Oneindia Explainer: கச்சா எண்ணெய் 80 டாலருக்கு சரிந்தும் ஏன் பெட்ரோல் விலை குறையவில்லை? இடியாப்ப சிக்கல்! | Oneindia Explainer: Why petrol diesel price wont cut soon in India; eventhough global crude oil price fall below 80 USD

Spread the love

Business

oi-Prasanna Venkatesh

உலகளாவிய வர்த்தகச் சந்தையிலும், எரிசக்தித் துறையிலும் கடந்த 3 மாதங்களாக நிலவி வந்த உச்சக்கட்டப் பதற்றங்களுக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது. பல வாரங்களாக இழுபறியில் இருந்த அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் இறுதியாக இரு நாடுகளுக்கும் இடையே அதிகாரப்பூர்வமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது மூலம் முறைப்படி போர் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த வெற்றியின் நேரடி விளைவாக, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கற்பனை செய்ய முடியாத வேகத்தில் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. வளைகுடாப் பகுதியில் அமைதி திரும்பியுள்ளதால், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மூன்று மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக ஒரு பேரல் 80 டாலருக்கும் கீழ் சரிந்து முதலீட்டாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு இன்னும் குறைக்கவில்லை என்பது மக்களின் முக்கியமான கேள்வியாக உள்ளது. கச்சா எண்ணெய் விலை 120 டாலரில் இருந்து 80 டாலர் வரையில் குறைந்திருக்கும் வேளையில் மத்திய அரசு குறைக்காத காரணம் என்ன? இதேபோல் சந்தையில் விலைவாசியும் குறையவில்லை..? இந்தியா எப்படி இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்டு உள்ளது?

Petrol diesel Why petrol diesel price not falling India crude oil below 80 USD India Strait of Hormuz shipping delay oil companies recover losses petrol price reduction India global crude price drop impact India Hormuz toll Iran strategic petroleum reserve refill India fuel price cut delayed Brent crude below 80 effect on petrol 80 80

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து!

அமெரிக்க – ஈரான் நாடுகளுக்கும் மத்தியிலான போர் நிறுத்தத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மிக முக்கிய அம்சமாக, ஈரான் நாட்டு எண்ணெய் கப்பல்களுக்கும், அந்நாட்டின் துறைமுகத்திற்கும் எதிராக அமெரிக்கக் கடற்படை விதித்திருந்த கடல்வழி முற்றுகை (Naval Blockade) உடனடியாக முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, பல மாதங்களாக முடங்கிக் கிடந்த ஈரானின் எண்ணெய் டாங்கர் கப்பல்கள், சர்வதேசக் கடல் வர்த்தகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக எவ்விதக் தடையுமின்றி தற்பொழுது சுதந்திரமாக நகரத் தொடங்கியுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைதி ஒப்பந்தம் குறித்த முதற்கட்ட அறிவிப்பு வெளியானது முதலே, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக உள்நுழையும் மற்றும் வெளியேறும் சர்வதேசக் கப்பல்களின் எண்ணிக்கை வெறும் 4-லிருந்து அசுர வேகத்தில் 29 ஆக அதிகரித்துள்ளது. இதில் 29 கப்பல்கள் என்பது நேற்றைய நிலவரம்.

இதன் மூலம் உலக நாடுகளுக்கு தேவையான கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கைத் தன்வசம் வைத்துள்ள ஹார்முஸ் வழித்தடம் மீண்டும் இயல்பு நிலைக்கு வர துவங்கியுள்ளது உறுதியாகியுள்ளது.

கச்சா எண்ணெய் விலை சரிந்தது..

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பாகிஸ்தான், கத்தார் போன்ற நாடுகளின் முயற்சிகளால் இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது, சர்வதேசப் பெஞ்ச்மார்க் கச்சா எண்ணெயான பிரெண்ட் க்ரூட் ஆயில் 120 டாலருக்கு மேல் இருந்த நிலையில் தற்போது வெறும் 78.50 டாலர் என்ற மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது.

இதேபோல் அமெரிக்காவின் டபிள்யூடிஐ (WTI) கச்சா எண்ணெய் விலையும் 76 டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது. போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் 118 டாலர் வரை எகிறி உலக நாடுகளைப் பணவீக்க பயத்தில் உலுக்கிய கச்சா எண்ணெய், தற்போது 80 டாலருக்கும் கீழ் சரிந்துள்ளது.

இந்தியாவில் ஏன் பெட்ரோல் விலை குறையவில்லை?

