மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் க்ரைம் த்ரில்லர் படங்களின் அடிப்படையை நோக்கினால் அவை ரஷ்ய எழுத்தாளர் ஃபியோடர் தஸ்தாயெவ்ஸ்கியின் மிகப் பிரபல படைப்பான ‘குற்றமும் தண்டனையும்’ நாவலை அடிப்படையாகக் கொண்டவையாக இருப்பதை உணரலாம். ஆனால், அந்த ஃபியோடருக்கே ஃபீவரை உருவாக்கிய குரூரங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.
வாசிக்கும்போதே பயத்தில் வாந்தி எடுக்க வைக்கும் மிக குரூரமான சீரியல் கொலைகளை செய்தோர் பற்றி விவாதிக்கும்போது ‘ஆட்டோ சங்கர்’ எனும் கேரக்டரை பற்றி பேசாமல் கடக்க முடியாது. தமிழகத்தின் சீரியல் கில்லர்களை லிஸ்ட் எடுத்தால், முதல் பத்து பேரில் முன்வரிசையில் ஆட்டோ ஹாரன் அலற வந்து நிற்பான் ஆட்டோ சங்கர். ஆட்கடத்தல், சாராய விற்பனை, பாலியல் பலாத்காரம், விபசாரம், அடிதடி, கொலைகள், அரசியல் புள்ளிகளின் ஆக்ரோஷ கைத்தடி என்று ஆட்டோ சங்கரின் பரா(அ)க்கிரமங்களைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்!
இருபது வருடங்களுக்கு முன் மத்திய சென்னை காவல்துறையின் குற்றப்பிரிவில் கலக்கி எடுத்த அந்த அசிஸ்டென்ட் கமிஷனரை ஓ.எம். ஆர். சாலையில் உள்ள ஜிம்மில் சந்தித்தோம். ஓர்க்-அவுட் செய்தபடியே ஃப்ளாஷ்பேக் போனார். “தமிழ்நாட்டில் தாதாக்கள் பணத்திலேயும், அக்கிரமத்திலேயும் கொடிகட்டிப் பறந்த காலம்னா அது 1980கள்தான். இவங்களுக்கு வளமான வருமானத்தைக் கொட்டிய தொழில் சாராய வியாபாரம்தான். காரணம், தனியார் நபர்கள்தான் சாராயக்கடைகளை நடத்திட்டிருந்தாங்க அவனுங்க வைக்கிறதுதான் ரேட்டுன்னு பணத்தை அள்ளிக் குவிச்சாங்க.
கரைச்சல் இல்லாமல் கடையை நடத்துறதுக்கும், கரைச்சல் பண்றவனை சும்முன்னு ஆக்குறதுக்கும், போட்டி வியாபாரியை போட்டுத் தள்ளுறதுக்கும்னு இ வ னு ங் க வளர்த்துவிட்ட ரவுடிகள் ஒவ்வொருவனுமே கைகால் முளைச்ச வீச்சரிவாள்கள்தான். மப்போடு சேர்ந்து விபசாரமும் கொடிகட்டிப் பறந்துச்சு.
சாராய தொழிலில் சென்னை சிட்டியிலும் சதிராடுச்சு. இன்னைக்கு அரசியலில் பெரிய பதவிகளிலும், கற்பனைக்கு எட்டாத பணத்தோடும் வாழும் நபர்களில் பலர் அன்னைக்கு சாராயக் கடை நடத்துனவங்கதான். அப்ப உருவான தேர்டு கிரேடு கிரிமினல்களில் முக்கியமானவன்தான் ஆட்டோ சங்கர்.
ஆக்சுவலா சங்கர் குடும்பத்தோட சொந்த மாநிலம் கேரளா! அவனோட உண்மையான பெயர் கௌரி சங்கர். பிழைப்புக்காக சென்னைக்கு வந்த அவங்கப்பா இங்கே கல்யாணம் பண்ணி செட்டிலாகிட்டாரு சங்கரு தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தாலுமேகூட சங்கரிடம் கேரளாவின் மூர்க்கத்தனம் கலந்த நளினமும், ஆண் சர்வாதிகாரத்தனமும் உண்டு.
பெருசா குடும்ப பொறுப்பில்லாத அப்பாவால் ஒழுக்கமான வாழ்க்கை மேலே சங்கருக்கு பெரிய நாட்டமில்லை. செமத்தியா பணம் சம்பாதிக்கணும், அதுக்கு என்ன வேணா பண்ணலாம் அப்படிங்கிறதுதான் சங்கர் வாழ்க்கையின் ஒன்லைன் அஜெண்டா. துவக்கத்துல ஆட்டோ டிரைவர்கள் சிலர் நண்பர்களானதால இவனும் ஒரு ஆட்டோ போட்டு ஓட்ட ஆரம்பிச்சான். வெறுமனே மனுஷங்களை கூட்டிட்டு போயி வந்ததுல பெருசா பணம் புழங்கல. அதனால், நண்பன் ஒருவன் கொடுத்த ஐடியாபடி சாராயத்தை ஆட்டோவில் கடத்த துவங்குனான். கையில ஹெவியா பணம் புரளத் துவங்குச்சு. தேன் எடுத்தவன் புறங்கைய நக்காமலா இருப்பான்? சங்கரும் தண்ணி போட ஆரம்பிச்சான். அது அவனை அத்தனை ஆகாவழி காரியங்களையும் பண்ணத் தூண்டுச்சு.
ஆட்டோ, சாராயம், பணம் மூணு விஷயங்களும் ஒண்ணு சேர, திருவான்மியூர் ஏரியாவில் ஒரு தாதாவாகவே உருவெடுக்கத் துவங்கினான். கைக்கு அடங்காத பணம், எனிடைம் மப்பும் மந்தாரமுமா இருந்தவனுக்கு, பொண்ணுங்க தேவைப்பட்டுட்டே இருந்தாங்க ‘மாமே நம்ம சங்கருக்கு பிடிச்சது ஒண்ணு ஜின்னு இன்னொண்ணு பொண்ணு’ன்னு அவனோட கைத்தடிகள் கெக்கலிக்கிற அளவுக்கு பொண்ணுங்க சகவாசம். அதே கேடுகெட்ட நண்பனின் அட்வைஸ்படி பாலியல் தொழிலுக்கு கோ ஆர்டினேட் பண்ணுற வேலைகளையும் ஆரம்பிச்சான் சங்கர். சென்னையின் பல அரசியல் முக்கியப்புள்ளிகள், தொழிலதிபர்களுக்கு பொண்ணுங்களை சப்ளை பண்ணத் துவங்கினான். கஸ்டமர்கள் அதிகமாக, ஆக டிமாண்டும் பெருகுச்சு. விபசார தொழிலில் இருக்கும் பெண்களை விரும்பாமல் ‘ஃப்ரெஷ்ஷா ஏதாச்சும் அனுப்பு’ன்னு கஸ்டர்மர்கள் வேண்டுதல் வைக்க அப்படி தேடிய சங்கருக்கு யாரும் சிக்கலை. விளைவு, ரிஸ்க் எடுக்க ஆரம்பிச்சான். உதவின்னு கேட்டு வந்த ஒரு பொண்ணை பெரிய கட்சியின் நகரச் செயலாளர் ஒருவருக்கு அனுப்பி வைக்க, பாதிக்கப்பட்ட பெண் போலீஸிடம் புகார் சொல்ல. பெரிய பிரச்னையாகும் சூழல் உருவாகிச்சு.
பொண்ணுங்களை வெச்சு பண்ணும் தொழிலில் கொடிகட்டிப் பறந்த ஆட்டோ சங்கரின் கோட்டையில் ஓட்டை விழ ஆரம்பிச்சதும், அவன் ஒரு புரோக்கர் மட்டுமில்லை, அதையும் தாண்டி குரூர கொலைகாரனும்கூட எனும் உண்மையை உலகுக்கு காட்டியது மூன்று ஆண்கள் சம்பந்தப்பட்ட விவகாரம்தான். சென்னை மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த மோகன், சம்பத் கோவிந்தராஜ் எனும் மூன்று நண்பர்கள் திடீர்னு காணாமல் போனாங்க.
தேடிப்பார்த்த அவங்க குடும்பம் போலீஸில் புகார் கொடுக்க சென்னையின் எல்லா ஸ்டேஷன்களுக்கு அந்த மேன் மிஸ்ஸிங் புகார் போனது.
காணாமல் போன நாளில் அந்த மூன்று பேரும் போன இடங்களை விசாரித்து நூல் பிடிச்சுப் போன போலீஸ் ஆட்டோ சங்கர் ஏரியாவில் போய் நின்னாங்க. அவனிடம் இவங்களைப் பற்றி கேட்டப்ப ‘இப்டி யாரையும் தெரியாது, பார்த்தது கூட இல்லை’ன்னு மறுத்துட்டான். ஆனால் விசாரணை டீமுக்கு அவன் மேலே வலுவான டவுட்டாசு, அவனோட கைத்தடிகளை ஃபாலோ பண்ணி தூக்கிட்டாங்க செல்லுக்குள்ளே ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் கொடுத்ததுல பாபுங்கிறவன் ரத்தம் வழியுற வாயோடு கொட்டுன உண்மைதான் அப்புறம் தமிழகமே குலுங்க காரணமாச்சு.
வகையான வாக்குமூலம் கிடைச்சதும் ஆட்டோ சங்கரின் கோட்டையான திருவான்மியூரில் இறங்கிய போலீஸார் பெரியார் நகர் பகுதியில் உள்ள தெனாலி கால்வாய்க்கு பக்கத்துல உள்ள குடிசை வீடுகளை வட்டம்போட்டு தோண்டினர். அழுகுன நிலையில் முதலில் மூணு பிணம் கிடைச்சுது. காணாமல் போன மூவரின் பிணம்தான் அவை. ‘அவ்ளோதான் சார் என்று பாபு சொல்ல, விசாரணைண அதிகாரி தங்கமணி அவன் கன்னத்தில் பொளேர்னு வெச்சதும், ‘சார் குடிசைக்கு பின்னாடி நோண்டிப்பாருங்க. அங்கே ஒரு பொணத்தை பொதச்ச நியாபசும்’ என்று கதறினான். அதன்படி அங்கே ஒரு பிணம் அது ஆட்டோ ஓட்டுநர் ரவின்னு அடையாளமாச்சு ஒரே நாளில், ஒரே இடத்தில் நான்கு பிணங்கள் அதுவும் ஒரே நபரான சங்கரின் தலைமையில் நடந்த கொலைகள் என்று தமிழ்நாடே பத்தி எரிஞ்சுது.
ஆட்டோ சங்கரை தூக்க போலீஸ் ஆயத்தமானதும் கடுமையான பொலிடிகல் பிரஷர். ஆனால், எல்லாத்தையும் அடிச்சு நகர்த்திட்டு சங்கரை தூக்கிட்டு போயி விசாரணையை துவக்கியது போலீஸ் டீம் சங்கரின் நண்பர்கள், அவனால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பொம்பளைங்கன்னு விசாரிச்சதுல இன்னும் சிலரை சங்கர் உறுதியா கொன்னுருக்கான்’ என்று தகவல் வர, அவனோட வீட்டில் விசாரணை படை தேடுதல் நடத்தினாங்க.
தன்னோட வி.ஐ.பி. கஸ்டமர்கள், அவங்க தந்த பண விவரம், வாரா கடன்னு ஆரம்பிச்சு பல விஷயங்களை அவன் எழுதி வெச்சிருந்த டைரி, அந்த வழக்கில் முக்கியமான ஆதாரமா மாறுச்சு. மேலும் பலான நிலையில் பல பெண்களுடன் பெட்டில் போட்டோஸ் எடுத்து, ரசிச்சிருக்கான். அந்தப் படங்களை வெச்சு விசாரிச்சப்ப அதில் சில பெண்கள் மிஸ்ஸானது புரிஞ்சுது.
இதனால் வீரியமா இறங்கியது போலீஸ் டீம். சங்கரோட தொழிலுக்கு பொண்ணுங்களை சப்ளை செய்தவர் சுடலை. இப்படி தொழிலுக்கு வந்ததில் சுமதி, சுந்தரி ரெண்டு பேரையும் தன் பொண்டாட்டிகளாகவும் ஆக்கிக்கொண்டான் சங்கர். ஆனால், இந்த பொண்ணுங்களுக்கு சுடலை செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததோடு அவனோட நாலாவது மனைவியான லலிதாவை தன் வசப்படுத்தவும் செஞ் சிருக்கான். இந்த கோவத்துல சுடலையை கொன்னு அவன் சாம்பலை கடல்ல எரிச்சான் சங்கர். அந்த கொலையும் கண்டுபிடிக்கப்பட்டுச்சு. சுடலையைத் தேடி வந்த ஆட்டோக்காரர் ரவி, கிட்டத்தட்ட உண்மையை கண்டுபிடிச்சதாலே அவரையும் போட்டுட்டான்.
செக்ஸ்ல ரொம்ப வீக் நபரான சங்கருக்கு எக்கச்சக்க காதலிகள். ஏசுப்பட்ட மனைவிகள். அதில் நாலாவது மனைவிதான் லலிதா. சங்கர் தன் உடம்பில் பச்சைக் குத்திய பெண்களில் இவ பேரும் உண்டு. ஆனால் ஒரு பிரச்னையில் லலிதாவையும் கொன்னு, நிர்வாண நிலையில் அவளையும் அதே பெரியார் நகரில், தன் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு வீட்டின் சமையலறையில் புதைச்சிருந்தான் சங்கர். அந்த டெட்பாடியையும் கைப்பற்றியது போலீஸ், செக்ஸ்ல சங்கரின் முரட்டுத்தனம் தாங்காமல் அவன்ட்ட இருந்து தப்பி ஓடியதாலேயே அவளை தேடிக் கண்டுபிடிச்சு இழுத்துட்டு வந்து, அடிச்சு, கழுத்தை நெரிச்சு கொன்னு, நிர்வாணமாக்கி அழகு பார்த்துட்டு அப்படியே புதைச்சிருக்கான்.
சங்கரோட கொலைகார முகம் வெளிவரக் காரணமா இருந்த மூன்று நபர்களின் கொலைக்கு என்ன காரணம்னு கேட்டப்ப ‘அடிக்கடி வந்து பொண்ணுங்களை யூஸ் பண்ணுவானுங்க. ஆனா,பேசுன தொகையை அவளுங்க கையில கொடுக்காம ஏமாத்தியிருக்கானுங்க. பாவம் புள்ளைங்க, உடம்ப வருத்தி உழைக்கிறாளுங்க அதுக்கு ஏத்த பணம் வர்லேன்னு அழுறதை என்னால தாங்க முடியல அதான் அவனுங்கள போட்டேன்’ என்று காரணம் சொன்னான்.
ஆட்டோ சங்கர் பண்ணியது வெறும் 6 கொலைகள் தானா என்பது இப்ப வரைக்கும் சந்தேகம் அதேமாதிரி, அவனை தனது கைத்தடியா பயன்படுத்திய அரசியல்வாதிகளுக்காக சில கொலைகளும், கொலை முயற்சிகளும் அவன் பண்ணியதாகவும் ஆனால் அது பலவித பிரஷரால் மறைக்கப்பட்டுச்சு. மேலும் பாலியல் தொழிலுக்கு வந்துவிட்ட, தேட ஆளே இல்லாத பொண்ணுங்க சிலரையும் சங்கர் கொன்னு சுடல்ல வீசினான், எரிச்சு சாம்பலை கடல்ல கரைச்சான்னும் தகவல் உண்டு ஆனால் அவங்க காணாமல் போனதா யாருமே புகார் தராததால காத்தோட போச்சு அந்த உயிர்கள்.
ஆட்டோ சங்கர் ஒரு அக்மார்க் கிரிமினல்னாலும் அவனோட கண்களில் காதல் உண்டு. அதிலேயே பொண்ணுங்சுளை மயக்கிடுவான்ன்னு எங்க டிபார்ட்மென்ட்லேயே ஒரு பேச்சு உண்டு. இதை நிரூபிக்கிற மாதிரியான சம்பவம் ஜெயில்லேயே நடந்ததுதான் ஷாக் ஜெயில்ல இருந்த கணபதிங்கிறவரை பார்க்க வந்த அவரோட மனைவி தேவி, சங்கர் மேலே ஈர்ப்பாகிட, ஜெயில்லேயே ரெண்டு பேரும் காதலிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
இவளை அடையறதுக் காகவே ஜெயில்ல இருந்து தப்பி வெளியில வந்து, தேவியையும் கூட்டிட்டு வேற மாநிலத்துக்கு தப்பினான் ஆட்டோ சங்கர். அவளைக் கல்யாணம் பண்ணிட்டு காமம் பொங்க வாழ்ந்துட்டு இருந்த சங்கரை, அவன் தப்புன ரெண்டு வாரத்துக்குள்ளே அரெஸ்ட் பண்ணி அள்ளிட்டு வந்துச்சு தனிப்படை ஆறு கொலைகள் உள்ளிட்ட பல குற்றங்களுக்காக ஆட்டோ சங்கர் உள்ளிட்ட மூவருக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு வந்துச்சு ஆனால் இதை எதிர்த்து மேல் முறையீடு போனான் சங்கர். அவனோட குற்றத்தை நிரூபிக்க போலீஸ் அப்போவே எடுத்த உயர்தர தடய அறிவியல் டெக்னாலஜியெல்லாம் அசாதாரணமானது. ஹைகோர்ட்டிலும் தூக்கு உறுதியாகி, கருணை மனுவும் தள்ளுபடியாகி கடைசியில் சாகும் வரையில் தூக்கில் தொங்கவிடப்பட்டான்.
சங்கரோடு சேர்ந்து பல முக்கிய புள்ளிகளுக்காக அவன் செய்த சில அரசியல் கொலைகளும், கேள்வி கேட்க ஆளில்லாத பாலியல் பெண்களின் கொலைகளும் செத்துப் போச்சுன்னு இப்பவும் எங்க டிபார்ட்மென்டில் ஆஃப் தி ரெக்கார்டாக பேசுவாங்க” என்று வியர்வையை துடைத்துவிட்டு லெமன் ஜூஸை கையில் எடுத்தார்.
(ரத்தம் தெறிக்கும்) – எஸ்.ஷக்தி .

