இந்தியாவில் அனைத்து ரூபாய் நோட்டுக்களிலும் மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம் பெற்று இருக்கும். ஆனால் மகாத்மா காந்தியின் புகைப்படம் 500 ரூபாய் நோட்டில் வித்தியாசமான முறையில் இடம் பெற்று இருப்பது போன்று சூரத்தை சேர்ந்த பெண் சமூக வலைத்தள பக்கத்தில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். இதையடுத்து மகாத்மா காந்தியின் உருவம் ரூ.500 ரூபாய் நோட்டில் ஆட்சேபகரமான முறையில் கையாளப்பட்ட ரீல்ஸ் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதற்காக சிம்ரன் படேல்(47) கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட சிம்ரன், காந்தி ஜெயந்திக்கு முன்னதாக அக்டோபர் 1 ஆம் தேதி மதியம் தனது சமூக ஊடக பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டார். சிம்ரன் கைது செய்யப்பட்டதையும் சூரத் போலீஸார் எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
அதில் சிம்ரன் வெளியிட்ட ஆட்சேபகரமான வீடியோ மற்றும் அவர் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்ட வீடியோக்களை பகிர்ந்துள்ளனர். சிம்ரன் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார். அதனையும் போலீஸார் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து இருந்தனர்.
சிம்ரன் வெளியிட்ட வீடியோ வைரலானத்தை தொடர்ந்து சமூக சேவகர் தர்மேஷ் காமி, சிம்ரன் ரீல்ஸ் குறித்து சூரத் போலீஸில் புகார் செய்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்னணு வடிவில் ஆபாசமான விஷயங்களை வெளியிடுவது அல்லது அனுப்புவது தொடர்பான தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 67வது பிரிவின் கீழ் சிம்ரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிம்ரன் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணத்திற்குப் பிறகு சூரத்தில் குடியேறினார் என்று போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோக்களை சிம்ரன் வெளியிட்டு வருகிறார்.!