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை இந்த அளவிற்குச் சரிந்த போதிலும், இந்தியப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான IOCL, BPCL மற்றும் HPCL ஆகியவை உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இதுவரை எவ்விதக் குறைப்பையும் அறிவிக்காமல் மௌனம் சாதிப்பது சாமானிய மக்களிடையே பெரும் கேள்வியையும் அதிருப்தியையும் எழுப்பியுள்ளது.

இதற்கு பல்வேறு வர்த்தகப் பின்னணிக் காரணங்களை இந்தியப் பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் மிகத் தெளிவாக விளக்கியுள்ளனர்.

முதலாவதாக, கடந்த சில மாதங்களாக வளைகுடாப் போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை அசுர வேகத்தில் உயர்ந்த போது, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அந்த விலையேற்றத்தின் முழுப் பாரத்தையும் சாமானிய நுகர்வோர் மீது உடனடியாகச் சுமத்தாமல் தங்களுக்குள் கணிசமாக உள்வாங்கிக் கொண்டன.

இதனால் அந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்ட மாபெரும் நிதி இழப்புகளை ஈடுசெய்யவும், தங்களின் இழந்த லாப வரம்பை (Marketing Margins) மீண்டும் சீரமைக்கவும் தற்போதைய இந்த விலை வீழ்ச்சியை பயன்படுத்தி வருகின்றன.

இரண்டாவதாக, ரீடைல் எரிபொருள் விலையானது வெறும் கச்சா எண்ணெய் விலையை மட்டும் சார்ந்தது அல்ல; அது சுத்திகரிப்பு செலவுகள் (Refining Margins), சர்வதேசக் கடல்வழிப் போக்குவரத்துக் கட்டணங்கள் (Freight Costs), அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கலால் வரிகளைச் சார்ந்தே இறுதி செய்யப்படுகிறது.

முக்கிய சேமிப்பு

மேலும், போர் அச்சம் நீங்கியவுடன் உலக நாடுகள் அனைத்தும் தங்களின் அவசரக் கால எண்ணெய் இருப்பை (Strategic Petroleum Reserves) மீண்டும் நிரப்ப போட்டிப் போடும் என்பதால், சந்தையில் திடீரென புதிய தற்காலிகத் தேவை ஏற்பட்டு விலை மீண்டும் மாறக்கூடும்.

எனவே, இந்தச் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரப் பதற்றங்கள் முற்றிலும் நீங்கி, சந்தை முழுமையாக நிலைபெறுவதை (Stabilize) உறுதி செய்த பிறகே, எண்ணெய் நிறுவனங்கள் சில்லறை விலைக் குறைப்புப் பயன்களைச் சாமானிய மக்களுக்கு மாற்றும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

உற்பத்தி சார்ந்த பிர்ச்சனைகள் அதிகம்

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும், அதன் மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி உடனடியாக அதிகரிக்காது. இதற்கு முக்கிய காரணம் மத்திய கிழக்கு நாடுகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள எண்ணெய் கிணறுகளை மீண்டும் இயக்குவதற்கு நேரம் எடுக்கும். குறிப்பாக, போர் காரணமாக வளைகுடா நாடுகளில் சில எண்ணெய் வயல்களை முழுமையாக உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதில் முக்கியமாக கத்தார் எரிவாயு தளம் ஈரான் ட்ரோன் தாக்குதல் காரணமாக பாதிப்புக்குள்ளாகி மாத கணக்கில் முடங்கியுள்ளது.

இவை அனைத்தும் ஸ்விட்ச் போட்டது போல் உடனடியாக இயங்கி முழு வேகத்தில் உற்பத்தியை துவங்க முடியாது. முழுமையான அளவில் இயக்குவதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்று எரிசக்தி ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதனால், உலகளாவிய எண்ணெய் விநியோகம் உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பில்லை.

கடந்த மூன்றரை மாதங்களாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், மத்திய கிழக்கு நாடுகளில் தினசரி 1 கோடி பேரல்களுக்கும் அதிகமான எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த உற்பத்தியை மீண்டும் முந்தைய அளவுக்கு கொண்டு வர நிறுவனங்களுக்கு நேரம் எடுக்கும்.

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் ஒப்பீட்டளவில் விரைவாக உற்பத்தியை மீட்டெடுக்க முடியும் என்றாலும், அனைத்து நாடுகளும் ஒரே அளவில் விரைவான மீட்சியை அடைய முடியாது.

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்கள் மூன்று மாதங்களில் 70 சதவீத உற்பத்தியை அடையலாம். ஆறு மாதங்களில் 90 சதவீதத்தை எட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி 10 சதவீத உற்பத்தியை மீட்டெடுப்பதற்கு கணிசமான கால அவகாசம் தேவைப்படும்.

ஈரான் டோல் கட்டணம்

இதேவேளையில் அமெரிக்கா – ஈரான் கையெழுத்திட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தில் ஹார்முஸ் வழித்தடம் முழுமையாக ஈரான் கட்டுப்பாட்டுக்கு விடுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஈரான் நீண்ட காலமாக திட்டமிட்டு வரும் டோல் கட்டணத்தை பாதுகாப்பு காப்பீடு வாயிலாக ஹார்முஸ் மூலம் பயணிக்கும் அனைத்து கப்பல்களிடமும் வசூலிக்கும். இதனால் எண்ணெய் இறக்குமதி கட்டணம் அதிகரிக்கும், கச்சா எண்ணெய் விலையும் அதிகரிக்கும்.

இந்த கட்டணத்தையும் உறுதி செய்யப்பட்டு தான் மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு சொன்ன தகவல்..

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. குறைந்த விலையிலான கச்சா எண்ணெய் இந்தியாவை வந்தடைய இன்னும் சில நாட்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பெட்ரோலியத் துறை இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதை அரசு கவனத்தில் கொண்டுள்ளதாகவும், உலக சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆனால் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், அதை உடனடியாக பெட்ரோல், டீசல் விலையில் பிரதிபலிக்க முடியாது என்றார். குறைந்த விலை கச்சா எண்ணெய் இந்தியாவை வந்தடைய ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும், இதற்கு சில நாட்கள் ஆகும் என்றும் அவர் கூறினார்.

பெட்ரோல் விலை உயர்வும்.. அரசுக்கான இழப்பும்..

சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7.5 வரை நான்கு கட்டங்களாக உயர்த்தப்பட்டது. இதில் ரூ.3.94 மட்டுமே தற்போது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், மீதமுள்ள தொகை உடனடியாக திரும்பப் பெற முடியாது என்றும் சுரேஷ் கோபி தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் பிப்ரவரி மாதம் போர் தொடங்கியதில் இருந்து, எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தன. மத்திய அரசு இந்த நஷ்டத்தில் ரூ.12,000 கோடி வரை ஈடுசெய்துள்ளது. மாநில அரசுகள் கலால் வரியைக் குறைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த இழப்பை ஈடு செய்யும் வரை எரிபொருள் விலை குறைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதை மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

$120 டூ $77 – கச்சா எண்ணெய்

பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீதான போர் துவங்கினாலும், இந்தியாவில் மத்திய அரசு மே 15ல் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. ஏப்ரல் இறுதியிலேயே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $120-ஐத் தாண்டியது. ஆனால் ஜூன் 18 அன்று அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, எண்ணெய் விலை மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது. ஜூன் 18 அன்று பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை $77.11-க்கு குறைந்தது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரானிய எண்ணெய் இறக்குமதி மீதான அமெரிக்க தடை நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ரஷ்ய எண்ணெய் இறக்குமதி மீதான அமெரிக்க விலக்கு ஜூன் 17 அன்று காலாவதியானது, ஆயினும் தொடர் ஏற்றுமதி நடந்து வருகிறது.

நுகர்வோர் பொருட்கள்

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 80 டாலருக்கு கீழ் சரிந்தாலும், அன்றாட பயன்பாட்டு பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக மின்னணு சாதனங்களின் விலை உடனடியாக குறைய வாய்ப்பில்லை என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே அதிக விலைக்கு வாங்கப்பட்ட மூலப்பொருட்களின் இருப்பு நிறுவனங்களிடம் 2 முதல் 3 மாதங்களுக்கு இருப்பதால், அதன் தாக்கம் முதலில் தீர வேண்டும் என கூறப்படுகிறது.

உற்பத்தி துறையில் விலை குறைய வேண்டும் என்றால் மூலப்பொருள் விலைகள் சில மாதங்கள் நிலையாக இருக்க வேண்டும். அதுவரையில் உடனடி விலை குறைப்புக்கு வாய்ப்பு இல்லை. கப்பல் போக்குவரத்து சிக்கல்களால் முன்கூட்டியே அதிக அளவில் மூலப்பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன. மூன்று மாதங்களுக்குப் பிறகே விலைகளை மறுபரிசீலனை செய்வோம் என அனைத்து உற்பத்தி நிறுவனங்களும் தங்களுடைய நிலைப்பாட்டை கொண்டு உள்ளது.

இதனால் பண்டிகைக் காலமான செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் மட்டுமே நுகர்வோருக்கு விலை குறைப்பின் பலன் கிடைக்க வாய்ப்புள்ளதாக தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர். அதுவும் மூலப்பொருள் செலவுகள் தொடர்ந்து குறைந்த நிலையில் இருந்தால்தான் சாத்தியம் என கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *