அனுஷ்கா என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவர் ஒரு இடத்திற்குச் செல்ல ராபிடோ பைக் சேவையைப் பயன்படுத்தியுள்ளார். பயணம் முடிந்த பிறகு, அந்த பைக் ஓட்டுநர் அந்தப் பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு ஆடையைப் பாராட்டியும், அழகாக இருப்பதாகவும் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். தொடர்ந்து அவரிடம் தனிப்பட்ட கேள்விகளைக் கேட்டு, அடுத்த நாள் சந்திக்க முடியுமா என்றும் கேட்டுள்ளார்.

பயணம் முடிந்த பிறகு ஒரு அந்நிய நபர், அதுவும் சேவை வழங்கும் நிறுவனத்தைச் சேர்ந்தவர், தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டது அந்தப் பெண்ணுக்கு மிகுந்த மன உளைச்சலையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியதையடுத்து, ராபிடோ நிறுவனம் அதிகாரபூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளது. அந்த ஓட்டுநரின் செயல் தங்களது விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிறுவனம் உறுதியளித்துள்ளது. இருப்பினும், “பயணிகளின் மொபைல் எண்கள் ஓட்டுநர்களுக்கு எப்படித் தெரிய வருகிறது?” என்ற பாதுகாப்பு மற்றும் தனியுரிமை சார்ந்த கேள்விகள் வலுவாக எழுந்துள்ளன.
நம் பாதுகாப்பு நம் கையில்
இப்படியான சம்பவங்களைக் கேட்கும்போதே நமக்குள் ஒருவித பயத்தையும் கோபத்தையும் உண்டாக்குகின்றன. ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தும் போது நம் பாதுகாப்பை உறுதி செய்ய சில முக்கியமான வழிமுறைகள்:
1. எண் மறைப்பு வசதி (Number Masking)
பெரும்பாலான நிறுவனங்கள் `Number Masking’ வசதியைக் கொண்டுள்ளன. ஓட்டுநரைத் தொடர்பு கொள்ளும்போது ஆப் மூலமாகவே போன் செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் உண்மையான மொபைல் எண் அவருக்குத் தெரியாது.
2. இருப்பிடப் பகிர்வு (Share Live Location)
நீங்கள் பயணம் செய்யத் தொடங்கியதும், உங்கள் பயணத்தின் விவரங்களையும் நேரடி இருப்பிடத்தையும் உங்கள் குடும்பத்தினருக்கோ அல்லது நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கோ உடனடியாகப் பகிருங்கள்.

3. அவசர காலம் (SOS Button)
செயலியில் உள்ள SOS அல்லது `Emergency’ பட்டன் எங்கே இருக்கிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளுங்கள். ஏதேனும் அசம்பாவிதம் எனத் தோன்றினால் தயங்காமல் அதை அழுத்துங்கள்.
4. பொது இடத்தில் இறங்குதல்
முடிந்தவரை உங்கள் வீட்டின் வாசலில் இறங்குவதைத் தவிர்த்து, சற்றுத் தள்ளி ஆட்கள் நடமாட்டம் உள்ள பொதுவான இடத்தில் இறங்குவது பாதுகாப்பானது.
இன்று ஒரு பெண் தனியாகப் பயணம் செய்வது ஒரு போராட்டமாக மாறிவிட்டது. “நீ அணிந்திருந்த ஆடைதான் காரணம்?” அல்லது “நீ ஏன் அவரிடம் சிரித்துப் பேசினாய்?” எனப் பாதிக்கப்பட்ட பெண்ணையே சமூகம் கேள்வி கேட்கும் போக்கு இன்னும் மாறவில்லை.

யாரோ ஒரு அறிமுகமில்லாதவர் உங்கள் எல்லைக்குள் நுழைய முயலும்போது, உங்கள் உள்ளுணர்வு சொல்வதைக் கேளுங்கள். பயம் வருவது இயல்பு, ஆனால் அந்த பயத்தை தைரியமாக மாற்றி குரல் கொடுங்கள். அனுஷ்கா செய்ததைப் போல, நடந்த குற்றங்களை வெளியே சொல்லுங்கள். அமைதியாக இருந்தால், இன்னொருவருக்கும் இதேபோல் கொடுமை நடக்க வழிவகுக்கும்.
பாதுகாப்பு என்பது வெறும் சட்டம் சார்ந்தது மட்டுமல்ல, அது நம் அடிப்படை உரிமை.