Nanayam Vikatan – 26 July 2026 – பணவீக்கத்தால் சவாலாகும் எதிர்காலம்… இப்போதே விழித்துக்கொள்ள வேண்டும்! | guidance for inflation to challenge an investment strategy

Spread the love

கடந்த சில ஆண்டுகளாக கட்டுக்குள் இருந்த, பணவீக்கம் மீண்டும் உயர ஆரம்பித்திருக்கிறது. கொரோனா, போர்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு, காலநிலை மாற்றம், விநியோகச் சங்கிலி பாதிப்புகள் என ஒன்றன் பின் ஒன்றாக வந்த அதிர்வுகளால் அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாக உயர்ந்து விட்டது. ஜூன் மாத மொத்த விலைப் பணவீக்கம் 9.87 சதவிகிதமாக உயர்ந்திருப்பது கவலை தருகிறது. சில்லறைப் பணவீக்கமும் 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதனால் உருவாகியுள்ள விலைவாசி அழுத்தம், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் தீவிரமாகப் பிரதிபலிக்கத் தொடங்கியிருக்கிறது.

பண வீக்கம் என்பது, காய்கறி விலை உயர்வோ, பெட்ரோல் விலை ஏற்றமோ மட்டுமல்ல. பணத்தின் வாங்கும் சக்தியைக் குறைப்பதே அதன் பிரதான விளைவு. இன்று 100 ரூபாய்க்கு வாங்கும் பொருளை, சில ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு மடங்கு விலைக்கு வாங்க வேண்டிய நிலை உருவாகும். பணவீக்கத்தின் வேகத்துக்கு நம் வருமானமும் உயரவில்லை என்றால், வாழ்க்கைத் தரம் நிலைகுலைந்து விடும். பண வீக்கம் உருவாக்கும் தாக்கத்தை எதிர்கொள்ள சிலர் செலவுகளைக் குறைப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவர். சிக்கனம் அவசியம்தான். ஆனால், பணவீக்கத்தை வெல்ல அது மட்டும் போதாது. வருமானத்தை வளர்க்கும் முதலீடுகளும் அவசியம்.

வங்கி சேமிப்புக் கணக்கில் பணத்தை வைத்திருப்பது பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால், நீண்ட காலத்தில் அந்தப் பணத்தின் உண்மையான மதிப்பு குறைந்துவிடும் என்பதே உண்மை. அதனால்தான், பணவீக்கத்தைவிட அதிக வருமானம் தரும் முதலீட்டு வாய்ப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். நீண்ட காலத்தில் பங்குகள், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற சொத்து வகைகள் பணவீக்கத்தை மிஞ்சும் வருமானத்தை அளித்துள்ளன. அதேபோல், கடன் முதலீடுகள், தங்கம், அவசரகால நிதி ஆகியவற்றையும் சமநிலையுடன் வைத்திருக்கும் அஸெட் அலொகேஷன் அவசியம்.

பணவீக்கம் உயரும்போது வட்டி விகிதங்களும் உயர வாய்ப்புள்ளது. வீட்டுக் கடன், தனிநபர் கடன், கிரெடிட் கார்டு நிலுவை போன்றவை குடும்ப நிதியில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும். எனவே, தேவையற்ற கடன்களைத் தவிர்ப்பதும், அவசியமான கடன்களை விரைவாகக் குறைப்பதும்தான் புத்திசாலித்தனம். சம்பளம் உயர்ந்தால், அதே வேகத்தில் வாழ்க்கை முறையையும் மாற்றும் Lifestyle Inflation, பணவீக்கத்தைவிட ஆபத்தானது. வருமானம் உயரும்போது செலவுகளை அதிகரிக்காமல் சேமிப்பையும் முதலீட்டையும் உயர்த்த வேண்டும். அப்போதுதான் செல்வம் உருவாகும்.

பணவீக்கத்தை நம்மால் தடுக்க முடியாது. ஆனால், அதன் பாதிப்புகளிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள திட்டமிட்ட செலவு, தொடர்ச்சியான முதலீடு மற்றும் நீண்ட காலப் பார்வை கைகொடுக்கும். எதிர்காலம் சவாலாக இருக்கப் போகிறது. அதை எதிர்கொள்ள நாம் இப்போதிருந்தே தயாராக வேண்டும்.

– ஆசிரியர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *