இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில், பாலியல் தொல்லை கொடுத்து வந்த மாணவர்கள் பாதிக்கப்பட்ட மாணவரை வகுப்பறையில் நிர்வாணமாக்கி பிறப்புறுப்பில் ரப்பர் பேண்ட், ஸ்கேல் ஆகியவற்றால் கொடூரமாக அடித்துள்ளனர். மிளகாய் பொடி தூவியும், பபிள் கம் ஒட்டியும் சித்ரவதை செய்துள்ளனர். இதனையடுத்து 9 மாணவர்களையும் கைது செய்த போலீஸார் தூத்துக்குடி சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டையில் உள்ள இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.
வகுப்பறையில் மாணவர் ஒருவருக்கு சக மாணவர்கள் பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தலைமை ஆசிரியருக்கு தெரிய வந்தும் சம்மந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராணியிடம் பேசினோம், “கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் எங்களுக்கு இந்த தகவல் கிடைத்தது. இந்த சம்பவம் கிராபட் வகுப்பின் போது ஆசிரியருக்கு தெரிந்துள்ளது. அவர்தான் பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு தகவல் கூறியுள்ளனர். இதுதொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியரிடம் விளக்க அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.