தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்றதையடுத்து, அதன் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அதே போல இந்தத் தேர்தலில் 47 இடங்களில் வெற்றிபெற்ற அ.தி.மு.க, எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலும் இரண்டாக உடைந்தது.
13.05.2026 அன்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தபோது, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 22 எம்.எல்.ஏ-க்கள் எதிர்த்தனர்.
அதேசமயம் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க-வுக்கு ஆதரவளித்தனர். அதன் காரணமாக விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சி 144 எம்.எல்.ஏ-க்களுடன் மெஜாரிட்டியை நிரூபித்தது.

அதையடுத்து த.வெ.க-வுக்கு ஆதரவு கொடுத்த எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், அருண்மொழித்தேவன் உள்ளிட்ட பலரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
மேலும், நீக்கப்பட்டிருந்தவர்களால் ஓரம் கட்டப்பட்டிருந்தவர்களுக்கும், கட்சியால் டம்மியாக்கப்பட்டிருந்தவர்களுக்கும் பொறுப்புகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில், கடலூர் வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த எம்.சி.சம்பத்தின் பதவி பறிக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் எம்.சி.தாமோதரனுக்கு வழங்கப்பட்டது.
அதேபோல மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த அருண்மொழித்தேவனின் பதவி பறிக்கப்பட்டு, நெய்வேலி தொகுதியில் எம்.எல்.ஏ சொரத்தூர் ராஜேந்திரனுக்கு கொடுக்கப்பட்டது.