பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அவரின் மகன் அன்புமணி இடையே நீடித்து வந்த 18 மாத மோதல் நேற்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. குடும்ப உறுப்பினருக்கு பா.ம.க- வில் பதவி வழங்குவதில் தொடங்கி, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க ஆதரவு, சுயேச்சை நிலைப்பாடு வரை தந்தையும் மகனும் எதிரெதிர் துருவங்களில் நின்று வார்த்தைகளால் மோதிக்கொண்டனர்.

ராமதாஸ் அணி, அன்புமணி அணி என இரண்டாக பிளவுபட்டுக்கிடந்த சூழலில் ராமதாஸ் அணிக்கு பக்கபலமாக நின்றவர் சேலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ அருள். ராமதாஸின் தீவிர ஆதரவாளராக காட்டிக்கொண்டது மட்டுமில்லாமல், அன்புமணியை கடுமையாக எதிர்த்து பகையை சம்பாதித்தவர்.
தன்னை கட்சியை விட்டு நீக்கியபோதும், “என்னை நீக்க அன்புமணிக்கோ அவரது ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கோ அதிகாரம் இல்லை” என்று பகிரங்கமாக சவால் விடுத்தார்.