SIR: “பிறந்த குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழ் மறுப்பு அதிர்ச்சியளிக்கிறது" – பினராயி விஜயன் வேதனை

Spread the love

மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அப்துல் ஹபீப் – அமீனா காதுன் தம்பதி. இவர்களுக்குக் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி தின்ஹாட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

ஆனால், இதுவரை குழந்தைக்கு அதிகாரப்பூர்வப் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இது குறித்து அப்துல் ஹபீப் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, வசிப்பிடச் சான்றிதழ் கேட்டிருக்கின்றனர். அதனால் அப்துல் ஹபீப் வசிப்பிடச் சான்றிதழ் கோரி உள்ளூர் பஞ்சாயத்தை அணுகியிருக்கிறார்.

அப்போது, SIR பணிக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இல்லை எனக் காரணம்காட்டி அதிகாரிகள் பிறப்புச் சான்றிதழை நிறுத்தி வைத்ததாகத் தெரிவித்திருக்கின்றனர்.

SIR
SIR

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அப்துல் ஹபீப், “எங்கள் உள்ளூர் பஞ்சாயத்து பிரதான் தலைவர் பதவி காலியாக இருக்கிறது. அதனால் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரை அணுகுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அரசு அலுவலகங்களுக்குப் பலமுறை அலைந்தும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.

என் மனைவியின் பெயர் இன்னும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறது. பெற்றோரான எங்கள் இருவரின் பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் தந்தையான என் பெயர் இடம்பெற்றுள்ள 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட ஆவணங்கள் எங்களிடம் இருக்கின்றன.

இத்தனை இருந்தும் எனது வாக்காளர் தகுதி ஏன் குழந்தையின் பிறப்புச் சான்றிதழைப் பாதிக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ‘இந்தியா டுடே டிவி’, வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) லஹ்மு ஒய் வாங்டியிடம் பேசியிருக்கிறது. அதற்கு அவர், “இந்த விவகாரம் குறித்து நிர்வாகம் ஆய்வு செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கூச் பெஹார் மாவட்ட பாஜக தலைவர் அபிஜித் பர்மன் கூறுகையில், “வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதை எதிர்த்து ஹபீப் தீர்ப்பாயத்தை அணுக வேண்டும். விதிகளின்படி பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

பாஜக தலைவர் அபிஜித் பர்மன்
பாஜக தலைவர் அபிஜித் பர்மன்

உரிய சட்ட நடைமுறைகளின் மூலம் இவ்விவகாரம் பரிசீலிக்கப்பட வேண்டும். அவர் உண்மையான வாக்காளராக இருந்தால், நிச்சயம் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். அவர் உண்மையான குடியிருப்பாளராக இருந்தால் கவலைப்படத் தேவையில்லை.” என்றார்.

கூச் பெஹார் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிஸ்வஜித் சர்க்கார் “SIR பணியால் உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, அத்தியாவசிய ஆவணங்களைப் பெறுவதில் குடும்பங்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறது. ஹபீப் உள்ளூர் முஸ்லிம் ராஜ்பன்ஷி சமூகத்தைச் சேர்ந்த பூர்வீகக் குடிமகன்.

உண்மையான குடிமக்கள் புலம்பெயர்ந்தவர்களாகவோ அல்லது ஊடுருவல்காரர்களாகவோ தவறாகச் சித்தரிக்கப்படுகின்றனர். இத்தகையவர்களின் குழந்தைகளுக்குப் பிறப்புச் சான்றிதழ் பெறுவதில் கூட இப்போது சிக்கல் எழுந்துள்ளது. இது கூச் பெஹாரில் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.

உண்மையான குடிமக்களின் பெயர்கள் மீண்டும் சேர்க்கப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும். உண்மையான வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்தப் பெயர் நீக்கம் நடைபெறுகிறது. போராட்டங்கள் மற்றும் சட்ட வழிகள் மூலம் காங்கிரஸ் இவ்விவகாரத்தைக் கையாண்டு வருகிறது” என்றார்.

குணால் கோஷ்
குணால் கோஷ்

திரிணமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் குணால் கோஷ், “கூச் பெஹாரில் நடந்தது ஒரு தீவிரமான பிரச்னை. இது ஒரு பச்சிளம் குழந்தை சம்பந்தப்பட்ட விவகாரம். இதேபோன்ற புகார்கள் பல இடங்களில் இருந்து வருகின்றன. குடிமக்கள் துன்புறுத்தப்படுவதால் மாநில அரசோ அல்லது மத்திய அரசோ இதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இது நடந்திருக்கக் கூடாது, இனியும் நடக்கக் கூடாது. தந்தையின் ஆவணங்களில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், அதை குழந்தையின் பதிவைப் பாதிக்காத வகையில் மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கிடையே, கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான பினராயி விஜயன் இந்தச் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “SIR பணியின் போது தந்தையின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால், பிறந்த குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழ் மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

இது சாதாரண நிர்வாகப் பிழையல்ல. மக்களை விலக்கி வைக்கும் அரசியலின் ஆபத்தான விளைவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி என்பது சாதாரண நிர்வாக நடைமுறையாக இல்லாமல், ‘சங் பரிவார்’ அமைப்பின் மறைமுகத் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) திட்டத்தை முன்னெடுப்பதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது.

பினராயி விஜயன்

இதன் மூலம் வாக்காளர் பட்டியல் திருத்தங்கள், மக்களிடையே பாகுபாட்டை உருவாக்கும் கருவிகளாகவும், அடிப்படை உரிமைகளை மறுக்கும் வழிமுறைகளாகவும் மாற்றப்படுகிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மீதான இந்தத் தாக்குதலை அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும். அதன்மூலம் நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *