விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், “தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு’ கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் வருகிற ஆகஸ்ட் 17-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்தச் சூழலில், வி.சி.க துணை பொதுச்செயலாளரும், சமூக நீதித்துறை அமைச்சருமான வன்னிஅரசுவிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்…
“கல்வி வளாகத்தினுள் மதம், சாதி அடையாளங்களுடன் யாரும் வரக்கூடாது என கூறிய அமைச்சர் ராஜ்மோகன், மறுநாளே மத அடையாளத்துக்கு மட்டும் விலக்கு கொடுத்துவிட்டாரே… பா.ஜ.க-வின் மிரட்டலுக்குப் பயந்துவிட்டாரா?”
“சாதி, மத ரீதியிலான எந்த அடையாளங்களுடனும் கல்வி வளாகத்தினுள் மாணவர்கள் வரக்கூடாது என்பதுதான் த.வெ.க அரசின் நிலைப்பாடு. இதுகுறித்து கூடுதலான தகவலை நீங்கள் கல்வியமைச்சரிடம்தான் கேட்கவேண்டும்.”
“தமிழ் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களை அடையாளப்படுத்துகிற ‘ஆதிதிராவிடர்’ என்ற பெயரை, ‘சமூக நீதித்துறை’ என ஒட்டுமொத்த ஒடுக்குமுறைகளுக்கும் பொதுவான பெயராக மாற்றுவதே அரசியல் ரீதியாக பின்னடைவுதானே?”
“அப்படியல்ல… ‘ஆதி திராவிடர்’ என்ற பெயரே, தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்ட அட்டவணை சாதிகளுக்கான ஒட்டுமொத்த அடையாளப் பெயர்தான். ஆனால், இன்றைக்கு அதை சிலர், ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கான அடையாளமாக மாற்ற சிலர் முயற்சி செய்கிறார்கள். அந்த அரசியல் நோக்கம் தவறு.
அதேசமயம், பொது நோக்கோடு, பொது இலக்கோடு இன்றைய முதல்வர் இந்தப் பெயர் மாற்றத்தை வைத்திருக்கிறார். ஒருவேளை பின்னாளில் இந்தத் துறையை விரிவாக்கம் செய்யும் நோக்கத்தோடு, இந்தப் பெயர் மாற்றத்தை அவர் கொண்டு வந்திருக்கலாம். அதுபற்றி எனக்குத் தெரியவில்லை.
எது எப்படியிருந்தாலும் இவ்விஷயத்தில், கருத்தியல் ரீதியாக எங்கள் தலைவர் திருமாவின் கருத்து மிகச் சரியானது. எனவே, என்னுடைய கருத்தும் அதுதான்!”