பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு இன்று 61வது பிறந்தநாள் ஆகும். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள் அன்று மும்பை பாந்த்ராவில் உள்ள தனது மன்னத் பங்களாவின் பால்கனியில் இருந்து ரசிகர்களைப் பார்த்து ஷாருக்கான் பிரத்யேக போஸ் கொடுப்பது வழக்கம். ஆனால் இப்போது மன்னத் பங்களாவில் புதுப்பிப்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
இதையடுத்து ஷாருக்கான் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை தாஜ் ஹோட்டலில் கொண்டாடினார். இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஷாருக்கானின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
நள்ளிரவில் நடந்த இந்தப் பிறந்தநாள் பார்ட்டி முடிந்து வெளியில் வரும் ஷாருக்கானைக் காண ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அதிக அளவில்கூடி இருந்தனர்.

பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்குப் பிறகு ஷாருக்கான் ஹோட்டலை விட்டு வெளியேறுவதைக் காட்டும் வீடியோவை யூசுப் ஷேக் என்ற ரசிகர் பகிர்ந்துள்ளார். ஷாருக்கானின் சொகுசு கார் ஹோட்டலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்ததை புகைப்படங்கள் காட்டின.
ஷாருக்கான் பிறந்தநாள் பார்ட்டி முடிந்து ஹோட்டலில் இருந்து வெளியே வந்து காரில் ஏறும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அவர் ஹோட்டலை விட்டு புறப்படுவதற்கு முன், வெளியில் காத்திருக்கும் ரசிகர்களைப் பார்த்து கை அசைத்து அவர்களை நோக்கிப் பறக்கும் முத்தங்களை வழங்கினார்.
சாதாரணமாக உடையணிந்து அவர் காணப்பட்டார். பிறந்தநாள் விழாவில் ஷாருக்கின் மனைவி கவுரி கான், குழந்தைகள் சுஹானா மற்றும் ஆர்யன் கான், நடிகர் சல்மான் கான் கலந்து கொண்டதாகவும் அந்த ரசிகர் கூறினார்.
முன்னதாக ஷாருக்கான் தனது 61வது பிறந்தநாளில் தனது கிங் திரைப்படத்தின் து மில் ஜாயே என்ற தலைப்பில் முதல் பாடலை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இதில் தீபிகா படுகோனேவும் இடம்பெற்றுள்ளார். இந்த டிராக் பார்வையாளர்களுக்கு கிங்கின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது. ஷாருக்கானின் பிறந்தநாளையொட்டி அவரது மன்னத் பங்களாவிற்கு ஏராளமான ரசிகர்கள் வந்து செல்பி எடுத்து சென்றனர்.