Gem Veeramani Case : லிஸ்ட் பெருசா போகுது… ஜெம் வீரமணி மீது 5-வது போக்சோ வழக்கு! – Kumudam

Spread the love

பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு தான் சிறுமியாக இருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப் மூலம் வந்த புகார் :

சென்னை காவல் துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அண்மையில் பெண் ஒருவர் புகார் அனுப்பியுள்ளார். அதில், தனக்கு சிறுமி வயது இருந்தபோது ஜெம் வீரமணி பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

புகார் தொடர்பான விவரங்களை காவல் துறையினர் ஆய்வு செய்த பின்னர், அதில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக ஜெம் வீரமணி மீது புதிய போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

5-வது போக்சோ வழக்கு :

ஜெம் வீரமணி மீது ஏற்கனவே சிறுமிகள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கு சேர்க்கப்பட்டிருப்பதால், அவர் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மத்திய குற்றப்பிரிவின் கீழ் செயல்பட்டு வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவினர், ஜெம் வீரமணி தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தனித்தனியாக ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஜெம் வீரமணி :

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட வழக்குகளில் ஜெம் வீரமணி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் மீது புதிய புகார்கள் மற்றும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், அண்மையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் உள்ளிட்ட சிலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆதாரங்களை சேகரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு :

வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக பல்வேறு ஆதாரங்களை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் சேகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் பென்டிரைவ் உள்ளிட்ட மின்னணு ஆதாரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் கிடைத்துள்ள ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை ஒருங்கிணைத்து, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

புதியதாக பதிவு செய்யப்பட்டுள்ள 5-வது போக்சோ வழக்கிலும் புகாரின் உண்மைத்தன்மை, சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் மற்றும் தொடர்புடைய நபர்களிடம் விசாரணை உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *