போதகர் ஆபிரகாம் மீதான குற்ற்ச்சாட்டு தொடர்பான வழக்கின் விசாரணை, மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. காவல்துறையினர் தங்களது விசாரணையின் போது, குற்றச்சாட்டுகள் குறித்த வலுவான ஆதாரங்களைத் தெரிவித்தனர்.
அத்துடன், அரசு வழக்கறிஞரான உஷா தன் வாதத்தை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து, விசாரணையின் முடிவில் ஆபிரகாம் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது. குற்றம் நிரூபணமானதால் போதகர் ஆபிரகாமுக்கு போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், அவரால் பாலியல் தொல்லைக்கு உள்ளான நான்கு சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் வீதம், மொத்தம் ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசிற்கு உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பு விவரங்களை நீதிபதி வாசித்ததும் நீதிமன்ற அறையிலேயே ஆபிரகாம் மயங்கி விழுந்ததார். அதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மதபோதகருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். தே.மு.தி.க தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், “போக்சோ வழக்குகளில் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். மரண தண்டனை விதிக்கப்பட்டால் தான் இத்தகைய கொடூரக் குற்றங்கள் குறையும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில், தூக்கு தண்டணை விதிக்கப்படுவது இது 4-வது முறையாகும்.