்போம்.

ஹார்ட் டிஸ்க் திருடு போனது என்றவுடன், செந்தில் பாலாஜி மட்டும் ஏன் உடனே பேசினார் எனத் தெரியவில்லை. செந்தில் பாலாஜி திருடினார் என யாராவது சொன்னார்களா செந்தில் பாலாஜி சொல்லித்தான் நடந்தது என யாராவது சொன்னார்களா?
காவல்துறை விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் கூறினேன். உடனடியாக செந்தில் பாலாஜி ஏன் ஆஜர் ஆனார் தெரியவில்லை. செந்தில் பாலாஜி ஆஜராவது எல்லாருக்கும் சந்தேகம் வருகிறது. செந்தில் பாலாஜி பிரஸ்மீட்டில் பேச வேண்டிய கட்டாயம் ஏன்? என்ன பயம் அவருக்கு ஹார்ட்டிஸ்க் தொலைந்தவுடன் முதல்நாளாக செந்தில்பாலாஜி ஏன் இது தொடர்பாக பேச வேண்டியது உள்ளது” என்றார்.