ஹலோ வாசகர்களே..!
இளைய தலைமுறையினர் மீது எப்போதுமே ஒரு புகார் உண்டு. ‘சம்பாதிப்பதைவிட செலவழிப்பதிலேயே அவர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள், நிதித் திட்டமிடலே அவர்களிடம் இல்லை’ என்பதே அந்தப் புகார். ஆனால், அந்த எண்ணத்தைப் பொய்யாக்கியிருக்கிறது, சமீபத்திய ஆய்வு ஒன்று.
‘How India Saves 2026’ என்ற பெயரில் Stable Money மற்றும் YouGov நிறுவனம் இணைந்து நடத்திய அந்த ஆய்வில், இந்தியர்களின் சேமிப்பு மற்றும் முதலீட்டுப் பழக்கங்கள் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்துள்ளன. இதில் கலந்துகொண்டவர்களில் 83% பேர் சேமிப்பு அல்லது முதலீட்டில் ஈடுபடுவதாகச் சொல்கிறது அந்த ஆய்வு. அதிலும், இவர்களில் 65% பேர் 30 வயதுக்கு முன்பும், 39% பேர் 18 – 25 வயதுக்குள்ளும் சேமிக்கத் தொடங்கியுள்ளனர் என்பது மகிழத்தக்க செய்தி.
‘ஜென் எக்ஸ்’ தலைமுறைப் பிரிவில் 35% பேர் ஓய்வுக்கால நிதி உருவாக்கத்துக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், ‘ஜென் ஸி’ பிரிவினரில் 26% பேர் சொந்த வீடு வாங்குவதையே முதன்மை நிதி இலக்காகக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இது, இளைய தலைமுறையினரிடம் ஏற்பட்டுவரும் முக்கிய நிதி மாற்றத்தைக் காட்டுகிறது.
இந்தச்சூழலில், இந்தியக் குடும்பங்களின் கடன் வாங்கும் விகிதம், ஜி.டி.பி-யில் சுமார் 46% வரை உயர்ந்துள்ளதை இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இது வரலாறு காணாத மாற்றம். அதே நேரம், ஒட்டுமொத்த கடனில் தனிநபர் கடன், கிரெடிட் கார்டு, வாகனக் கடன், நுகர்வு கடன் மட்டுமே 58 சதவிகிதமாக இருப்பதும் மிகவும் ஆபத்தானது. இந்தியக் குடும்பங்களின் கடன் குறித்த புள்ளிவிவரங்கள், இளைஞர்களின் நுகர்வு, செலவு முறை போன்றவற்றில் அவர்கள் இன்னும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
இளைய தலைமுறையினரிடம் முதலீடு, சேமிப்பு ஆர்வம் இருக்கிறது. ஆனால், தங்களை திசைதிருப்பும் நுகர்வு சந்தையில் இருந்து அவர்கள் தங்கள் உணர்வுகளை சுயகட்டுப்பாட்டுடன் கையாள வேண்டும். அவசியத்துக்கும் ஆடம்பரத்துக்கும் வித்தியாசத்தை உணர வேண்டும். எதிர்பாராத வேலை இழப்பு, மருத்துவச் செலவு, குடும்பப் பொறுப்புகள் போன்ற நெருக்கடிகளைச் சமாளிக்கும் நிதி வலிமை அவசியம். அதீத ஆர்வத்தால் புரியாத முதலீட்டுத் திட்டங்களிலும், அதிக லாபம் தருவதாகக் கூறும் ஆபத்தான திட்டங்களிலும் பணத்தைப் போடக் கூடாது.
இளைஞர்களுக்கு நாம் சொல்ல வருவது, அதிகம் சம்பாதிப்பது மட்டுமே செல்வத்தை உருவாக்காது; சம்பாதிக்கும் பணத்தைச் சரியாக நிர்வகிப்பதில்தான் இருக்கிறது வெற்றி. முதல் சம்பளத்திலிருந்தே சேமிக்கத் தொடங்குங்கள். சிறிய தொகையாக இருந்தாலும் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள். கடனைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். முதலீடு செய்யும் ஒவ்வொரு திட்டத்தையும் புரிந்துகொண்டு செயல்படுங்கள். வெகு சீக்கிரமே நீங்கள் பொருளாதார பலம் பெறுவீர்கள்!