Paracetamol: குழந்தைகளுக்கான மருந்தில் கூடுதல் ஆல்கஹாலா? – பொது சுகாதாரத்துறை சொல்லும் விளக்கம்! | The Health Department has issued a clarification regarding the rumor that circulated about Paracetamol.

Spread the love

குழந்தைகளின் உடல்நல பாதிப்புகளுக்கு மருத்துவர்கள் பாராசிட்டமால் சிரப் வகைகளைப் பரிந்துரைப்பது வழக்கம். இந்த பாராசிட்டமால் மருந்தில் அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் கலந்திருப்பதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது. இந்த நிலையில், பொது சுகாதாரத்துறை வதந்திகளுக்கு விளக்கமளித்திருக்கிறது. அதன்படி, `”பாராசிட்டமால் சிரப் மருந்து தமிழ்நாடு மருத்துவப் சேவை கழகத்தின் (டி.என்.எம்.எஸ்.சி.) அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தால் பரிசோதிக்கப்பட்டு தரமானது என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு ஆய்வகமும் இதனை தரமானது என்று சான்றளித்துள்ளது. குழந்தைகளுக்கான மருந்துகளில் ஆல்கஹால் சரியான விகிதத்திலேயே பயன்படுத்தப்படுகிறது. ‘பாராசிட்டமால்’ மருந்தை எளிதில் கரைக்க ஆல்கஹால் பயன்படுத்துவது வழக்கம்.

இந்த ஆல்கஹாலின் அளவு 10 சதவீதம் என்ற வரம்புக்குள்தான் இருக்கும். உதாரணத்திற்கு, 60 மி.லி. அளவு கொண்ட மருந்து பாட்டிலில் 10 சதவீதம் அதாவது 6 மி.லி. அளவிலேயே ஆல்கஹால் பயன்பாடு இருக்கும். ’95 சதவீதம் ஆல்கஹால்’ என்பது ஆல்கஹாலின் தூய தன்மையை குறிப்பிடும் சொல் மட்டுமே. தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் கிடங்குகளில் அனைத்து மருந்துகளும் 180 நாட்களுக்கு ஒருமுறை வழக்கமான மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இது தவிர அரசு மருத்துவ நிறுவனங்களில் உள்ள மருந்துகளும் தரத்தை உறுதி செய்ய அவ்வப்போது கள ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. தரமான மருந்து என்று உறுதி செய்யப்பட்ட பிறகே இந்த மருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வினியோகிக்கப்படுகின்றன. எனவே, மக்களிடையே தவறான தகவலை பரப்ப வேண்டாம்.” எனக் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *