ஒருகாலத்தில் “குறைந்த விலையில் பிரீமியம் அனுபவம்’ என்ற அடையாளத்துடன் ஸ்மார்ட்போன் சந்தையை அதிரவைத்த OnePlus, இன்று உலகம் முழுவதும் தனது எதிர்காலம் குறித்த கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய சூழலில் உள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பா சந்தைகளில் OnePlus தனது செயல்பாடுகளை நிறுத்தவுள்ளதாக வெளியான தகவல்கள், இந்தியப் பயனர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மேலும், 2027-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்தும் OnePlus வெளியேறலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
OnePlus-ன் தாய் நிறுவனமான OPPO, தனது உலகளாவிய வணிகத்தை மறுசீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, OnePlus அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் புதிய தயாரிப்புகளை நிறுத்தி, பின்னர் இந்தியா உள்ளிட்ட பிற சர்வதேச சந்தைகளிலிருந்தும் படிப்படியாக விலகும் திட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட OnePlus, ‘Never Settle’ என்ற வாசகத்துடன் ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமானது. அதிக விலை கொண்ட போன்களுக்கு மாற்றாக, குறைந்த விலையில் அதே தரமான வசதிகளை வழங்கியதால், ‘Flagship Killer’ என்ற பட்டத்தைப் பெற்றது.