110 விதியின் கீழ் அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் (கார்) வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் நேற்று (ஆகஸ்ட்.19) சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நிறைவேற்ற வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் எவ்வளவோ இருக்க, கடன் வாங்கி அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து (car) எதற்கு?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து வழங்கப்படும் எனவும், அதோடு தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் ஒரு இலட்சம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

மகிழுந்து இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் அரசு மகிழுந்து வழங்கினால்கூட அதில் ஒரு நியாயம் உண்டு. ஆனால், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் 190 சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஏற்கனவே சொந்தமாக மகிழுந்து உள்ளதாகத் தங்களின் வேட்புமனுவில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் நிலையில், புதிதாக இலவச மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன?
ஒரு மகிழுந்தின் விலை குறைந்தபட்சம் 30 இலட்சம் என்றாலும் 70 கோடி தேவைப்படுகிறது. அதைத்தவிர, மாதம் ஒரு இலட்சம் ரூபாய் 234 உறுப்பினர்களுக்கும் வழங்குவதால் மேலும் ஆண்டிற்கு 28 கோடி ரூபாய் தேவை. இதுபோக எரிபொருள், வாகனப் பழுது என ஆண்டிற்கு பல நூறு கோடிகள் தேவைப்படுகிறது. அவையெல்லாம் யாருடைய வரிப்பணம்? இதுதான் மக்கள் பணத்தைத் தொடாத, வீணடிக்காத செயலா?