கடலிலிருந்து கிடைக்கிற அனைத்துப் பொருள்களுமே திருமாலின் சாநித்தியம் நிறைந்த புனித வஸ்துக்கள் என்பது நமது சமயவியல் நம்பிக்கை. அலைமகளாகிய மகாலட்சுமியுடன் தோன்றிய சங்கம், காமதேனு, கற்பகவிருட்சம், அமிர்தக் கலசம், ஐராவதம், உச்சை சிரவஸ் போன்ற அனைத்துமே திருமகளுக்கு நிகராக அவளது அம்சமாகப் போற்றப்படுபவை.
இவற்றுள் தலையானது சங்கம் எனப்படும் சங்கு. பெருமாளை விட்டு நீங்காது எப்போதும் அவரின் திருக்கரங்களிலேயே திகழும் பெருமை உடையது புனித வஸ்துவான சங்கு. இந்த சங்குக்கு உண்டான பிரயோக சக்தியைப் பெறவேண்டி, திருமால் தவமியற்றிய திருத்தலம்தான் சங்காரண்யம் எனப்படும் திருத்தலைச்சங்காடு.
திருமால் மகிமைமிகு சக்ராயுதத்தைப் பெற்ற ஊர் திருவீழிமிழலை என்பதைப் புராணங்களில் இருந்து அறிகிறோம். அதேபோல், சிவபெருமானால் திருமாலுக்கு சங்கம் வழங்கப்பட்ட பெருமைமிகு புராண வரலாறு நிகழ்ந்த தலமாக இந்தத் திருத்தலைச்சங்காடு என்கிற ஊர் சிறப்பிக்கப்படுகிறது.
இந்தப் புண்ணியத் தலம் பூம்புகாருக்கு மிக அருகில் அமைந்துள்ளது. முற்காலத்தில் கடற்கரையை ஒட்டி இருந்த இந்தப் பகுதியில் சங்கு வாணிகம் சிறந்திருந்தது. அதனாலேயே இவ்வூருக்கு தலைச்சங்காடு என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர். சங்க காலத்தில் தமிழ்ச்சங்கம் அமைத்துப் போற்றிய இடம் ஆதலால் `தலைச்சங்கம்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டது என்றும் சிலர் சொல்கிறார்கள்.
சங்குப் பூக்களை உடைய கொடிகள் நிறைந்த வனமாக இந்தப் பகுதி திகழ்ந்ததாம். ஆகவே சங்காரண்யம் என்ற பெயர் உண்டானது என்றும் ஒரு தகவல் சொல்லப்படுவது உண்டு. காரணங்கள் பலவாயினும் `சங்கு’ என்ற ஒரு புனித வஸ்துவோடு இந்தத் தலம் தொடர்பு கொண்டுள்ள பாங்கு போற்றுதலுக்குரியது என்றே சொல்லவேண்டும்.
இது, திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற காவிரிக்கரைத் தலம். கோச்செங்க சோழனால் எடுப்பிக்கப்பட்ட பிரமாண்டமான மாடக் கோயில். `கோவில்பத்து தலைச்சங்காடு என்பது இதன் பழைய பெயர். புராதானமான கோயில் என்றாலும் ராஜகோபுரம் தற்போது காண்பதற்கு இல்லை.
மூலவர் உயரமான மாடக்கோயிலில் எழுந்தருளியிருப்பதால், பிரதான வாயிலுக்கு நேராகவே பிரதோஷ நாயகராகக் காட்சி தருகிறார் பெருமான். நந்திதேவருக்கு எதிரேயுள்ள கற்றிருமேனியரான அம்மையப்பர் திருக்கோலமானது, வேறு தலங்களில் காண்பதற்கு அரியது.
இடது புறத்தின் பக்கவாட்டில் சில படிகள் ஏறிச் சென்றால் உயரமான இடத்தில் மூலஸ்தானம் கொண்டு விளங்குகிறார் அருள்மிகு சங்காரண்யேஸ்வரர். இவருக்கு நல்லெண்ணையைச் சாற்றியபிறகு, விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால்… பாணத்தின் மீது மயிர்க்கால்கள் தெரியுமாம். ஆகவே இந்தச் சிவலிங்கத் திருமேனியை ‘ரோமாஞ்சன லிங்கம்’ என்று சொல்கிறார்கள்.
மூன்றடி உயரத்தில் சுயம்பு மூர்த்தியாய்த் திகழும் இந்தப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யும் நீர், கீழே விழுவதில்லை என்பது அதிசயம். சங்கிற்குள் நீர் தேங்கி நிற்பது போல, அபிஷேகம் செய்யப் படுகிற திரவியநீர் மூலவரின் ஆவுடையாருக்குள் தேங்கி நிற்பதைக் காணலாம் என்பது அதிசயம்.
அதேபோல் மொத்த ஆலயத்தின் அமைப்பும் சங்கு வடிவிலேயே அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. ஆலயத்திற்கு எதிரே அமைந்திருக்கும் இத்தலத்திற்குரிய தீர்த்தக்குளமும் சங்கு தீர்த்தம்தான்.
கருவறையை ஒட்டி அமைந்துள்ள சுற்றாலையில் யோக நிலையில் திருமால் காட்சி தருகிறார். இவர்தான் சங்கினைப் பெறுவதற்காக இத்தலத்து சிவபெருமானைப் பூஜித்தவர் என்கிறார்கள். இவருக்கு அருகிலேயே வில்லுடன் காட்சி தருகிறார் சீதாராமர். தமது யுத்த விஜயத்திற்கு பிறகு ராமர் வழிபட்ட சிவத்தலங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள்.
இங்கே தட்சிணாமூர்த்தி பகவானும் விசேஷம். ஆம்! ரிஷப வாகனத்துடன் கூடிய அரிய கோலத்தினராய் காட்சி தருகிறார் இந்த தென்முக தெய்வம். கன்னி மூலை மாடத்தில் சிறியோர் சுயம்பு விநாயகர் அருள்கிறார். ஆவுடையாருடன் பூமிக்கு அடியில் பிணைப்பு உடைய வலம்புரி விநாயகர் இவர் என்பது அதிசயத்தக்க உண்மை.
மிகப்பெரிய கோஷ்ட துர்கை மகிஷத்தின் மீது சமபாதத்தினளாகக் காட்சி தருகிறாள். இவளை வணங்கி வழிபட்டால், சகலவிதமான தோஷங்களும் துக்கங்களும் விலகும் என்பது நம்பிக்கை. வடமேற்கு மூலையில் தனாகர்ஷண லிங்கத்தை தரிசிக்கலாம். இவரை வழிபட்டால் தனலாபம் உண்டாகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
மட்டுமன்றி, உயரமான மாடத்தின் மகாமண்டபத்தில் திருமறை அருளிய நால்வர் மற்றும் கோச்செங்கண்ண மன்னனின் திருமேனிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து பலகணி வழியே பார்த்தால், பரந்து கிடக்கும் கோயிலின் வெளிச்சுற்றாலையின் முன் பகுதியைத் தரிசிக்கலாம்.
அடுத்து, கீழ் வெளிச்சுற்றில் பிறிதொரு கன்னி மூலைக் கணபதி யாக உச்சிஷ்ட கணபதி அருளுகிறார். பின் மையத்தில் தேவி பூதேவி சமேதரரான சீனுவாசப் பெருமாள் எழுந்தருளி இருக் கிறார். ஆறரை அடி உயரத்தில் நின்ற நிலையில் அருளுகின்ற கோலத்தினரான இவர், மிகுந்த வரப்பிரசாதியாம்.
