SIR முதல் மறுதேர்தல் கோரிக்கை வரை… தேர்தல் ஆணையத்தை சுற்றும் சர்ச்சைகள்! – Kumudam

Spread the love

இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision – SIR) தற்போது நாடு முழுவதும் அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.

SIR என்றால் என்ன?

நகரமயமாக்கல், மக்கள் இடம்பெயர்வு, உயிரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் வாக்காளர் பட்டியலில் ஏற்படும் தவறுகளை சரிசெய்து, துல்லியமான புதிய வாக்காளர் பட்டியலை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் விரிவான சரிபார்ப்பு நடவடிக்கையே சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) ஆகும்.

வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்கள், முகவரி மாற்றங்கள், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம், ஒரே நபரின் பெயர் பல இடங்களில் இடம்பெறுவது போன்ற குறைபாடுகளை கண்டறிவதே இதன் முக்கிய நோக்கமாக கூறப்படுகிறது.

2002-ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடவடிக்கை இதுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SIR பணியில் எழுந்துள்ள முக்கிய சர்ச்சைகள்

வாக்காளர் பெயர்கள் நீக்கம் குறித்த புகார்கள்

SIR நடவடிக்கையின் போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து அதிக அளவிலான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சில சமூக அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

சில முன்னாள் தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோர், இந்த நடவடிக்கையில் ஏராளமான பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடும் அபாயம் இருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், தகுதியற்ற பெயர்களை நீக்கி வாக்காளர் பட்டியலை சுத்தப்படுத்துவது தேர்தல் நடைமுறையின் ஒரு பகுதிதான் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்து வருகிறது.

‘இயந்திர நோட்டீஸ்’ சர்ச்சை

SIR பணியின் ஒரு பகுதியாக சில வாக்காளர்களிடம் தங்களின் தகுதியை நிரூபிக்க ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக டெல்லியில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம், கணினி மூலம் உருவாக்கப்பட்ட நோட்டீஸ்கள் முறையான பரிசீலனை இல்லாமல் அனுப்பப்பட்டதா என்பது குறித்து கேள்வி எழுப்பியதாக தகவல்கள் வெளியாகின.

Form 6-ல் புதிய விதிமுறைகள்

புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான Form 6 விண்ணப்பத்தில் சில புதிய தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன. இதில் பெற்றோரின் SIR தொடர்பான விவரங்கள், தொகுதி மற்றும் பூத் எண் போன்ற தகவல்கள் கேட்கப்படுவது குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நடைமுறை காரணமாக விளிம்புநிலை மக்கள், பழங்குடியினர் உள்ளிட்ட சில பிரிவினர் வாக்காளர் பட்டியலில் சேருவதில் சிரமம் சந்திக்க நேரிடும் என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தேர்தல் ஆணையத்திற்குள் கருத்து வேறுபாடு?

SIR விவகாரத்தில் புதிய சர்ச்சையாக, தேர்தல் ஆணையத்திற்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் எடுக்கப்பட்ட சில SIR தொடர்பான முடிவுகளுக்கு, மற்ற தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

கடந்த சில மாதங்களில் முக்கிய முடிவுகள் தொடர்பாக அவர்கள் பல முறை தங்களது கருத்து வேறுபாடுகளை பதிவு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சில நிர்வாக முடிவுகள் குறித்து தங்களுக்கு முழுமையான தகவல் வழங்கப்படவில்லை என்றும், சில மேல்முறையீட்டு நடவடிக்கைகளில் குறைபாடுகள் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியதாக கூறகிறார்கள்.

தேர்தல் ஆணையத்தின் விளக்கம்

இந்த சர்ச்சைகளுக்கு பதிலளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம்: ஆணையத்திற்குள் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பது ஜனநாயக அமைப்பில் இயல்பானது என தெரிவித்துள்ளது.

அனைத்து முக்கிய முடிவுகளும் மூன்று தேர்தல் ஆணையர்களின் ஒப்புதலுடனேயே எடுக்கப்பட்டதாக கூறியுள்ளது.

நோட்டீஸ் பெற்ற அனைத்து வாக்காளர்களுக்கும் தங்களின் ஆவணங்களை சமர்ப்பித்து விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

உரிய விசாரணை மற்றும் நடைமுறைகளை பின்பற்றாமல் எந்த வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது என உறுதி அளித்துள்ளது.

இந்த எஸ்ஐஆர் பிரச்னையால் எதிர்கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கண்டனத்தை தெரிவித்து வருகின்ற நிலையில்,தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் மறுதேர்தல் கோரிக்கை :

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து சந்தேகங்கள் இருப்பதாக கூறிய உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களை ரத்து செய்து மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், எதிர்கால தேர்தல்கள் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த பிரச்னையால் மகாராஷ்டிரா,மேற்கு வங்கம்,தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மீண்டும் இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு இருக்கிறதா? இதற்கு தேர்தல் ஆணையம் என்ன சொல்ல போகிறது? தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகுவாரா? என்று பல கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *