உலகம் முழுக்க உள்ள இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்து எதில் முதலீடு செய்கிறார்கள் தெரியுமா?
வங்கி பிக்சட் டெபாசிட்டுகளில்தான். உலகம் முழுக்க உள்ள நாடுகளில் உள்ள இந்தியர்கள் இந்திய வங்கி பிக்சட் டெபாசிட்டுகளில் சேர்த்து வைத்திருக்கும் மொத்த ரூ.13.9 லட்சம் கோடி. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரையிலான 9 மாதக் காலத்தில் மட்டும் கிட்டத்தட்ட ரூ.89,000 கோடியை வங்கி பிக்சட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமூட்டும் புள்ளிவிவரம்.இதில் ரூ.3 லட்சம் கோடி கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே முதலீடு செய்திருக்கிறார்கள். உலகம் முழுக்க உள்ள பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் வங்கி பிக்சட் டெபாசிட்டுகளில் எத்தனை ஆயிரம் கோடிகளை முதலீடு செய்திருக்கிறார்கள் என்கிற துல்லியமான புள்ளிவிவரம் இல்லை என்றாலும், குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் கோடியையாவது வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்திருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்திய மக்களும் சரி, தமிழர்களும் சரி, ஏன் இத்தனை ஆயிரம் கோடி ரூபாயை வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள், அதற்கு என்ன காரணம் என்பது முக்கியமான கேள்வி.

பொதுவாக, இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்களாக இருந்தாலும் சரி அல்லது தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வைத்து ரிஸ்க் எடுக்க மிகவும் தயங்குவார்கள். அவர்களைப் பொருத்தவரை, அவர்களுடைய முக்கியமான எதிர்பார்ப்பு, கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தைக் கொஞ்சம்கூட இழந்துவிடக் கூடாது என்பதுதான். இந்த நிலையில், வங்கி பிக்சட் டெபாசிட்டில் வைத்திருக்கும் பணத்துக்குப் பாதுகாப்பு என்பது முழுமையாக இருப்பதால், அதில் மட்டுமே தங்கள் மொத்தப் பணத்தையும் வைத்திருக்க நினைக்கிறார்கள்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது வெளிநாடுகளில் வசிக்கும் பலரது பழக்கமாக இருந்தது. இப்போது பலரும் இந்தியாவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விரும்புவதில்லை. காரணம், 10, 20 ஆண்டுகளுக்கு முன்பு ரியல் எஸ்டேட் தந்த லாபம் தற்போது கொடுப்பதில்லை. தவிர, அதைப் பராமரிப்பது, பத்திரமாக வைத்துக் கொள்வது எனப் பலரும் பல பிரச்னைகளை சந்திப்பதால், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதைப் பலரும் தவிர்த்தே வருகின்றனர். மேலும், இந்தியர்கள் அதிகம் விரும்புகிற மாதிரி வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அதிகளவில் தங்கம் வாங்க விரும்புவதில்லை. எனவே, தங்கள் பணத்தை வங்கி பிக்சட் டெபாசிட்டுகளில் வைத்திருக்கவே வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் தமிழர்களும் அதிகம் விரும்புகின்றனர்.

தவிர, முக்கியமான இன்னொரு விஷயம், என்.ஆர்.இ வங்கி டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு வரி எதுவும் இல்லை. இந்தியாவில் வசிப்பவர்கள் இந்திய வங்கிகளில்பிக்சட் டெபாசிட்டுகளில் வைத்திருக்கும் பணத்துக்குக் கிடைக்கும் வட்டி வருமானமானது தங்கள் வருமானத்துடன் சேர்க்கப்பட்டு, அது எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு வரி கட்ட வேண்டும். உதாரணமாக, ஒருவர் 10% வரி வரம்புக்குள் வந்தால், 10% வரி கட்ட வேண்டும். 30% வரி வரம்புக்குள் வந்தால், 30% வரி கட்ட வேண்டும்.
ஆனால், என்.ஆர்.இ வங்கிக் கணக்கில் வைக்கப்படும் பிக்சட் டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு ஒருவர் எந்த வரியும் கட்ட வேண்டியதில்லை என்பதை வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மிக அனுகூலமான விஷயமாகப் பார்க்கின்றனர். என்.ஆர்.இ வங்கி பிக்சட் டெபாசிட்டுக்கு 6.5% மட்டுமே வட்டி கிடைக்கிறது என்றாலும், இந்த வட்டி வருமானத்துக்கு எந்த வரியும் கட்ட வேண்டியதில்லை என்பது அவர்களுக்குப் பிடித்தமான விஷயமாக இருக்கிறது. இந்தக் காரணங்களால்தான் வங்கி பிக்சட் டெபாசிட்டுகளில் முதலீடாகும் பணம் ஆண்டுதோறும் வேகமாக அதிகரித்து வருகிறது.
வங்கி பிக்சட் டெபாசிட்டில் இப்படி சில நன்மைகள் இருந்தாலும், ஒரு இந்தியர் அல்லது தமிழர் ஒருவரிடம் இருக்கும் பணத்தையும் வங்கி பிக்சட் டெபாசிட்டில் மட்டுமே வைத்திருப்பது சரியா என்று கேட்டால், சரி அல்ல என்பதுதான் பதில். மேலோட்டமாகப் பார்த்தால், வங்கி பிக்சட் டெபாசிட்டில் நன்மைகள் மட்டுமே இருப்பது போலத் தோன்றும். அதில் உள்ள நெகட்டிவ்-ஆன விஷயங்கள் நமக்கு யாரும் சொல்வதில்லை.
வங்கி பிக்சட் டெபாசிட்டில் முதல் நெகட்டிவ்-ஆன விஷயம். பணவீக்கத்தைவிட அதிக வட்டி வருமானம் கிடைக்காமல் போவது. வங்கி பிக்சட் டெபாசிட் வருமானம் மூலம் 6.5%. பணவீக்கம் 6% என்கிறபோது, வங்கி பிக்சட் டெபாசிட் நம் பணத்தின் மதிப்பைக் குறைக்காமல் வைத்திருக்க மட்டுமே உதவுமே தவிர, நம் பணத்தின் மதிப்பை அபரிமிதமாக அதிகரித்து, நாம் செல்வத்தை சேர்க்க நமக்கு உதவே உதவாது!
வங்கி பிக்சட் டெபாசிட் மூலம் கிடைக்கும் வருமானம் உத்தரவாதமானது என்று நாம் நினைக்கிறோம். பணவீக்கம் குறையக் குறைய வட்டி விகிதத்தையும் ஆர்.பி.ஐ குறைக்கும். அப்போது வங்கி பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டியும் குறையும். எனவே, வங்கி பிக்சட் டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் ஒரே போல எப்போதும் கிடைக்கும் என்று நினைக்கக் கூடாது!

ஆக, பணவீக்கம் அளவுக்கே வருமானம், அதற்கும் உத்தரவாதம் இல்லை என்கிறபோது, அதை மட்டுமே நம்பி வெளிநாட்டுத் தமிழர்கள் இருப்பது அவசியம்தானா? ஒருவரிடம் பணம் அனைத்தையும் வங்கி பிக்சட் டெபாசிட்டில் மட்டுமே வைத்திருப்பதற்கு பதிலாக நீண்ட காலத்தில் 12% லாபம் தர வாய்ப்புள்ள மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து, அதிக வருமானத்தைப் பெற நினைக்கலாமே! மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் குறுகிய காலத்தில் முதலீடு செய்த பணத்தை 10% – 25% வரை இழப்பதற்கு வாய்ப்பு இருந்தாலும், நீண்ட காலத்தில் ஏறக்குறைய எல்லா ஃபண்டுகளும் 12% மேல் லாபம் தந்திருப்பதை யாராவது மறுக்க முடியுமா? வங்கி பிக்சட் டெபாசிட் மீது அதிகமாக வைத்திருக்கும் நம்பிக்கையால் அதில் அதிகமான பணத்தை முதலீடு செய்வதும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றிய தவறான எண்ணங்களாலும்தான் அதில் முதலீடு செய்ய மிகவும் யோசித்து வருகின்றனர். வங்கி பிக்சட் டெபாசிட் என்பது நமக்கு நன்கு தெரிந்த முதலீடு. மியூச்சுவல் ஃபண்ட் இப்போதுதான் பிரபலமாகிவரும் முதலீடு. அவ்வளவுதான் வித்தியாசம்.
எனவே, நம் பணம் அனைத்தையும் வங்கி பிக்சட் டெபாசிட்டில் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்கிற எந்த அவசியமும் இல்லை. நம்மிடம் இருக்கும் பணத்தில் 20% – 30% வரை மட்டும் அவசரத் தேவைக்கு வங்கி பிக்சட் டெபாசிட்டில் வைத்திருந்துவிட்டு, மீதப் பணத்தை நீண்ட கால நோக்கில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், நஷ்டமும் வராது. 12% வரை லாபமும் கிடைக்கும். இனியாவது வங்கி டெபாசிட்தான் நமக்கு ஒரே கதி என்று நினைப்பதைத் தமிழர்கள் மாற்றிக்கொள்வார்களா? அப்படிக் கொண்டால், அதிக லாபம் பெறுவார்கள். இல்லாவிட்டால், பணவீக்கம் அளவுக்கு மட்டுமே வருமானத்தைப் பெற்று, நஷ்டப்படவே செய்வார்கள்!