TNPL 2026-ல் 23 மற்றும் 24 ஆவது லீக் போட்டிகள் சென்னை எம்.எ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
மதுரை பாந்தர்ஸ் vs ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ்
23-வது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் மோதிய போட்டியில், டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அணியின் பந்து வீச்சாளர்கள் தொடக்கத்திற்கான பொறுப்பை தங்களது தோள்களில் போட்டுக்கொண்டு, பவர்ப்ளேயிலே சிறப்பான பந்துவீச்சை செய்து 43 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்து அஸ்திவாரத்தை அதிர வைத்தனர்.

பந்துவீச்சாளர் மோகன் பிரசாத் தனது நேர்த்தியான பவுலிங்கின் மூலம், அதிரடி ஆட்டக்காரர்களான சதுர்வேத் மற்றும் ராம்குமார் ஆகிய இருவரின் விக்கெட்டுகளை வீழ்த்தி முக்கிய பங்காற்றினார். மற்றொரு பக்கம் மிக அருமையாக பந்து வீசி 18 ரன்கள் கொடுத்து 3 வீக்கெட்டுகளை எடுத்து மதுரை பாந்தர்ஸின் பேட்டிங் வரிசையை நிலைகுலையச் செய்தார் மதிவாணன்.
இனி ஸ்கோரை நாம் தான் உயர்த்தி ஆக வேண்டும் என முடிவு செய்து, ரோஹன் புத்ரா மற்றும் ஆதிக் உர் ரஹ்மான் கூட்டணி 7 ஆவது விக்கெட்டுக்கு 73 ரன்களை அளித்து ஆபத்தின் பிடியில் இருந்த மதுரை பாந்தர்ஸின் ஸ்கோரை 157 ஆக உயர்த்தினர்.
பின் இலக்கை நோக்கி களமாட வந்தனர் திருப்பூர் தமிழன்ஸ். கேப்டன் துஷார் ரஹேஜாவின் தொடக்கம் அட்டகாசம் தான். ரோஹன் புத்ராவின் பந்துகளை எல்லாம் சிக்சர்களாக மாற்றினார். அவர் ஓவரில் மட்டும் 5 சிக்சர்களை பறக்கவிட்டார். சுழற்பந்து வீச்சாளர் சோயிப் முகமது கான் இவரை விக்கெட் எடுக்க, பின் தொடர்ந்து வந்தவர்களும் அவுட் ஆகினர். இது மதுரைக்கு திருப்புமுனையாக அமைந்தாலும் பின் வந்த பிரதோஷ் ரஞ்சன் பால் 65*(43) ரன்களை குவித்து ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வெற்றி பெறச் செய்தார். அதோடு ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.

நெல்லை ராயல் கிங்ஸ் vs சேலம் ஸ்பார்டன்ஸ்
24-வது லீக் போட்டி நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த சேலம் ஸ்பார்டன்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. செட் பேக் தொடக்கம் தான் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு, அதை மீட்டெடுக்க ஹரி நிஷாந்தும் ஆர் விவேக்கும் கூட்டணி அமைத்து 61 ரன்களை அளித்தனர்.
பின் ஆர் விவேக் விக்கெட் இழக்க ஹரி நிஷாந்தும் ரன் அவுட் ஆனார். பின் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிய 140 ரன்களுக்குள் அவர்களை கட்டுப்படுத்தினர். நெல்லை அணியில் அதிகபட்சமாக என். எஸ். ஹரிஷ் இரண்டு விக்கெட்டுகள் மற்றும் இம்மானுவல் செரியன் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

பின் களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ்-ன் தொடக்கம் அமோகம், சந்தோஷ் குமாரின் மிரட்டலான அரைசதம், எஸ்.ஆர்.ஆதீஸ்-ன் முதலாவது அரைசதம் என ஸ்கோர் எகிறியது. பின் இவர்கள் ஆட்டமிழக்க, நெல்லை அணி தனது வலுவான பேட்டிங்கால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தோல்வி குறித்து பேசிய பி.ஐயப்பன் `இந்தாண்டு ஆறு தோல்விகளை அடைந்து விட்டோம் இனி அடுத்த சீசனில் கடுமையாக உழைத்து மீண்டு வருவோம்’ என கூறினார். இதில் அரைசதம் அடித்த எஸ்.ஆர்.ஆதீஸ் ‘ஆட்ட நாயகன்’ விருது பெற்றார்.