சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மழை குறுக்கிட்ட ஒரு பரபரப்பான இரவு. டிஎன்பிஎல் 2026 தொடரின் 22-வது லீக் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த திருச்சிக்கு தொடக்கமே அதிரடி தான். கே. ராஜ்குமார் – ஜே. சுரேஷ் குமார் பார்ட்னர்ஷிப் திண்டுக்கல் பந்துவீச்சை சிதறடித்தது. ராஜ்குமார் களத்தில் இருந்த நேரம் முழுவதும் திண்டுக்கல் பந்துவீச்சாளர்களுக்கு நிம்மதி இல்லை. ஒரு பக்கம் சுரேஷ் குமார் பவுண்டரிகளால் ஸ்கோரை நகர்த்த, மறுபக்கம் ராஜ்குமார் கிடைத்த பந்துகளை எல்லாம் எல்லைக்கோட்டுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்து வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்தனர். ராஜ்குமார் 42 பந்துகளில் 71 ரன்களும், சுரேஷ் குமார் 41 பந்துகளில் 60 ரன்களும் விளாசினர்.
மழையால் ஆட்டம் 19 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட நிலையிலும், திருச்சி தனது அதிரடியைக் குறைக்கவில்லை. சஞ்சய் யாதவ் 33 ரன்களும், ஜாபர் ஜமால் 21 ரன்களும் சேர்க்க, 19 ஓவர்களில் 197/4 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது திருச்சி.