“கொடை வந்தாச்சுன்னா… ஊரே கூடிடும்!” – இந்த உணர்வை ஒவ்வோர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் உணர்த்தும் திருவிழாதான், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மகிழ்வண்ணநாதபுரம் மாயாண்டி சுவாமி கொடை விழா.
சிறிய கோயிலை மையமாகக் கொண்டு, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் ஒன்று கூடும் இந்தக் கொடை, வழிபாட்டைத் தாண்டி உறவுகளையும், ஊர் ஒற்றுமையையும் கொண்டாடும் திருவிழாவாக திகழ்கிறது.
மகிழ்வண்ணநாதபுரம், முருகன்குறிச்சி, பொட்டல், பெத்தநாடார்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் இணைந்து இந்தக் கொடையை நடத்துகின்றனர்.
ஒவ்வொரு தெருவிலும் அமைக்கப்பட்டுள்ள கோயில் நிர்வாகக் குழுக்கள் விழா ஏற்பாடுகளைப் பொறுப்பேற்று, பொதுமக்களின் பங்களிப்புடன் திருவிழாவை ஒருங்கிணைக்கின்றன. இதனால், இந்தக் கொடை மத நிகழ்வைத் தாண்டி, கிராம மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் திருவிழாவாக மாறியுள்ளது.
மூன்று நாள்கள் நடைபெறும் இந்தக் கொடையின் முதல் நாளில் மாயாண்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன. இரவு நேரத்தில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இரண்டாம் நாளில் இளைஞர்களுக்கான கபடி போட்டி நடத்தப்பட்டு, வெற்றியாளர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இறுதி நாளில் அன்னதானம் மற்றும் பொதுவிருந்து நடைபெறுகிறது.