வள்ளி-தேவசேனா சமேதராகத் திகழும் சுப்ரமணியர், தனித்தக் கோயிலில் அருள்பாலிக்கிறார். இவரின் திருமேனி தொன் அழகு மிக்கது. சஷ்டி தினங்களில் இவரை தரிசித்து வழிபடுவது விசேஷம் என்கிறார்கள். அதேபோல் வடமேற்கில் இடம்பெற்றுள்ள ஜேஷ்டா தேவியும் கலைநயம் மிக்க பெரிய திருவினளாகத் திகழ்கிறாள். வெளிச்சுற்றின் இடது பாகத்தில் தலவிருட்சமான புரசு தழைத்து படர்ந்திருக்கிறது. அருகில் அம்பிகை சௌந்தர்யநாயகி வடக்கு நோக்கியவளாய் சந்நிதி கொண்டிருக்கிறாள். இந்த அம்மையி னுடைய சந்தனப் பிரசாதம் பெண்களுக்கு உண்டாகும் கடும் வயிற்றுவலிக்கு அருமருந்து என்பது தொன்றுதொட்ட நம்பிக்கை.
பௌர்ணமி தினங்களில் இந்தக் கோயிலுக்குச் சென்று சங்கு தீர்த்தத்தில் நீராடி, அம்மையப்பர் சந்நிதிகளில் நெய் தீபமேற்றி வழிபட்டால், தம்பதியர் ஒற்றுமை நிலைத்திடும்; சந்தான பிராப்தி கிடைத்திடும். வேண்டுதல் பலித்து குழந்தை பிறந்தவுடன், அம்பிகைக்கு சந்தனம் சாற்றி நேர்ச்சை செய்வதும் இந்தத் தலத்திற்குரிய சிறப்பான வழிபாடு. அம்பிகை யின் கோயிலில் புவனேஸ்வரி விக்கிரகம் ஒன்று தனித்த மாடத்தில் அமைக்கப் பட்டிருப்பது விசேஷம்.
சோமாஸ்கந்தர் அமைப்பு உடைய ஆலயமான இது பஞ்சாரண்ய தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர் பாடல்பெற்ற காவிரித் தென்கரைத் (45 – வது ) திருத்தலம்; கோச்செங்கண்ண சோழர் அமைத்த யானை ஏறா மாடக்கோயிலான இது என்று பார்த்தோம். இத்தகு அற்புதமான – பிரமாண்ட மாக அளவில் பரந்துவிரிந்து திகழும் தொன்மையான சிறப்புடைய இந்தக் கோயிலில், தற்போது கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுபோன்ற ஆலயங்களைப் புனரமைத்தல் என்பது இக்காலத்தில் மிகவும் சிரமமான ஒன்று. ஏராளமான பொருட்செலவில் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தத் திருப்பணிக்கு ஒரு ரூபாய் அளித்தாலும் கூட மிகப்பெரும் புண்ணியம் உண்டாகும். பல தலைமுறைகளுக்கு செல்வவளம் நிலைத்திருக்கும்.
இத்தலத்தில் அருளும் ஹரி, ஹரன் ஆகிய இருபெரும் தெய்வங்களின் அருளையும் பெறுவது அரும்பேறு. சாந்நித்தியம் மிகுந்த இந்த ஆலயத் திருப்பணிக்கு நாமும் நம்மால் இயன்ற பங்களிப்பை வழங்குவோம். நம்முடைய வாழ்வு மட்டுமல்ல, நம் சந்ததியின ருக்கும் எவ்வித சங்கடங்களும் இல்லாத சந்தோஷ வாழ்வை வரமாகத் தருவார், திருத்தலைச்சங்காடு ஈஸ்வரன்!
எப்படிச் செல்வது?: புதுச்சேரி – நாகப் பட்டினம் நெடுஞ்சாலையில், சீர்காழிக்கும் ஆக்கூருக்கும் இடையில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை – பூம்புகார் வழித்தடத்திலும் செல்லலாம்.
ஆலய தரிசனம் மற்றும் திருப்பணி விவரங்களுக்கு:
முனைவர் சி.பாலு சிவாச்சாரியார். 96001 55155.