“வேட்பாளர்கள் முதல் வாக்குகள் வரை அனைத்தும் ஜாதி" – சாதி மதமற்றவன் சான்றிதழ் பெற்ற பார்த்திபன்

Spread the love

நடிகர் பார்த்திபன் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது தன்னை ஒரு குறிப்பிட்ட சாதி, மொழி சார்ந்தவராக அடையாளப்படுத்திக்கொண்டு பேசினார். இதற்கு சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்தார். அதைத் தொடர்ந்து, `நான் அப்படி திட்டமிட்டு கூறவில்லை. அது வாய் தவறி வந்த வார்த்தைகள்’ என விளக்கமளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம், தான் “ஜாதி, மதமற்றவன் (No Caste, No Religion) என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கக் கோரி வேளச்சேரி வட்டாட்சியரிடம் பார்த்திபன் மனு அளித்திருந்தார். பின்னர் இது சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது.

பார்த்திபன்
பார்த்திபன்

மார்ச் 25 அன்று அவர் நேரில் ஆஜராகி உறுதிமொழிப் பத்திரம் வழங்கிய போதிலும், தேர்தல் நேரத்தைக் காரணம் காட்டி அதிகாரிகள் சான்றிதழ் வழங்கக் காலதாமதம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஆர். கணேசன் ஆலோசனையின்படி, பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, இது போன்ற ஒரு சமூக மாற்றத்தை முன்னெடுக்கும் பார்த்திபனின் முயற்சியைப் பாராட்டியதோடு, வரும் ஏப்ரல் 29, 2026-க்குள் அவருக்கு உரியச் சான்றிதழை வழங்க வேண்டும் எனச் சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். மேலும், இது குறித்த தகவலை அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டார்.

இந்த தீர்ப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன், “முதலாவதாக, ஒரு குழந்தை பிறந்தவுடனேயே அழத் தொடங்குகிறது. அதன் பின்னரே அக்குழந்தைக்கு அறிவு வளர்கிறது. ஒருவேளை அந்த அழுகையே அறிவின் தேடலுக்காக இருக்குமோ என்று நான் சிந்திக்கத் தொடங்கினேன். தாய்க்கும் குழந்தைக்குமான அந்தத் தொப்புள் கொடி உறவு துண்டிக்கப்பட்ட அந்த நிமித்தமே, அவ்வுறவின் பரிமாணம் மாறிவிடுகிறது. தாய் எத்தகைய ஜாதி, மதம் அல்லது கொள்கையைச் சார்ந்தவராக இருந்தாலும், பிறக்கின்ற அந்தப் பிஞ்சு குழந்தை தனக்கென ஒரு தனி உலகத்தையும், ஒரு சமூகத்தையும் கட்டமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதாக நான் கருதுகிறேன்.

parthiban's shirt design
parthiban’s shirt design

எனக்கு எப்போதுமே ஜாதி மற்றும் மதத்தின் மீது பெரிய ஈடுபாடு இருந்ததில்லை. சிலருக்கு ஜாதி வெறி இருக்கலாம், ஆனால் எனக்கு அத்தகைய உணர்வுகள் கிடையாது. எனினும், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் நான் தவறுதலாகக் குறிப்பிட்ட ஒரு சொல், எனக்குப் பெரும் மனவருத்தத்தை ஏற்படுத்தியது. அந்தத் தருணத்தில்தான் எனக்கு அந்த அழுகை வந்தது. அந்த அழுகையிலிருந்துதான் இந்தத் தெளிவு பிறந்தது. ‘இந்த ஜாதி, மத அடையாளங்களே நமக்குத் தேவையில்லை. அவ்வாறான அடையாளங்கள் இல்லாத ஒரு சான்றிதழை நாம் ஏன் பெறக்கூடாது?’ என்று எண்ணினேன்.

ஆனால், எதார்த்தத்தில் அத்தகையச் சான்றிதழைப் பெறுவது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. அதற்காக வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் வட்டாட்சியர்களிடம் நான் விண்ணப்பித்தேன். ஜாதி, மத பேதமற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய நாளாகவே இதனை நான் பார்க்கிறேன். இச்சான்றிதழைப் பெறுவதில் பல போராட்டங்கள் இருந்த காரணத்தினால், இறுதியாக நீதிமன்றத்தின் உதவியை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது நீதிமன்றத்தின் வாயிலாக எனக்கு ஒரு மகிழ்ச்சியான தீர்ப்பு கிடைத்துள்ளது. வரும் ஏப்ரல் 29-ம் தேதிக்குள் எனக்கு அச்சான்றிதழை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

பார்த்திபன்
பார்த்திபன்

இதனை வெறும் ஒரு காகிதமாக நான் கருதவில்லை. ஒரு புதிய மாற்றத்திற்கான அடையாளமாகவே பார்க்கிறேன். இந்த விவகாரத்தில் நீதிபதி அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. உண்மையைக் கூற வேண்டுமென்றால், பொதுவாக மக்கள் எதற்காக நீதிமன்றத்திற்கு வருவார்கள்? நில அபகரிப்பு அல்லது ஆதாயம் தரும் ஏதோ ஒரு விஷயத்திற்காகவே வருவார்கள். ஆனால், நான் எந்தவித லாபத்தையும் எதிர்பாராமல், ஒரு அடையாளத்தைத் துறப்பதற்காக இங்கே வந்திருக்கிறேன்.

‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தைப் போல, எனக்கு இந்தச் சான்றிதழ் கிடைத்தவுடன், என்னைத் தொடர்ந்து சுமார் ஆயிரம் பேர் இந்த ‘ஜாதி இல்லை, மதம் இல்லை’ என்ற அடையாளத்தின் கீழ் வருவார்கள். அதற்காகவே இந்த ‘NO’ கண்ணாடி மற்றும் நெஞ்சில் ‘நோ காஸ்ட், நோ ரிலிஜியன்’ என்ற அடையாளங்களை அணிந்துள்ளேன். நான் எதை வலியுறுத்த விரும்புகிறேனோ, அதை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்காகவே இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன்.

இது ஒரு நல்முயற்சி என்றாலும், ஒரு சாதாரண மனிதன் இத்தகையச் சான்றிதழைப் பெறுவதற்கு நீதிமன்றம் வரை வரவேண்டிய நிலை ஏன் உள்ளது என்பதுதான் சமூகம் கேட்க வேண்டிய கேள்வி.

பார்த்திபன்
பார்த்திபன்

நான் முதலில் வட்டாட்சியரை அணுகியபோது, ‘தேர்தல் நேரம், அதன் பிறகு பார்க்கலாம், இதற்குப் பொதுவான அரசாணை (GO) தேவை’ என்று கூறினார்கள். திருப்பத்தூரில் ஒரு குழந்தைக்கு இதுபோன்று சான்றிதழ் வழங்கப்பட்டதாக அறிந்திருக்கிறேன். ஆனால், நடைமுறையில் இது இவ்வளவு கடினமானது என்பது இப்போதுதான் எனக்குத் தெரிந்தது. இந்த நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம். ஜாதி, மதம் அற்ற அடையாளத்தைப் பெற விரும்புவோர் எளிய முறையில் இச்சான்றிதழைப் பெற்று, கௌரவமான குடிமகனாக வாழ வழிவகை செய்ய வேண்டும்.

முன்னர் நான் உடல் தானம் செய்ய முன்வந்தபோது அதற்கான முறையான விண்ணப்பப்படிவங்கள் கூட இல்லை. நானும் என் மனைவியும் ஒரு வெள்ளைத் தாளில் எழுதிக் கொடுத்தோம். இன்று உடல் தானம் என்பது சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. அதேபோல், இந்தச் சான்றிதழ் பெறும் முறையும் இனி வரும் காலங்களில் எளிமையாகும் என்று நம்புகிறேன்.

ஹைதராபாத்தில் நான் இயல்பாகக் குறிப்பிட்ட ஒரு விஷயம் பெரும் சர்ச்சையாகி, ஒரு வாரம் நான் உறக்கமின்றித் தவித்தேன். எனக்கு உண்மையாகவே ஜாதி வெறி இருந்திருந்தால், இவ்வளவு தூரம் நீதிமன்றம் வரை வந்து எனது நிலைப்பாட்டை நிரூபிக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது.

பார்த்திபன்
பார்த்திபன்

என்னிடம் தற்போது குடும்ப அட்டை கூட இல்லை. ஏனெனில், அந்தச் சலுகை தேவையுள்ள வேறு ஒருவருக்குப் பயன்படட்டும் என்று கருதுகிறேன். இட ஒதுக்கீடு மூலம் கிடைக்கும் சலுகைகள் எனக்கோ, எனது பிள்ளைகளுக்கோ தேவையில்லை. எங்களது உழைப்பின் மூலமே உயர்வடைய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

தற்காலத் தேர்தல்களில் வேட்பாளர்கள் முதல் வாக்குகள் வரை அனைத்தும் ஜாதி அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. ஆனால், வரும் காலங்களில் ஜாதி இல்லாத ஒரு புதிய சமூகம் உருவாக வேண்டும் என்பதே எனது லட்சியம். அடுத்த ஐந்தாண்டுகள் கழித்து தேர்தல் வரும்போது, மக்களுக்கு இவ்வளவு குறைகள் உள்ளன என்ற நிலையே இருக்கக்கூடாது. மக்கள் அனைத்துப் பிரச்னைகளையும் வென்று முன்னேற வேண்டும் என்பதே எனது ஆசை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *